பொதுச்சின்னம் கோரும் தவெக.. தேர்தல் ஆணையத்தில் மனு

Published On:

| By Pandeeswari Gurusamy

TVK petitions EC seeking public symbol

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பொதுச்சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு 6 மாதங்கள் உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு பொது சின்னம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ADVERTISEMENT

தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் கட்சிகள், பொது சின்னம் கோரி 6 மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த வகையில் பொதுச் சின்னம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தவெக மனு அளித்துள்ளது.

தவெகவின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், மாநில நிர்வாகிகள் புஷ்பவனம் குப்புசாமி, அர்ஜூன மூர்த்தி, விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்ட ஆணையர்களிடம் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

தவெக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு மாநிலக்கட்சி அந்தஸ்து பெறும் நடைமுறைகள் முடிவடைந்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. வரும் சட்ட மன்ற தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தவெக போட்டியிட உள்ளதால் பொதுச் சின்னம் உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதில் சாம்பியன் கோப்பை, விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட 10 விருப்ப சின்னங்களை பட்டியலிட்டு, அவற்றை படமாக வரைந்து கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் ஒரு மாதமாக அக்கட்சியின் செயல்பாடுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அழைத்து வந்து தனியார் ஓட்டலில் விஜய் சந்தித்ததை தொடர்ந்து அக்கட்சியினர் தற்போது தேர்தலை சந்திக்கும் வகையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share