விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடனான மோதல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
விசிக தலைவர் தொல். திருமாவளவனை கடுமையாக விமர்சித்தவர் ஏர்போர்ட் மூர்த்தி. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் விசிகவினர் புகார் கொடுத்தனர். இந்த விவகாரத்தில் டிஜிபி அலுவலகம் முன்பாக விசிக நிர்வாகிகள் மற்றும் ஏர்போர்ட் மூர்த்தி இடையே மோதல் நடந்தது. இதில் தங்களை ஏர்போர்ட் மூர்த்தி கத்தியால் தாக்கியதாக விசிகவினர் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் கடந்த வாரம் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து தற்போது ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இது தொடர்பான போலீசார், ஏர்போர்ட் மூர்த்தியின் குடும்பத்தினருக்கு அனுப்பிய அறிவிக்கையில், ” சென்னை நகரில் தொடர்ந்து குற்றங்களைப் புரிந்ததுடன் பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குண்டராக செயல்பட்டதால் இது போன்ற செயல்களில் மேலும் ஈடுபடுவதைத் தடுக்க, சென்னை பெருநகர காவல் ஆணையர் அவரை, தமிழ்நாடு சட்டம் 14/1982-ன் கீழ் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.