அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி ஒவ்வொரு கட்சியும் தீவிரமாக அரசியல் பணியாற்றி வருகின்றன. அதோடு ஒவ்வொரு கட்சியில் உள்ள உட்கட்சி பூசலும் உச்சத்தை எட்டி வருகின்றன.
அந்த வகையில் கடந்த 5ஆம் தேதி அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார் அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன். இந்த ஒருங்கிணைப்பு பணியை செய்ய செய்யாவிட்டால், அதை தானே எடுத்து செய்வேன் எனவும் கூறியிருந்தார்.
அவரது கருத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து கெடு விதித்த இரண்டே நாளில் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளை பறித்து உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
அதற்கு மறுநாள் ஹரித்வார் செல்வதாக கூறி டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே செங்கோட்டையனின் கருத்தை ஆதரித்து கருத்து தெரிவித்து வரும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தங்களது நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனின் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் தஞ்சாவூரிலிருந்து வைத்திலிங்கம் ஆதரவாளர்களும் இன்று கோபிச்செட்டிபாளத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டுக்கு சுமார் 200 வாகனங்களில் சென்றிருந்தனர்.
அவர்களை தனித்தனி குழுவாக சந்தித்த செங்கோட்டையன், அதிமுக ஒன்றிணைப்பது குறித்து நம்பிக்கையளிக்கும் வகையில் பேசினார்.
அவர், ”கவலைப்படாமல் அனைவரும் ஒற்றுமையாக இருங்கள். நமக்கு நல்ல கால பொறக்குது மக்களும் தொண்டர்களும் அதிமுக ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அனால் ஒரு குரூப் மட்டும் பிரிந்து இருக்கனும் என நினைக்கிறது. அது எல்லாம் சரி ஆயிடும். தீபாவளிக்குள் ஒன்றிணைந்திடுவோம். 2026 தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும். அதனால் ஒருவருக்கொருவர் பிரச்சனையின்றி ஒற்றுமையாக இருங்கள்” என அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளார் செங்கோட்டையன்
இதற்கிடையே அதிமுகவை ஒன்றிணைக்க கோரி எடப்பாடிக்கு விதித்த கெடு இன்னும் 2 நாட்களில் முடிவடைய உள்ளது. இதுவரை அது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் எடப்பாடி எடுக்காத நிலையில், செங்கோட்டையனின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது அக்கட்சியினர் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.