குட் டே – விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

Good Day Movie Review 2025

குடியும் குடி சார்ந்த வாழ்வும்.. Good Day Movie Review 2025

தமிழில் மது போதை சார்ந்து ‘மதுபானக்கடை’, ’90 எம் எல்’, ‘வ குவார்ட்டர் கட்டிங்’, ‘லோக்கல் சரக்கு’ என்று மிகச்சில படங்களே வந்திருக்கின்றன. சமீபத்தில் வந்த ‘பாட்டல் ராதா’ அப்படி மதுவில் மூழ்கி வாழ்வைத் தொலைக்கிற ஒரு மனிதரைக் காட்டியது. ’அந்த வரிசையில் இன்னொன்றா’ என்ற கேள்வியை எழுப்பியது ’குட் டே’ பட ட்ரெய்லர்.

புதுமுகம் பிருத்விராஜ் ராமலிங்கம், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், காளி வெங்கட், போஸ் வெங்கட், பக்ஸ், வேல ராமமூர்த்தி, ஜீவா சுப்பிரமணியம், ஆர்.கே.விஜய் முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை என்.அரவிந்தன் இயக்கியிருக்கிறார்.

நடிகர் பகவதி பெருமாள் சமீபத்தில் தான் அளித்த பேட்டி ஒன்றில், ‘குட் டேன்னு ஒரு படம் நடிச்சிருக்கிறேன். அந்த படத்தைப் பாருங்க. என்ன பண்ணப் போகுதுன்னு..’ என்று தெரிவித்திருந்தார். Good Day Movie Review 2025

அவர் அப்படிக் குறிப்பிட்ட அளவுக்கு ஆகச்சிறப்பாக அமைந்திருக்கிறதா ‘குட் டே’?!

போதையில் ஒருநாள்..! Good Day Movie Review 2025

Good Day Movie Review 2025

‘குட் டே’ கதை என்பது நாம் அறியாத ஒன்றல்ல. தினமும் மது போதையில் திளைக்கிற நம்முடைய அல்லது நம்மைச் சார்ந்தவர்களுடைய அல்லது எதிர்ப்படுகிறவர்களுடைய வாழ்வனுபவங்களைப் பேசுகிற படமாக இது உள்ளது. Good Day Movie Review 2025

மனைவி, குழந்தைகளைப் பிரிந்து திருப்பூரில் ஒரு தனியார் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றுகிற, ஒரு சிறிய அறையில் தன்னைப் போலவே இருக்கிற சில மனிதர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நாயகன். Good Day Movie Review 2025

பணியிடத்தில் மேனேஜருடன் தகராறு, வீட்டில் மனைவியிடம் சண்டை, இதற்கிடையே தனது வாழ்க்கை கனவுகளைக் கலைத்த சில கடந்த கால நிகழ்வுகளின் நினைவுகள் என்று எல்லாமே ஒன்று சேர, மது போதையில் நாயகனின் மனம் ‘வெறி’ கொள்கிறது.

’எதையெல்லாம் செய்துவிடக் கூடாது’ என்று இதுநாள் வரை அவர் தவிர்த்தாரோ, அதையெல்லாம் செய்யத் துணிகிற நிலைக்கு அவரைக் கொண்டு வருகிறது.

அது அவரைத் தற்கொலை செய்யத் தூண்டுகிறது. அதன் தொடர்ச்சியாக, காவல்நிலையத்தில் போலீசாரிடம் அடி வாங்க வைக்கிறது. இன்னும் பல அனுபவங்கள்.

அவை அனைத்துமே மது அருந்தியதால் ஒருநாள் இரவில் அவர் பெறுபவை. அவற்றால் அவரது வாழ்வு முற்றிலுமாக சீர்குலைந்ததா என்பதைச் சொல்கிற ‘குட் டே’.

சுருக்கமாகச் சொன்னால், ‘போதையில் ஒருநாள்’ என்ற பெயரில் மதுப்பிரியர்கள் பலரும் இந்த படத்தில் வருகிற காட்சிகளோடு தங்களது வாழ்வனுபவங்களைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். அந்தளவுக்கு ‘குடியும் குடி சார்ந்த வாழ்வுமாக’ உள்ளது இப்படம்.

படம் முழுக்க நாயகன் எதிர்கொள்கிற அவலங்களே நிறைந்திருக்கின்றன. ஆனால், அவற்றைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லி இறுதியில் நம்மை அழ வைத்திருக்கிறார் இயக்குனர் என்.அரவிந்தன். Good Day Movie Review 2025

அதுவே, இப்படத்தை இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்று எனக் கொண்டாட வைக்கிறது. Good Day Movie Review 2025

ஆஹா.. அடடா..! Good Day Movie Review 2025

Good Day Movie Review 2025

தயாரிப்பாளரும் நாயகனுமான பிருத்விராஜ் ராமலிங்கம் இதில் அறிமுகம் ஆகியிருக்கிறார். அவரது முகமோ, உடல்மொழியோ, வசீகரமான நாயகர்களைப் போன்று இல்லை. ஆனால், ஒரு ‘கதை நாயகனாக’ திரையில் மிளிர்வார் என்ற நம்பிக்கையை அளித்திருக்கிறது இப்படத்தில் அவரது பெர்பார்மன்ஸ்.

மலையாளத் திரையுலகில் ஒரு திரைப்படத்தில் நாயகனாக அல்லது பிரதான பாத்திரம் ஏற்ற நடிகர், நடிகைகள் இன்னொரு படைப்பில் ஓரிரு காட்சிகளில் தலை காட்டியிருப்பார்கள். ஆனால், மிகச்சில நிமிடங்களே வந்தாலும் முத்திரை பதிக்கிற வகையில் அவர்களது பங்களிப்பு இருக்கும்.

அதனைக் காண்கையில், தமிழிலும் இப்படி நடிக்கக் கலைஞர்கள் முன்வந்தால் எப்படியிருக்கும் என்று தோன்றியதுண்டு. அதனைச் செய்து காட்டியிருக்கிறது இப்படம்.

மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள், போஸ் வெங்கட், ஆர்.கே.விஜய் முருகன், காளி வெங்கட், வேல.ராமமூர்த்தி, ஜீவா சுப்பிரமணியம் ஆகியோர் அவ்வாறு இதில் வந்து போயிருக்கின்றனர். அவர்களது இருப்பு ‘ஆஹா.. அடடா.. அற்புதம்’ என்று கொண்டாடுகிற வகையில் இருக்கிறது.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் வாழ்வனுபவங்களைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக, டைட்டிலின் தொடக்கத்தில் குறிப்பிடப்படுகிறது.

இப்படத்தின் பாடல்களையும் கூடுதல் வசனங்களையும் அவரே அமைத்திருக்கிறார். பிருத்விராஜ் ராமலிங்கத்தோடு ஒரு காட்சியிலும் தோன்றியிருக்கிறார்.

அக்காட்சியில் அவரது நடிப்பு நம்மைச் சிரிக்க வைப்பதுடன், மது போதைக்கு அடிமையாகிற எவரும் எந்த காரியத்தையும் செய்யத் தயாராவார்கள் என்பதை உணர்த்துவதாக உள்ளது.

பிருத்விராஜ் ராமலிங்கம் எழுதிய கதைக்கு, பூர்ணா ஜேஎஸ் மைக்கேல் திரைக்கதை வசனம் அமைத்திருக்கிறார். திரைக்கதையில் அவர் காட்டியிருக்கிற ‘டீட்டெய்லிங்’ அபாரம்.

Good Day Movie Review 2025

ஒருநாள் இரவில் நடக்கிற காட்சிகள் அதிகமும் நிறைந்திருக்கிற இத்திரைக்கதை, இக்கதைக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ‘கொலேட்டரேல்’ எனும் ஆங்கிலப் படத்தை நினைவூட்டியது. டாம் க்ரூஸ் வில்லனாக நடித்த அப்படத்திலும் முன்பாதியில் துளியளவு சொல்லப்படுகிற விஷயங்கள் பின்பாதியில் மலையளவு உயர்ந்து நிற்கும்.

போலவே, மிக யதார்த்தமான வசனங்கள் வழியே நம்மை ஈர்க்கிறார் பூர்ணா ஜேஎஸ் மைக்கேல். ‘போதையில இல்லேன்னா நான் உங்களை விட அதிகமா அட்வைஸ் பண்ணுவேன் சார்’ என்று போஸ் வெங்கட்டிடம் பிருத்விராஜ் சொல்கிற வசனம் அதற்கொரு உதாரணம்.

ஒளிப்பதிவாளராகவும் படத்தொகுப்பாளராகவும் நம்மை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் மதன் குணதேவ்.

ஒரு படத்தொகுப்பாளருக்கு உரிய தெளிவுடன் அவர் ஒளிப்பதிவைக் கையாண்டிருப்பதால், ஒரு காட்சியில் வெரைட்டியாக பல ஷாட்கள் இதில் இருக்கின்றன. காட்சியின் பரபரப்பைக் கடத்துவதில் எந்தவிதப் பிசகுகளும் இல்லாமலிருக்க அவரது பங்களிப்பு உதவியிருக்கிறது.

கலை இயக்குனர் சங்கர் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு, இயக்குனரின் எண்ணவோட்டத்திற்குத் துணை நின்றிருக்கிறது.

இப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ஆக இருப்பது கோவிந்த் வசந்தாவின் இசை.

அவமானகரமான, சோகமான தருணங்களைக் கொண்ட காட்சிகளில் நகைச்சுவையும் கொண்டாட்டமும் புகுந்து கொள்வதை அடிக்கோடிட்டுக் காட்ட உதவுகிறது அவரது பின்னணி இசை.

அம்புலியே ஆராரோ, மின்மினியே ராசாத்தி பாடல்கள் கண்ணீர் காணாத கண்களிலும் ஈரக்கசிவை ஏற்படுத்துபவை.

Good Day Movie Review 2025

அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிப்புக் கலைஞர்களை ஒருங்கிணைத்து, இப்படம் தருகிற திரையனுபவம் ஆகச்சிறப்பாக அமையக் காரணமாகியிருக்கிறது இயக்குனர் என்.அரவிந்தனின் காட்சியாக்கம். அந்த வகையில், ஒரு ‘டீம் ஒர்க்’ ஆக நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது ‘குட் டே’.

சரி, இந்தப் படத்தில் குறைகளே இல்லையா என்ற கேள்வி எழலாம். இதனைக் காண்கையில், ‘அடுத்து என்ன நடக்கும்’ என்கிற கேள்வியின் ஊடே அவை பற்றிய சிந்தனை வரவில்லை என்பதே உண்மை. திரைக்கதை ட்ரீட்மெண்டில் ‘யதார்த்தம்’ தெறிக்கிற ஒரு படைப்பில் அதனை உருவாக்குவது சாதாரண விஷயமல்ல.

அனைத்துக்கும் மேலே, ‘ஏன் இப்படி குடிச்சிட்டு திரியுறாங்க’ என்று கேள்வி கேட்பவர்களும், ‘குடிக்காம இருக்க முடியுமான்னு தெரியலை’ என்று மனதுக்குள்ளும் வெளியிலும் புலம்புகிற ‘குடி’மகன்களும், தங்கள் எதிரே இருப்பவர்கள் பற்றி அறிவதென்பது அபூர்வமாகவே நிகழ்ந்திருக்கிறது. அதனை நிகழ்த்த முயன்றிருப்பதே ’குட் டே’வின் வெற்றி. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்..! Good Day Movie Review 2025

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share