ADVERTISEMENT

நாகையில் விஜய்… கூட்டத்தில் 4 பவுன் நகையை பறிகொடுத்த பெண் கதறல்!

Published On:

| By christopher

gold chain snatching at tvkvijay campaign at nagai

நாகையில் விஜய்யின் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக வந்த பெண்மணியிடம் இருந்து 4 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த வாரம் திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து இன்று நாகையில் பிரச்சாரம் மேற்கொண்டார். திருச்சிக்கு தனி விமானம் மூலம் வந்திறங்கிய அவர் அதன்பின்னர் நாகைக்கு கார் மூலம் பயணம் செய்தார். சில மணி நேரத்தில் திருவாரூர் அம்மையப்பன் பகுதிக்கு வந்த அவர், அங்கு தயாராக இருந்த தனது பிரச்சார வாகனத்தில் ஏறி நாகை நோக்கி புறப்பட்டார். அப்போது வழிநெடுக நின்றபடி தொண்டர்களும், ரசிகர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

அந்த வகையில் விஜய்யின் பிரச்சாரத்தைக் காண நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர் பகுதியைச் சேர்ந்த சுமதி என்ற பெண் தனது மகள் மற்றும் மகளுடன் அண்ணா சிலைக்கு அருகில் நின்றிருந்தார்.

ADVERTISEMENT

ஆனால் அங்கு திரண்டிருந்த கூட்டத்தில் அவர் அணிந்திருந்த 4 பவுன் நகை திருடு போனதை அறிந்து அங்கேயே கதறி அழத் தொடங்கினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “என் பையன் விஜய்யின் தீவிர ரசிகர். ஆனால் அவரால் வர முடியவில்லை. எனினும் ஒரு மாத விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த எனது கணவரையும் அழைத்துக்கொண்டு நானும் என் மகளும் இங்கே வந்திருந்தோம்.

ADVERTISEMENT

நாங்கள் இருந்த இடத்தில் 5 வடமாநில இளைஞர்கள் நின்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களை கண்டதும் எனக்கு பயமாக இருந்தது. உடனே நான் நகையை கழட்டி என் மகளின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருக்க கூறினேன். ஆனால் கூட்ட நெருக்கடியில் அவர்கள் என் நகையை திருடிவிட்டார்கள். எடுத்தவனை பிடித்தாலும், அங்கிருந்த இன்னொருவனிடம் அவன் மாற்றி கொடுத்துவிட்டு… நான் எடுக்கவில்லை என நடிக்கிறான். என் மகளுக்காக கஷ்டப்பட்டு சேர்த்த தங்கம் அது. எப்படியாவது அதை வாங்கி கொடுங்கள்” என கண்கலங்கியபடி வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கிடையே செயினை திருடியதாக கூறிய வட மாநில இளைஞரை தவெக தொண்டர்கள் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share