பிரபல யூடியூபர் இர்ஃபான் தனக்கு பிறக்குப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சுகாதாரத் துறை பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
Irfan’s View என்கிற யூடியூப் சேனல் மூலம் தமிழ்நாட்டு உணவுப் பிரியர்கள் மட்டுமின்றி பலருக்கும் பரிட்சயமானவர் இர்ஃபான். இந்த சேனலை மொத்தம் 42 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின் தொடர்கிறார்கள்.
இதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்கள் வாயிலாகவும் 60 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.
பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அங்கு பிரபலமான உணவை சுவைத்து பார்த்து ரிவியூ சொல்வது, திரைபிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை பலரை பேட்டி எடுப்பது என 2400க்கும் அதிகமான வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
இவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. ஆல்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமண நிகழ்ச்சிக்காக இர்ஃபான் குடும்பத்துடன் நேரில் சென்று ஆளுநர் ரவி, நடிகர் கமல்ஹாசன் ஆகியோரை அழைத்திருந்தார். அப்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இவரது ஹல்தி விழாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு யூடியூப் சேனல்களை சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
பிரம்மாண்டமாக நடந்த திருமணத்தை தொடர்ந்து இருவரும் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடினர். துபாய், சீனா என வெளிநாடுகளுக்கும் சென்று வந்தனர்.
திருமணத்துக்கு பிறகு மறுவீட்டிற்காக மணப்பெண் வீட்டிற்கு சென்று விட்டு சென்னை திரும்பிய போது இர்ஃபான் கார் மறைமலை நகர் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அப்போது இந்த சம்பவம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.
இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் இர்ஃபான். அதில், Boy or Girl என எழுதியிருந்த பலூனை வெடித்து தனது மனைவி கர்ப்பமாக இருந்ததை அறிவித்தார்.
இந்த நிலையில், நேற்று (மே 20) தங்களது குழந்தையின் பாலினத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் பிறக்கப்போகும் குழந்தைகளின் பாலினத்தை வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது. பாலினத் தேர்வுத் தடைச் சட்டம் 1994இல் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தை மீறி இந்தியாவில் பிறக்கபோகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவிக்கப்பட்டால், அபராதம் அல்லது 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்நிலையில், துபாய் சென்ற இர்ஃபான் – ஆலியா தம்பதியினர் அங்குள்ள மருத்துவமனையில் ஸ்கேன் செய்து தங்களுக்கு பிறக்க போகும் பாலினம் குறித்து தெரிந்துகொண்டனர்.
அதை பார்ட்டியாக வைத்து குடும்பத்தினர், நண்பர்கள் மத்தியில் இர்ஃபான் அறிவித்தார். அதற்கும் ஒரு பலூன் சுடும் விளையாட்டு வைத்து, அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்தியாவில் பாலினத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இர்ஃபான் வெளியிட்டது தவறு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், இர்ஃபானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாகவும், காவல்துறையிலும் புகார் கொடுக்கப்படவுள்ள உள்ளதாகவும் சுகாதாரத் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இர்ஃபான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா