ADVERTISEMENT

அதிமுகவுக்குப் பெண்கள் மீது வக்கிரம் – சி.வி.சண்முகம் பேச்சுக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலடி

Published On:

| By Pandeeswari Gurusamy

Geetha Jeevan condemns CV Shanmugam's speech

சிவி சண்முகம் ஓர் அரசியல்வாதியாக அல்ல. அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் என அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட இலவசமாக வழங்குவார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பலதரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒப்பிட்டு, அருவருக்கத்தக்க கருத்தை வெளியிட்டிருக்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், ”தேர்தலுக்குப் பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட இலவசமாக வழங்குவார்கள்” என மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார்.
திராவிட மாடல் அரசு மக்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக மகளிர் முன்னேற்றத்திற்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சொந்தக் காலில் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள மகளிர் விடியல் பயணம் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப் பெண் திட்டம், பணிபுரியும் மகளிர்க்கு தோழி விடுதிகள் திட்டம், சுய உதவி குழு மகளிருக்கு கடன் வரம்பை அதிகரிக்கும் திட்டம், மகளிரை தொழில் முனைவோர் ஆக்கும் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி, பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறது.

சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா?

“பொண்டாட்டிகளையும் இலவசமாகத் தருவார்கள்” எனப் பெண்களை இலவசத்தோடு ஒப்பிட்டுக் கொச்சைப்படுத்தியிருக்கிறார் சி.வி.சண்முகம். அதிமுகவுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது. ஓர் அரசியல்வாதியாக அல்ல. அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம்.

ADVERTISEMENT

ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? அவரை இருக்கும் இடம் தெரியாமல் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. ஆளுமை இல்லாத எடப்பாடி பழனிசாமி ஒரு கண்டிப்பைக்கூடச் செய்யவில்லை. பழனிசாமி வீட்டிலும் பெண்கள் இருக்கத்தானே செய்வார்கள். அவர்களுக்கும் சேர்த்துத்தானே சேற்றை வாரி வீசியிருக்கிறார் சி.வி.சண்முகம். ஒருவர் அடிமையாய் மாறிவிட்டால், அவரிடம் ஆளுமையும் சூடு சொரணையும் எப்படி இருக்கும்? உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாம் உங்களைப் பார்த்து என்ன நினைப்பார்கள்?

பெண்கள் பயணம் செய்யும் மகளிர் விடியல் பயணப் பேருந்துகளை லிப் ஸ்டிக் பூசிய பேருந்துகள் எனக் கேவலமாகப் பேசியவர்தானே எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் தொகையைப் பிச்சை போடுவதாகச் சொல்லி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களை நடிகை குஷ்பு கொஞ்ச நாட்கள் முன்பு இழிவுபடுத்தினார். பாமகவின் சவுமியா அன்புமணி, ” உங்க 1000 ரூபாய் யாருக்கு வேணும்?’’ எனக் கேவலமாகப் பேசினார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனோ அரசு வழங்கும் நிவாரணத் தொகையைக் கேலி செய்தார்.

“வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் ரூ.500, 1000 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது. எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை” என்று சொன்னார். இவர்களின் குணமும் நிறமும் ஒன்றுதான். இவர்கள் ஒன்றாகக் கூட்டணி சேர்ந்து திமுகவை எதிர்க்கவில்லை. ஒட்டுமொத்தப் பெண்களையே அழிக்கக் கைகோர்த்திருக்கிறார்கள்.

‘பொண்டாட்டி இலவசம்’

முதல்வர் ஸடாலின் பெண்களுக்காகப் பார்த்துப் பார்த்து செயல்படுத்திவரும் மகத்தான திட்டங்களால் பெண்களிடம் அசைக்க முடியாத செல்வாக்கைப் பெற்றிருக்கிறார். அது அதிமுக கூட்டணிக் கட்சிகளின் அடிவயிற்றைப் பிசைந்து கொண்டிருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் போன்ற பொருளாதாரத் தன்னிறைவு திட்டங்களால் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். அது அதிமுகவுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் பெண் இனத்தைக் குறிக்கும் வகையில் ‘பொண்டாட்டி இலவசம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களால் தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் உயர்ந்துள்ளது, கல்வியில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது, இடைநிற்றல் குறைந்துள்ளது. தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது, என்று பல ஆய்வுகள் வந்து கொண்டே இருக்கின்றன.

பெண்களுக்கான திட்டங்களில் முன்னோடி

பெரியார், அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் பெண்களின் முன்னேற்றத்துக்காக முதலமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் பெண்களுக்காக நடைமுறையிலிருக்கும் திட்டங்கள் இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் இருப்பதைவிடவும் முன்னோடியானவை, அதனால்தான் இப்போது இந்தியாவில் பல மாநிலங்களில் மகளிருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மத்தியப் பிரதேசத்தில் ‘லட்லி பெஹ்னா யோஜனா’ எனவும் கர்நாடகத்தில் ‘கிரகலட்சுமி’ என்ற பெயரிலும் மகாராஷ்டிராவில் ‘முதலமைச்சரின் அன்பு சகோதரி’ என்ற பெயரிலும் ஒடிசாவில் ‘சுபத்ரா யோஜனா’ என்ற பெயரிலும் மேற்கு வங்காளத்தில் ‘லட்சுமி பந்தர்’ எனவும் ஜார்கண்ட்டில் ‘மைய சம்மன் யோஜனா’ எனவும் இமாச்சல பிரதேசத்தில் ‘இந்திரா காந்தி பியாரி’ எனவும் சத்தீஸ்கரில் ‘மஹ்தாரி வந்தன் யோஜனா’ எனவும் சிக்கிமில் ‘சிக்கிம் ஆமா யோஜனா’ எனவும் புதுச்சேரியில் ‘மகளிர் உதவித்தொகை’ எனவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்களை அவதூறாகப் பேசிய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த வரலாறு நிறைய உண்டு. பெண்களை இழிவுபடுத்தி வரும் அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தக்கப் பதிலடிக் கொடுத்து பாடம் புகட்டுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share