சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி. அவரது கணவர் சம்பத் இந்திய கப்பல் படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அதன் பின்னர் ரேவதி பெயரில் செங்குன்றம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று பகுதிகளில் 2006ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி மொத்தம் 83 சென்ட் வாங்கினர்.

இத்தம்பதியருக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒருவர் அமெரிக்காவிலும், மற்றொருவர் கனடாவிலும் வசித்து வருகின்றனர். இதனால் அடிக்கடி அவர்களை பார்க்க பெற்றோர் இருவரும் சென்று வருவதுண்டு.
வெளிநாட்டுக்கு சென்று ஊருக்கு திரும்பியதும், தங்கள் பெயரில் தான் சொத்துகள் உள்ளதா என்பதை ஆன்லைன் மூலமாகவும், பின்னர் நேரடியாகவும் சென்று சரிபார்த்து கொள்வார்கள்.
அப்படி கடந்த ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், ஆன்லைனில் சரிபார்க்கும்போது தன்னுயை இடம் வெறொருவர் பெயருக்கு மாறியுள்ளது என்பதை அறிந்து ரேவதி பெரும் அதிர்ச்சியடைந்தார்.
நில உரிமைக்கான ஒரிஜினல் பத்திரங்கள் தங்களிடம் இருக்கும்போது எப்படி வேறொருவர் பெயருக்கு மாறியது என்பதை காஞ்சிபுரம் பத்திரப்பதிவு துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர்.
அப்போது தான் தன்னைப் போன்றே ரேவதி என்ற பெண்ணை ஆள்மாறாட்டம் செய்து போலி பான்கார்டு, போலி ஆதார் கார்டு தயார் செய்து அதன் மூலமாக 3 சொத்துகளையும் காஞ்சிபுரம் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து பத்திரப்பதிவு செய்தது தெரியவந்தது.
இந்த நில மோசடி குறித்து ரேவதி – சம்பத் தம்பதி காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி மாவட்ட குற்றப்பிரிவுக்கு (டிசிபி) அனுப்பி வைக்கப்பட்டு வழக்குபதிவு செய்யப்பட்டது. குற்ற எண் 3/2025 பிஎன்எஸ் பிரிவு 319, 336, 338, 340, 318, 3(5) 2023 ஆகிய 6 பிரிவுகளின் கீழ் திருவள்ளூர் புழல் பகுதியை சேர்ந்த யுவராஜ், ஆள்மாறட்டம் செய்த ரேவதி, பச்சமுத்து, தமிழ்வாணன், சுவாமிநாதன், விவேக் கோவிந்தராஜ் ஆகியோருடன் சார் பதிவாளரும் கூட்டு சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து இடத்தை அபகரித்துள்ளனர். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, சொத்துகளை மீட்டுத் தரும்படி கோரியிருந்தார்.

இதில் ஒருவர் ஜாமினில் வெளியே வந்துவிட்ட நிலையில், சார் பதிவாளர் சம்பத் குமார் முன் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி நிர்மல் குமார் போலீஸ் தரப்பில் விளக்கம் கேட்டார். அதற்கு காஞ்சிபுரம் டிசிபி போலீசார் கொடுத்த தகவலின்படி ஆஜரான அரசு வழக்கறிஞர், ’பதிவாளர் சம்பத் குமார் பெயர் இந்த வழக்கில் இல்லை’ என்று தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி, ”வழக்கில் பெயரே இல்லாதபோது, எதற்கு உங்களுக்கு முன் ஜாமீன்?” எனக் கூறி அவரது மனுவை கடந்த மே 15ஆம் தேதி தள்ளுபடி செய்தார்.

இந்த வழக்கில் நில மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக காஞ்சிபுரம் ராஜகுலத்தை சேர்ந்த தயாளன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது ஜாமீன் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தான் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல், இருதரப்பு வாதத்தையும் கேட்டு, இந்த வழக்கில் பி.என்.எஸ் சட்டத்தில் குறிப்பிட்ட பிரிவுகள் இருப்பதை சுட்டிக்காட்டி, ”இணை குற்றவாளியான பதிவாளரின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது. புகார்தாரரான ரேவதியும், கூட்டு சதி செய்ததில் பதிவாளர் இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். அப்படியிருக்கும்போது, அவர் மீது வழக்கு இல்லை என எப்படி உயர்நீதிமன்றத்தில் தவறான தகவலை கொடுப்பீர்கள்?” என்று காஞ்சிபுரம் டிசிபி போலீசாரை கண்டித்தார்.
தொடர்ந்து பதிவாளர் சம்பத்தை ஏன் கைது செய்யவில்லை? இருப்பவர்களுக்கு ஒரு சட்டம், இல்லாதவர்க்கு ஒரு சட்டமா எனக் காட்டமாக கேட்டதுடன், தயாளன் ஜாமீன் மனுவையும் டிஸ்மிஸ் செய்தார்.
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பதிவாளர் சம்பத்குமார் தப்பித்து வந்த நிலையில், காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி கிடுக்குப்பிடி போட்டதால், காவல்துறைக்கு பெரும் சிக்கலும், பதிவாளருக்கு கடும் நெருக்கடியும் உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் வழக்கறிஞர் கூறுகையில், ‘ஆள்மாறாட்டம், போலி ஆவணங்களை தயாரித்து, சொத்துகளை அபகரிக்கும் நோக்கத்தில் உண்மையான ஆவணங்கள் இல்லாமல் நிலம் கைமாறியதற்கு பத்திர பதிவுத்துறை பதிவாளர் சம்பத் குமாரும் உடந்தையாக இருந்துள்ளார். இப்படி புகாரில் குறிப்பிடுள்ளதை எஃப். ஐ.ஆரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உயர்நீதிமன்றத்தில் பதிவாளர் பெயரை இணைக்கவில்லை என்று தவறான தகவல் சமர்பித்துள்ளனர் காஞ்சிபுரம் டிசிபி போலீஸார்” என வேதனை தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் கண்டனம் குறித்து கேள்விப்பட்ட வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், காஞ்சிபுரம் எஸ்பி சண்முகத்தை தொடர்பு கொண்டு, ”உங்களுக்கு கீழுள்ள டிசிபியில் என்ன நடக்கிறது? சார் பதிவாளரை வழக்கில் குற்றவாளியாக இணைக்கப்பட்டு, அவரை காப்பாற்ற உயர்நீதிமன்றத்தில் தவறான தகவலை கொடுத்திருக்கிறர்கள். இது உங்களுக்கு தெரியாதா? தவறு யார் செய்தாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சார் பதிவாளர் சம்பத்குமாரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுங்கள்” என்று கறாராக உத்தரவிட்டுள்ளார்.