கவிதா முரளிதரன்
திரு தொல். திருமாவளவன் அவர்கள் தமிழ்நாட்டின் தலித் உரிமைகளுக்குப் போராடும் இயக்கத்தில் ஒரு முக்கிய ஆளுமையாகவும், எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தலைவராகவும் மாறுவதற்கு முன்பு, தமிழ்நாடு அரசின் தடய அறிவியல் துறையில் அறிவியல் அதிகாரியாகப் பணியாற்றினார். 1990களின் முற்பகுதியில், சாதி இந்துத் தலைவர் ஒருவரைக் கொல்ல சதி செய்ததாகக் கூறப்பட்ட ஒரு அரசியல் செயற்பாட்டாளரைக் காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு துண்டுக் காகிதத்தில் திருமாவளவன் பெயரைக் காவல்துறைக் கண்டுபிடித்தபோதுதான் திருமாவளவன் என்ற பெயர் முதன்முதலில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. From 1999 to now : How the vck set strong foothold in Tamil Nadu politics
மாவோயிஸ்ட் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் திருமாவளவன் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அது பொதுமக்களின் எதிர்ப்பைக் கிளர்ந்தெழச் செய்தது . “இந்த காலகட்டத்தில்தான் ‘திருமாவளவன் யார்?’ என்று செய்தித்தாள்களில் தலைப்புச் செய்திகள் வெளியாயின ” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு நினைவு கூர்கிறார். இந்த நிகழ்வு அவரைப் பரந்த அளவில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியது, அவர் அரசியல் செயல்பாட்டாளராக மாறுவதற்கான தொடக்கமாகவும் அமைந்தது. அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், திருமாவளவன் தலித் அணிதிரட்டலில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்தார், இறுதியில் விசிக என்ற கட்சியை நிறுவினார். அதன் பின்னர் அந்தக் கட்சி தமிழக அரசியல் களத்தில் ஒரு அங்கமாக மாறியது.

விசிகவை தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததையும், அதற்கெனப் ‘பானை’ சின்னம் நிரந்தரமாக ஒதுக்கப்பட்டதையும் கொண்டாடும் வகையில் 2025 மார்ச் 16 அன்று, விழுப்புரத்தில் விசிக வெற்றிவிழாக் கூட்டம் ஒன்றை நடத்தியது. தேர்தல் ஆணையத்தின் இந்த அங்கீகாரமானது, தமிழ்நாட்டில் நீண்டகாலமாகக் கோலோச்சும் அதிகார அமைப்புகளுக்குச் சவால் விடுத்துப், பல பத்தாண்டுகளாக, வேர்க்கால் மட்டத்தில் மக்களை அணிதிரட்டிய, தேர்தல் களத்தில் தனது செல்வாக்கைத் தொடர்ந்து உணரச்செய்த ஒரு கட்சிக்கு ஒரு வரலாற்றுத் தருணமாக அமைந்துள்ளது.
“தமிழ்நாட்டின் 72 ஆண்டுகால தேர்தல் அரசியலில், ஒரு தலித் தலைவரால் நிறுவப்பட்ட ஒரு அரசியல் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படுவது இதுவே முதல் முறை” என்று விசிகவின் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கூறினார். “இது வெறும் சாதனை மட்டுமல்ல, வரலாற்றில் ஒரு மகத்தான அத்தியாயம், இது தொல். திருமாவளவன் மற்றும் அவருக்கு ஆதரவாக நின்ற மக்களின் 25 ஆண்டுகால அயராத போராட்டம் மற்றும் தியாகத்திலிருந்து பிறந்தது” என்றார்.
2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்தத் தேர்தலில் விசிக இரண்டு முக்கிய இடங்களை – சிதம்பரம் மற்றும் விழுப்புரம் – சுயேச்சை சின்னமான “பானை” சின்னத்தில் போட்டியிட்டு வென்றது. “25 ஆண்டுகால தொடர்ச்சியான போராட்டத்திற்குப் பிறகு, விசிக இறுதியாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு இடங்களை வென்றுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்திடமிருந்து அதிகாரப்பூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது” என்று ரவிக்குமார் குறிப்பிட்டார். “இந்த சாதனை திமுக தலைமையிலான கூட்டணியின் வலிமையால் மட்டுமல்ல, தமிழ் சமூகம் இப்போது திருமாவளவனை மக்களின் தலைவராக ஏற்றுக்கொண்டதால் தான் நிகழ்ந்திருக்கிறது.”
விழுப்புரத்தில் நடந்த நிகழ்வில், ‘சாதியால் சிதைந்த சனநாயகம்- 1999 முதல் தேர்தல்: சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அனுபவங்கள்’ என்ற முக்கியமான புத்தகம் வெளியிடப்பட்டது.

ரவிக்குமார் கடின உழைப்பால் தகவல்களைத் திரட்டி எழுதியுள்ள இந்த நூல், 1999 ஆம் ஆண்டு தேர்தல் நிகழ்வுகளுக்கு ஒரு விரிவானப் பின்னணியை வழங்குகிறது. இது சிதம்பரம் தொகுதியில் வரலாற்று ரீதியாக தலித்துகள் அனுபவித்தக் கடுமையான வன்முறையை, ஒடுக்குமுறையை விவரிக்கிறது. தலித் தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டதை, அவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் இருந்து தடுக்கப்பட்டதை, பொது சாலைகளில் நடக்கத் தடை செய்யப்பட்டதை, கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கக்கூட முடியாமல் தடை விதிக்கப்பட்டதையும்; சிதம்பரம் பகுதியில் நிலவிய தலித் மக்களுக்கு எதிரான சமூகப் புறக்கணிப்பையும், அவர்கள் ஓரங்கட்டப்பட்டதையும் இந்த நூல் விளக்குகிறது. குறி வைத்து ஏவப்பட்ட வன்முறையும், வாக்காளர்கள் மீதான அடக்குமுறையும் நியாயமற்ற தேர்தல் சூழலுக்குப் பின்னணியாக இருந்தன. 1999 தேர்தல் களம் இந்தச் சூழலால் வடிவமைக்கப்பட்டிருந்தது.
“சிதம்பரம் பகுதியில் நிகழ்த்தப்பட்ட வன்முறை சாதிய சக்திகள் எவ்வாறு ஜனநாயக உரிமைகளை நசுக்க முயன்றன என்பதை நினைவூட்டுகிற அதே வேளையில், அது மக்களும் அவர்களுக்கான இயக்கமும் எப்படி மீண்டெழுவார்கள் என்பதையும் நிரூபிப்பதாக உள்ளது” என்று ரவிக்குமார் கூறுகிறார்.
2009 ஆம் ஆண்டில், விசிக “நட்சத்திரம்” சின்னத்தின் கீழ் சிதம்பரத்தில் தனது முதல் நாடாளுமன்ற வெற்றியைப் பெற்றது. இருப்பினும், இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை மாநிலக் கட்சி என்னும் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு உதவவில்லை. 2024 பொதுத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் விசிக தனிச் சின்னமான “பானை” சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகுதான், 1968 ஆம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் உரிமையளித்தல்) உத்தரவின் விதி 6A இன் கீழ் உள்ள நிபந்தனைகளை அந்தக் கட்சி நிறைவேற்றியது.

“இது வெறும் தேர்தல்களைப் பற்றியது மட்டுமல்ல,” “ஜனநாயகம் என்ற கருத்திலிருந்து எம்மை விலக்க முயற்சித்த சாதி அமைப்புக்கு எதிரான எமது நீண்ட போராட்டத்தைப் பற்றியது.” என்று ரவிக்குமார் கூறுகிறார்.
“அரசமைப்புச் சட்ட உத்தரவாதங்களும், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பெற்றுத் தந்த வாக்குரிமையும் இருந்தபோதிலும், சாதிய மற்றும் வகுப்புவாத சக்திகள் ஜனநாயக செயல்முறையைத் தொடர்ந்து அச்சுறுத்துகின்றன. சிதம்பரத்தில் நடந்த வன்முறை இந்த யதார்த்தத்திற்கு ஒரு தெளிவான சான்றாகும்,” என்று ரவிக்குமார் குறிப்பிடுகிறார்.
இந்தப் புத்தகம் – சிதம்பரத்தில் நடந்த தேர்தலானது வன்முறை, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல், வாக்காளர்களை மிரட்டுதல் ஆகியவற்றின் மூலம் தலித் பங்கேற்பைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன’ என்பதைக் காட்டுகிறது. ‘சாதி இந்துக்களால் ஆதிக்கம் செய்யப்படும் அரசியல் சக்திகள் சிதம்பரம் தொகுதியில் தங்கள் பிடியைத் தக்க வைத்துக் கொள்ள கூட்டுச் சேர்ந்து செயல்பட்டன’ என்று அந்த நூல் குறிப்பிடுகிறது. விசிக வேட்பாளர் சுதந்திரமாகப் பிரச்சாரம் செய்வதைத் தடுப்பது, தலித் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்வதைத் தடுப்பது மற்றும் வாக்குப்பதிவு நாளில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது ஆகியவை இந்த சதித்திட்டத்தில் அடங்கும்.

1999 பொதுத் தேர்தலில், திருமாவளவன் முதல் முறையாக சிதம்பரத்தில் போட்டியிட்டபோது, தலித் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமை பறிக்கப்படும் நிலைக்கு ஆளானார்கள் .
“இந்தியா தன்னை ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்று அழைத்துக் கொள்கிறது, தேர்தல்கள் அதன் அரசியல் அமைப்பின் அடித்தளமாக அமைந்துள்ளன. ஆயினும்கூட, சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான போராட்டம் – குறிப்பாக ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கு – தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று ரவிக்குமார் மேலும் கூறினார்.
இந்தப் புத்தகம், விசிகவின் போராட்டத்தின்போது தலித் மக்கள் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் கொடுத்த விலையை ஆவணப்படுத்தியுள்ளது. விசிக தொண்டர்களும் ஆதரவாளர்களும் எவ்வாறு போலீஸ் வழக்குகள், துன்புறுத்தல்கள் எனக் காவல்துறை வன்முறையை எதிர்கொண்டனர் என்பதை விவரிக்கிறது. வாக்காளர்களை வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துச் செல்லும்போது விசிக தொண்டர்கள் எவ்வாறு தாக்கப்பட்டனர் என்பதைப் புத்தகத்தின் ஒரு பகுதி குறிப்பாக விவரிக்கிறது. விசிக ஆதரவாளர்களின் வீடுகள் அவர்களின் அரசியல் சார்புக்குப் பழிவாங்கும் விதமாகத் தீக்கிரையாக்கப்பட்டன என்பதை இந்த நூல் விவரிக்கிறது. நிலையான சின்னம் இல்லாதது, தேர்தலின்போது வாக்காளர்கள் விசிகவின் பின்னால் அணிதிரள்வதை எவ்வாறு கடினமாக்கியது என்பதையும் இந்தப் புத்தகம் கவனத்தில் கொண்டுள்ளது. “தேர்தல் ஆணையம் விசிகவை ஒரு மாநிலக் கட்சியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. ‘பானை’ சின்னம் இப்போது எங்கள் நிரந்தர தேர்தல் சின்னமாக மாறிவிட்டது. இது எங்கள் நீண்ட பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்” என்று ரவிக்குமார் கூறுகிறார்.

“பானை” சின்னம் நிரந்தரமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது ஆழமான அர்த்தம் கொண்டதாகும். இது இதற்கு முந்தைய ஆண்டுகளில் நிலவிய உறுதியற்ற தன்மையிலிருந்து தீர்க்கமான விதத்தில் மாறுபட்டிருப்பதைக் குறிக்கிறது. விசிகவின் அடிமட்ட ஆதரவாளர்களின் விருப்பத்தை எதிரொலிக்கும் ஒரு நிலையான அரசியல் அடையாளத்தை அது வழங்குகிறது. விசிகவின் விசுவாசமான வாக்காளர்களுக்கு, “பானை” என்பது வெறும் வாக்குச்சீட்டில் உள்ள ஒரு சின்னம் மட்டுமல்ல – அது அவர்களின் போராட்டம், மீட்சி மற்றும் அரசியல் விழிப்புணர்வின் உருவகமாகும். “தேர்தல்களில் சில இடங்களை வெல்வது என்பது தலித் அல்லாத சமூகங்களின் நம்பிக்கையையும் மனதையும் வெல்வதை விடக் குறைவான சவால் கொண்டது. திருமாவளவன் இப்போது இந்தப் பெரிய சவாலில் வெற்றி பெற்றுள்ளார், அனைத்துத் தமிழ் சமூகத்திற்குமானத் தலைவர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 1999 இல் திருமாவளவன் தோற்கடிக்கப்பட்ட அதே சிதம்பரம் தொகுதியில், அவர் இப்போது மூன்றாவது முறையாக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது வெறும் தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கு ஒரு வரலாற்றுத் தருணம்” என்று ரவிக்குமார் குறிப்பிடுகிறார்.
“சிதம்பரத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் வீடுகளை இழந்து, உடமைகளை இழந்து, தாக்குதலுக்கு ஆளானபோதிலும் எங்கள் தலைவர் திருமாவளவன் தான் என உறுதியோடு நின்ற லட்சக் கணக்கான தலித் மக்களுக்கு இந்தத் தேர்தல் அங்கீகார வெற்றியைத் திருமாவளவன் அர்ப்பணிப்பதாகக் கூறினார். அது மிகவும் பொருத்தமானது. ” என்கிறார் ரவிக்குமார்.
“இந்தப் புத்தகம் ஒரு தேர்தலைப் பற்றியதோ, அதன் வெற்றியைப் பற்றியதோ மட்டுமல்ல, தேர்தல் ஜனநாயகத்தைப் பாதுகாக்க விசிக மற்றும் தலித் சமூகங்கள் கடந்து வந்த பல தடைகளையும் ஆவணப்படுத்தியிருக்கிறது,” என்று ரவிக்குமார் விளக்குகிறார். “இந்த புத்தகத்திற்காக சேகரிக்கப்பட்ட சாட்சியங்கள், ஆவணங்கள் மற்றும் மனுக்கள் ஒரு உண்மையை வெளிப்படுத்துகின்றன: அனைத்து குடிமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.”
‘சாதியால் சிதைந்த சனநாயகம்’ என்ற இந்தப் புத்தகம் , இன்னும் கடக்க வேண்டிய தடைகள் பற்றிய ஒரு கடுமையான எச்சரிக்கையாகவும், அனைவரையும் உள்ளடக்கிய சனநாயகத்திற்கான ஒரு அறிக்கையாகவும் செயல்படுகிறது.
தற்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாற்றத்தின் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது – இது வெறுமனே அந்தக் கட்சியின் முன்னேற்றத்தைக் குறிப்பது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் களத்தில் நிகழ்ந்த மாற்றத்தையும் குறிப்பதாகும்.
தமிழாக்கம் : ரவிக்குமார்
நன்றி – தி வயர் இணைய தளம்
கட்டுரையாளார் குறிப்பு :

கவிதா முரளிதரன் – பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத்தாளரான இவர், அரசியல், திரைப்படங்கள், கலாச்சாரம், மனித உரிமைகள் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் ஆகியவை குறித்து பல்வேறு தளங்களில் ஆழமான கருத்துகளுடன் பணியாற்றி வருகிறார்.