கோவையில் ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ஆதரவு தெரிவித்தார்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் இன்று (பிப்ரவரி 9) ஏழாவது நாளாக தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர். இரவு முழுவதும் அங்கேயே படுத்து உறங்கி சமையல் செய்து உணவருந்தி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
கோவையில் ஏழாவது நாளான இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி வைத்து மடிப்பிச்சை ஏந்தி தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்ததை தான் நாங்கள் கேட்கிறோம் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர்.
முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபடவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு அதிமுக ஆதரவாக இருக்கும் என என தெரிவித்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு பழங்களை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்பி வேலுமணி, தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் திமுக அரசு 2021 ஆம் ஆண்டு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை நாங்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாக கூறினார்.
திமுக கூறிய வாக்குறுதிகளை தான் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் கேட்கிறார்கள் . எனவே தமிழக அரசு இவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் மாவட்ட ஆட்சியரோ சம்பந்தப்பட்ட அமைச்சரோ பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தாமல் போராட்டத்தில் மேற்கொண்டு வருபவர்களை கண்டு கொள்ளாமல் விடுவது நியாயமில்லாத செயல் என தெரிவித்தார்.
