உடுமலை அருகே தோட்டத்து வேலியில் சிக்கிய சிறுத்தையை மயக்க மருந்து செலுத்தி பாதுகாப்பாக பிடித்த வனத்துறையினர் அடர் வனப்பகுதியில் விட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கொழுமம் பகுதியைச் சேர்ந்த விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த சங்கிலி இணைப்பு வேலியில் நேற்று காலை சிறுத்தை ஒன்று சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தது. இதைக்கண்ட விவசாயி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தை சிக்கி இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல தடை விதித்தனர்.
பின்னர் கோவை கால்நடை மருத்துவ அலுவலர் வெண்ணிலா மற்றும் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் மனோகரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர் .
சிறுத்தை மயக்க நிலையில் இருந்ததை உறுதிப்படுத்திய பின்னர் வேலியில் இருந்து விடுவித்து சிறுத்தையை பரிசோதித்த போது லேசான சிராய்ப்பு காயங்கள் மட்டும் இருந்தது. இதையடுத்து சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நள்ளிரவு குழுமம் அருகில் உள்ள ஆண்டிப்பட்டி ரிசர்வ் வனப்பகுதியில் கூண்டில் இருந்த சிறுத்தையை வனத்துறையினர் பாதுகாப்பாக விடுவித்தனர்.
