கட்டுக்கட்டாய் பணம்: நீதிபதி மீது எஃப்.ஐ.ஆர்.? உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Published On:

| By Aara

மார்ச் 14 அன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இல்லத்திலிருந்து பெரும் பணம் கைப்பற்ற விவகாரம் தொடர்ந்து பரபரப்பைக் கிளப்பி வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் உள்ளகக் குழு இதுகுறித்து விசாரித்துவரும் நிலையில், நீதிபதிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 28)  நிராகரித்தது.

இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவால் அமைக்கப்பட்ட ஒரு உள்ளகக் குழு ஏற்கனவே இந்த விஷயத்தை ஆராய்ந்து வருவதாகவும், அந்தக் குழு ஏதோ தவறு இருப்பதாக முடிவு செய்தால், சட்டம் அதன் போக்கில் செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதித்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்திவிட்டார் என்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்ய நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து  வழக்கறிஞர்கள் மேத்யூஸ் ஜே நெடும்பரா மற்றும் ஹேமாலி சுரேஷ் குர்னே ஆகியோர்  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். FIR Justice Yashwant Varma

இந்த மனு இன்று (மார்ச் 28) பிற்பகல் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரான வழக்கறிஞர் நெடும்பாரா,  “கேரளாவில் என்ன நடந்தது என்று பாருங்கள். ஒரு போக்சோ வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி மீது குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரை காவல்துறையால் எழுத முடியவில்லை. காவல்துறையால் மட்டுமே அதை விசாரிக்க முடியும். நீதிமன்றங்களால் அதை விசாரிக்க முடியாது.

மேலும்… நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில்  மார்ச் 14 அன்று நடந்த தீ விபத்து, அதன் பின் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக ஏன் FIR பதிவு செய்யப்படவில்லை?  ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை? ஏன் குற்றவியல் சட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை? என்றெல்லாம் சாமானிய மக்கள் தொடர்ந்து கேட்கிறார்கள். ஏன் ஒரு வாரம் வரை ஊழலை வெளியிடவில்லை என்றும் கேட்கிறார்கள்” என நெடும்பரா வாதிட்டார். FI R Justice Yashwant Varma

அப்போது நீதிபதிகள்,  “மனுவை நாங்கள் பார்த்தோம். நீங்கள் எழுப்பிய கேள்விகள் தொடர்பாக இப்போது உள்ளக விசாரணை நடந்து வருகிறது. இந்த கட்டத்தில் நாங்கள் தலையிட முடியாது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார்.  இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே உள்ளகக் குழு விசாரணை நடத்தி வருவதால், தற்போதைய மனுவை ஏற்க முடியாது.

உள்ளக விசாரணை அறிக்கைக்குப் பிறகு, ஏதாவது தவறு கண்டறியப்பட்டால், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய தலைமை நீதிபதி உத்தரவிடலாம் அல்லது விஷயத்தை நாடாளுமன்றத்திற்கு அனுப்பலாம்” என்று நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் நீதிபதி உஜ்ஜல் பூயான் ஆகியோர் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். FIR Justice Yashwant Varma

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share