உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து விஜயின் பரப்புரை வாகனத்தின் ஓட்டுநர் மீது கரூர் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் சாலை பிரச்சாரத்துக்கு நெறிமுறைகளை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தினேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை கடந்த 3ஆம் தேதி விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சியினரை கண்டித்து கடும் கேள்விகளை எழுப்பினார்.
குறிப்பாக விஜய்யின் கரூர் பிரச்சாரத்தின் இடித்து விட்டு ஓடியதாக அவரது பிரச்சார வாகனத்தின் மீது ஏன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.
அவர், ”தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தில், பின் தொடர்ந்து வந்த பைக் மோதிய காட்சிகள் வெளியானது. அந்த நிகழ்வை உலகமே பார்த்தது நானும் வீடியோவில் சில காட்சிகளை பார்த்தேன். இருசக்கர வாகனத்தின் மீது விஜய்யின் பரப்புரை வாகன மோதியது போன்று விஷயங்களில் புகார் வராவிட்டாலும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் இல்லை என்றால் மக்கள் உங்களை எப்படி நம்புவார்கள்?
பிரச்சார வாகனத்தில் இருந்த ஓட்டுநர் வெளியே எட்டிப் பார்த்ததும் உடனே பேருந்து நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும் ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை இது மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது வீடியோக்களை பார்க்கும் பொழுது மிகுந்த வருத்தத்தை ஏற்படுகிறது காவல்துறையினர் இது குறித்து உடனே விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?” என்று காவல்துறையிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து தற்போது விஜய்யின் பரப்புரை வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் பைக் ஓட்டிச் சென்ற இரு இளைஞர்கள் மீதும் கரூர் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.