தமிழக இடைக்கால பட்ஜெட் : பெண்களுக்கான திட்டங்களை பட்டியலிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பிப்ரவரி 17-ந் தேதி தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இதில் தமிழக அரசின் முத்திரைத் திட்டங்களில் முதன்மையானது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்று ஆரம்பித்து மகளிருக்கான சிறப்பு திட்டங்களை விளக்கினார்.

விடியல் பயணத் திட்டம்

ADVERTISEMENT

இதில் தமிழக அரசின் முத்திரைத் திட்டங்களில் முதன்மையானது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்று ஆரம்பித்து மகளிருக்கான சிறப்பு திட்டங்களை விளக்கினார். மகளிர் பயணச் செலவு சுமையைக் குறைத்து, தமிழகப் பொருளாதார வளர்ச்சியில் மகளிர் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க வழிவகுக்கும் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 881 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். இதனால் சராசரியாக ஒரு மாதத்திற்கு ரூ.888 வரை சேமிப்பை நமது மகளிர் பெற்று வருகின்றனர்.

புதுமைப்பெண் திட்டம்

ADVERTISEMENT

மகளிர் கல்வியைப் பாதுகாத்து, பள்ளிக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை தொடர உதவும் வகையில் இந்த அரசு செயல்படுத்திய புதுமைப்பெண் திட்டம் மூலம், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றனர். இதுவரை 6,95,296 மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

சுய உதவி குழுக்கள்

ADVERTISEMENT

மகளிர் தற்சார்பு வாழ்விற்கு உயர்த்தும் நோக்கில், 1989-இல் கலைஞர் தொடங்கிய மகளிர் சுய உதவிக் குழு திட்டத்தைத் தொடர்ந்து இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரை 6,23,529 சுய உதவிக் குழுக்கள் 1,41,718 கோடி ரூபாய் வங்கிக் கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. சுய உதவிக் குழு மகளிரின் உற்பத்திப் பொருட்களைப் பெருக்கிட “வாழ்ந்து காட்டுவோம்” உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தோழி விடுதிகள்

கிராமப் பள்ளிகளில் பயின்று கல்வி பெற்று நகரங்களுக்கு வரும் பெண்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 19 தோழி விடுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கைம்பெண்களின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்ய கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.மகளிர் நலத் திட்டங்கள் நாடெங்கும் பெரும் பாராட்டைப் பெற்றதோடு, பல மாநிலங்கள் இவற்றைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன.

தமிழக முன்னோடி

மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பைக் குறைக்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் 130 அவசரகால மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கருவுற்ற தாய்மார்களையும் பச்சிளம் சிசுக்களையும் பாதுகாப்பதில் தமிழக அரசு முன்னோடியாகத் திகழ்கிறது.

அரசு மருத்துவமனைகளில் நிகழும் பாதுகாப்பான பிரசவங்களில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதனால் மகப்பேறு இறப்பு விகிதம் 1,00,000 மகப்பேறுக்கு 35 என்ற அளவிலும், சிசு இறப்பு விகிதம் 1000 சிசுக்களுக்கு 12 என்ற அளவிலும் தேசிய சராசரியை விட மிகக் குறைவாக உள்ளது.

6 மாதம் வரை உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைய ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டைச் சரிசெய்ய பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன.

பணிபுரியும் மகளிரின் குழந்தைகளைப் பாதுகாக்க, தொழிற்பூங்காக்களிலேயே குழந்தைகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நெருக்கடி நேரங்களில் பெண்களின் பிரச்சினைகளைத் தவிர்க்க ‘காவல் உதவி செயலி’ நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆலயங்களில் பாலின வேற்றுமையைக் கைவிடும் வகையில் ஆன்மீகத் துறையில் பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் பெண் ஓதுவார்கள் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனையாகும்.

தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் உரிய அதிகாரம் அளிக்கவும், உலக வங்கியின் உதவியுடன் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்கள் பெயரில் பதிவு செய்யும் 10 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள வீட்டு மனைகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகளுக்கு கடந்த ஏப்ரல் 2025 முதல் பதிவுக் கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 3,71,705 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

மகளிர் பாதுகாப்புடனும் தன்னம்பிக்கையுடனும் தலைநிமிர்ந்து வாழும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோ வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ளது.

பணிபுரியும் பெண்களைக் கௌரவிக்கும் வகையில், தொழில் முறை வெற்றியை வளர்த்தெடுப்பதற்கான உத்தியுடன் செய்ல்படுவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41% பெண்கள் தமிழ்நாட்டுத் தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள் என்ற பெருமையை தமிழகம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share