ஒரு விளையாட்டு போட்டியின் இறுதிப்போட்டியில் விளையாடுகிற அணிகள் தேர்வாகிவிட்ட பின்னர் நடக்கிற ‘லீக்’ அல்லது மூன்றாமிடத்திற்கான ஆட்டங்கள் மீது ரசிகர்களுக்குப் பெரிதாக ஆர்வம் இருக்காது. பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கிய ‘மெகா’ பட்ஜெட் படங்கள் வெளியாவதற்கு ஐந்தாறு நாட்கள் முன்னதாக தலைநீட்டுகிற திரைப்படங்களுக்கும் கிட்டத்தட்ட அப்படியொரு வரவேற்புதான் கிடைக்கும்.
‘கூலி’ மற்றும் ‘வார் 2’ படங்கள் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், வரும் 13ஆம் தேதி வரை தியேட்டரில் உலா வரும் வேட்கையோடு இந்த வாரம் சில படங்கள் வெளியாகின்றன.
‘தலைவன் தலைவி’, ‘ஹவுஸ்மேட்ஸ்’, ‘சரண்டர்’, ‘சையாரா’, ‘எஃப்1’, ‘மகாவதார் நரசிம்மா’ உள்ளிட்ட சில ஹிட் படங்கள் இந்த நாட்களில் பெருமளவில் ரசிகர்களை ஈர்க்கிற வேட்கையுடன் தியேட்டர்களில் நீடித்து வருகின்றன.
இந்த போட்டிக்கு நடுவே, இந்த வாரம் வெளியாகிற படங்கள் என்னவென்று பார்க்கலாமா?
ரெட் ப்ளவர்

‘கிழக்கு சீமையிலே’ விக்னேஷ் சிறு இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படமிது. நாயகியாக மனீஷா ஜஷ்னானி நடிக்கிறார். இது போக தலைவாசல் விஜய், நாசர், ஜான் விஜய், யோக் ஜபீ, ஒய்.ஜி.மகேந்திரன், லீலா சாம்சன், அஜய் ரத்னம், மோகன்ராமன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். ஆண்ட்ரூ பாண்டியன் இப்படத்தை இயக்க, சந்தோஷ் ராம் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் நீளம் 122 நிமிடங்கள்.
காத்துவாக்குல ஒரு காதல்

மாஸ் ரவி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் லட்சுமிப்ரியா, பிரியங்கா ரோபோசங்கர், பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிகேவி இதற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் நீளம் 125 நிமிடங்கள்.
வானரன்

ஸ்ரீராம் பத்மனாபன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷாஜகான் இசையமைத்திருக்கிறார். நாகேஷின் பேரன் பிஜேஷ் இதில் நாயகனாக நடித்திருக்கிறார் அவருக்கு ஜோடியாக அக்ஷ்யா நடித்துள்ளார். இதுபோக ‘லொள்ளுசபா’ ஜீவா தங்கவேல், உதயா, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் இதில் இடம்பெற்றுள்ளனர். இப்படம் திரையில் ஓடும் நேரம் 92 நிமிடங்கள்.
ராகு கேது

சமுத்திரக்கனி, அர்ச்சனா கந்தன், சந்தியா ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை துரை பாலசுந்தரம் இயக்கியிருக்கிறார். அவர் இதில் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார். சதானந்தம் இசையமைத்துள்ள இப்படத்தின் படத்தொகுப்பினை பி.லெனின் கையாண்டிருக்கிறார். பக்திப் பட வரிசையில் சேரும் வகையில் உருவாகியிருக்கிற இப்படம் திரையில் ஓடும் நேரம் 123 நிமிடங்கள்.
மாமரம்

‘ரோஜா கூட்டம்’ படத்தில் இரண்டாவது நாயகனாக அறிமுகமான ஜெய் ஆகாஷ் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நாயகனாக நடித்தவர். அவர் இயக்கி நடித்துள்ள படமிது. ராகுல் தேவ், பிரமானதம், காதல் சுகுமார், நிதி உட்படப் பலர் தலைகாட்டியுள்ள இப்படமானது ஏற்கனவே வெளியான தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பாகத் தோற்றம் தருகிறது.
இது போக ‘தங்கக்கோட்டை’, ‘நாளை நமதே’, ‘மகேஸ்வரன் மகிமை’, ‘உழவன் மகன்’, ‘பாய்: ஸ்லீப்பர் செல்’ ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
பிபின் கிருஷ்ணா இயக்கத்தில் பிபின் அசோக் இசையமைப்பில் மலையாளத்தில் உருவாகியிருக்கும் ‘சாகசம்’ ஒரு ‘ஆக்ஷன் அட்வெஞ்சர் காமெடி’ படமாக இருக்குமென்ற எதிர்பார்ப்பினை உண்டாக்கியிருக்கிறது. அதுவும் இவ்வாரம் வெளியாகியிருக்கிறது. இதில் நரேன், பாபு ஆண்டனி, கௌரி கிஷன், ரம்ஜான் முகம்மது, அஜு வர்கீஸ், பைஜு சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தியில் ‘அந்தாஸ் 2’ படமும் ஆங்கிலத்தில் ‘வெப்பன்ஸ்’, ‘ப்ரிக்கியர் ப்ரைடே’, ’ஹோலி கோஸ்ட்’, ‘டுகெதர்’, ‘ஸாரி, பேபி’, ‘தி ஹோம்’ ஆகிய படங்களும் வெளியாகின்றன.
இது போக மறைந்த நடிகர் முரளி, ராதா, வடிவேலு நடித்த ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் ‘ரீரிலீஸ்’ ஆகவிருக்கிறது.
கண்டிப்பாக ‘கூலி’ பரபரப்பில் ரசிகர்கள் மூழ்கியிருப்பார்கள் என்று தெரிந்தே இப்படங்கள் வெளியாவதால், இவற்றுக்கான வரவேற்பு எந்தளவிற்கு இருக்குமென்று தெரியவில்லை. இவற்றில் சில படங்கள் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தவும் வாய்ப்புண்டு. அந்த எதிர்பார்ப்போடு தியேட்டர்களும் திரையுலகமும் காத்திருப்போடு உள்ளன.