வெந்தயம் நமது முடி வளர்ச்சிக்கு இயற்கையாக ஊட்டமளிக்கிறது. வெந்தையத்தை எப்படி தலைமுடிக்கு பயன்படுத்துவது என்பது குறித்துப் பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலானோருக்கு முடி உதிர்வு என்பது பெரிய பிரச்சனையாகவே இருக்கும். தினமும் காலை தலைசீவும்போது நமது தலைமுடி சீப்போடு வந்து விழும்போது நமக்கு மிகப்பெரிய மன உளைச்சலாகவே இருக்கும். முடி உதிர்தலை தடுக்க நாமும் பல்வேறு முயற்சிகளை செய்து பார்த்திருப்போம். ஆனால், ஒன்றுமே நமக்கு பலன் அளித்திருக்காது. விலை உயர்ந்த சீரம்கள், ஷாம்புகள் என பலவற்றையும் நாம் செய்து பார்த்திருந்தாலும் திருப்தி கிடைத்திருக்காது.
ஆனால், நாம் வீட்டில் கிடைக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டே முடி உதிர்தலை குறைத்து அதனி வலுப்படுத்த முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அப்படியான ஒரு பொருள்தான் வெந்தையம். நம் வீட்டு அஞ்சரைப் பெட்டிகளில் எப்போதும் இருப்பது வெந்தயம். இதனை மூன்று வெவ்வேறு வழிகளில் முடி வளர்ச்சிக்காக நாம் பயன்படுத்த முடியும்.
வெந்தயம் எப்படி முடி வளர்ச்சிக்கு உதவும்? (fenugreek Hair nutrients) : வெந்தயத்தில் புரதம் மற்றும் நிகோடினிக் அமிலம் நிறைந்துள்ளது. இவை இரண்டும் முடி உதிர்தலைக் குறைக்கவும், பொடுகைக் குறைக்கவும் , முடியை வலுப்படுத்தவும் உதவுகின்றன. வெந்தய விதைகள் முடி மற்றும் உச்சந்தலைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்தை வழங்குகின்றன. அவை முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கின்றன .
வெந்தையத்தை ஊறவைத்து பயன்படுத்தவும் (Soak fenugreek and use to hair) : இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் தண்ணீரை ஸ்பிரே அடிப்பது போல வடிவம் கொண்ட ஒரு பாட்டிலில் வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை நீங்கள் ஒரு ஹேர் மிஸ்டாகப் பயன்படுத்தலாம். அதாவது, தலை முடியில் ஸ்பிரே அடிப்பது போல பயன்படுத்தலாம். இது உங்கள் தலைமுடியை வலுப்படுத்தி பளபளப்பாக்கும்.
தேங்காய் எண்ணெய்யுடன் வெந்தையம் ( fenugreek With Coconut Oil) : அரை கப் தேங்காய் எண்ணெயை குறைந்த வெப்பத்தில் சில நிமிடங்கள் சூடாக்க வேண்டும். அதில் இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தைச் சேர்க்க வேண்டும். சூடாக்கி முடித்த பிறகு எண்ணெயை சிறிது நேரம் ஆற விட்டு பின்னர் அதை வடிகட்ட வேண்டும். பின்னர், எண்ணெய்யை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி, சில மணி நேரம் அப்படியே விட வேண்டும். பின்னர் உங்கள் தலைமுடியைக் கழுவுங்கள் . இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
வெந்தயப் பேஸ்ட்டை தலையில் தடவலாம் (fenugreek mask) : ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி வெந்தயப் பொடியை நான்கு தேக்கரண்டி தயிருடன் சேர்த்து கலக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை அல்லது ஹேர் மாஸ்க்கை உங்கள் உச்சந்தலையில் நன்கு தடவி 30 நிமிடங்கள் விட வேண்டும். பின்னர், உங்கள் தலைமுடியை லேசான ஷாம்பூவுடன் கழுவவும். இந்த வழியில், உங்கள் தலைமுடி இயற்கையாகவே ஈரப்பதமாக இருக்கும். அது உங்கள் முடிக்கு ஊட்டச்சத்து அளித்து இயற்கையான முடி வளர்ச்சிக்கு உதவும்.
