அதிகாரப் பரவலாக்கத்திற்கும் மாநில சுயாட்சிக்குமான வாதம்- பகுதி-2

Published On:

| By Mathi

Federalism2

பகுதி-1

”சிறப்புத் தேர்ச்சி சார்ந்த வாதம்: தனது முதன்மைப் பணிகளில் மட்டுமே ஒன்றியம் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?”

ADVERTISEMENT

அசோக் வர்தன் ஷெட்டி

ந்திய அரசமைப்பு நிர்ணய சபை விவாதங்களின் போது, ஒரு கவர்ச்சிகரமான அனுமானம் முன்னிறுத்தப்பட்டது. அதாவது, ஒன்றியத்தின் பலம் என்பது அதன் அதிகார வரம்பின் பரப்பளவைப் பொறுத்தே உள்ளது என்பதே அந்த அனுமானம். ஒரு வலுவான தேசத்தை உருவாக்க வேண்டுமானால், சட்டம் இயற்றுதல், நிர்வாகம், நிதி என அனைத்துத் துறைகளிலும் ஒன்றியமே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று அப்போது நம்பப்பட்டது. இத்தகைய பொதுவான கருத்தோட்டத்திற்கு எதிராக, மிகுந்த தெளிவுடன் தனது எச்சரிக்கைக் குரலைப் பதிவு செய்தவர் க. சந்தானம் அவர்கள். அவர் குறிப்பிட்டதாவது:

ADVERTISEMENT

“நானும் இந்த நாட்டிற்கு ஒரு வலுவான அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஆனால், மையத்தின் பலம் குறித்த எனது பார்வை சற்றே மாறுபட்டது…. மாகாண மக்களின் நல்வாழ்வுக்கான ஆரம்பக்கட்டப் பொறுப்பு மாகாண அரசாங்கங்களிடமே இருக்க வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பொதுவான விவகாரங்களில் மட்டுமே மத்திய அரசு பொறுப்பேற்றுச் செயல்பட வேண்டும். எனவே, மையத்தின் பலம் என்பது அகில இந்திய விவகாரங்களில் அதற்குள்ள அதிகாரத்தில் மட்டுமல்ல; மாகாணங்களின் எல்லைக்குட்பட்ட, அகில இந்தியத் தன்மையற்ற விவகாரங்களில் இருந்து, மையம் விடுபட்டு இருப்பதிலும் (Freedom from responsibility) அடங்கியுள்ளது. இத்தகைய நேர்மறையான, எதிர்மறையான அதிகார வரம்பு நிர்ணயத்தில்தான் ஓர் உண்மையான கூட்டாட்சி முறை அடங்கியுள்ளது. ஆனால், குழுவின் அறிக்கை வரையறுத்துள்ள கூட்டாட்சி அரசாங்கத்தின் அதிகாரங்கள் தவறான திசையில் செல்வதாக நான் கருதுகிறேன். மையம் வைத்திருக்கக் கூடாத அனைத்து வகையான அதிகாரங்களையும் தன் மீது சுமத்திக்கொள்ள முயல்கிறது…. எல்லா அதிகாரங்களையும் மையத்துடன் இணைப்பதன் மூலம் அதை வலுப்படுத்திவிடலாம் என்ற ஒருவிதமான மனப்பிறழ்வு (Obsession) இங்கே நிலவுகிறது.” (கே. சந்தானம், அரசமைப்பு நிர்ணய சபை விவாதங்கள் (1947)

1935-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின் மாகாணப் பட்டியலில் இருந்த துறைகளை, எந்தவிதப் பாகுபாடுமின்றி ஒன்றியப் பட்டியலுக்கும் பொதுப் பட்டியலுக்கும் மாற்றியதை சந்தானம் கடுமையாக விமர்சித்தார். “நாடோடிகள் வாழ்க்கை” (Vagrancy) போன்ற விவகாரங்கள் ஏன் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் கவலையளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய அவர், “பொருளாதாரத் திட்டமிடலை” பொதுப் பட்டியலில் வைத்திருப்பது, மாநிலங்களின் எல்லைக்குள் — குறிப்பாக வேளாண்மைத் துறையில்கூட — மைய அரசு ஊடுருவ வழிவகுக்கும் என்றும், மாநிலங்கள் தங்களுக்குரிய முறையில் திட்டமிடுவதைத் தடுக்கும் என்றும் எச்சரித்தார்.

ADVERTISEMENT

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, 1970-இல் புது தில்லியில் நடைபெற்ற, ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தேசிய மாநாட்டில், அவர் இந்த விமர்சனத்தை மேலும் கூர்மைப்படுத்தினார். அளவுக்கு அதிகமான பொறுப்புகளைத் தன் தலையில் ஏற்றிக்கொள்ளும் மையம், “குணப்படுத்த முடியாத பலவீனத்திற்கு” உள்ளாகும் என்று எச்சரித்த அவர், உண்மையான பலம் என்பது கவனக் குவிப்பில்தான் உள்ளது என்பதை வலியுறுத்தினார்:

“அத்தியாவசியமான அகில இந்திய விவகாரங்களில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலமும்… மற்ற அனைத்துத் துறைகளிலும் மாநிலங்களுக்கு முழுமையான சுயாட்சியை வழங்குவதன் மூலமுமே… மைய அரசாங்கத்தால் உண்மையிலேயே பலமானதாக இருக்க முடியும்.”

ஒரு வலுவான ஒன்றியம் என்பது எல்லாவற்றையும் செய்யும் அமைப்பு அல்ல; மாறாக எதைச் செய்யக்கூடாது என்பதைத் தெரிந்த ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்று சந்தானம் முன்வைத்த அந்த அரசியல் கூருணர்வு, இன்று  பொருளாதாரக் கோட்பாடுகளிலும் மேலாண்மைக் கோட்பாடுகளிலும் வலுவான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

ஒப்பீட்டு நன்மையும் வாய்ப்புச் செலவும் (Comparative Advantage and Opportunity Cost)

டேவிட் ரிகார்டோவின் (David Ricardo) “ஒப்பீட்டு நன்மை கோட்பாடு”, ஒரு நிறுவனம் தனது வாய்ப்புச் செலவு (Opportunity cost) குறைவாக உள்ள பணிகளில் மட்டுமே சிறப்புத் தேர்ச்சி பெற வேண்டும் என்று கற்பிக்கிறது. ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO), தனது உதவியாளரைவிட மிக வேகமாகத் தட்டச்சு செய்யக்கூடியவராக இருந்தாலும், அவர் தனது நேரத்தைத் தட்டச்சு செய்வதில் செலவிடுவது அறிவுடைமையாகாது. ஏனெனில், அந்த நேரத்தில் அவர் மட்டுமே எடுக்கக்கூடிய உத்தி சார்ந்த முடிவுகளுக்கான (Strategic decisions) வாய்ப்பை இழக்கிறார்.

இதே தர்க்கம் கூட்டாட்சி முறைக்கும் பொருந்தும். ஒன்றிய அரசு தன்னிடம் உள்ள பரந்த வளங்கள், சிறந்த நிபுணத்துவம், தேர்ச்சிமிக்க அதிகாரி வர்க்கத்தைக் கொண்டு, மாநிலங்களை விடச் சிறந்த பள்ளிப் பாடத்திட்டத்தை வடிவமைக்க முடியும் அல்லது பொது சுகாதாரத்தை மேலாண்மை செய்ய முடியும் என்றே நாம் வைத்துக்கொள்ளலாம். மாநிலங்கள் செய்யும் ஒவ்வொரு பணியையும் ஒன்றியம் மிகச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றே கருதினால் கூட, அந்த “முழுமையான நன்மை” (Absolute advantage) ஒன்றியக் கட்டுப்பாட்டை நியாயப்படுத்தாது. இங்கே கவனிக்கப்பட வேண்டியது திறமை அல்ல; மாறாக அதன் வாய்ப்புச் செலவு, அதாவது தான் செய்ய வேண்டிய, ஆனால் செய்ய முடியாமல் போகும் பணிகள் ஆகும்.

மாநில அதிகாரங்களுக்குள் நுழைவதால், ஒன்றியத்திற்கு ஏற்படும் வாய்ப்புச் செலவு என்னவென்றால், தனக்கே உரிய பொறுப்புகளைக் கவனிக்கத் தவறுவதே ஆகும். பாதுகாப்பு, வெளியுறவு, நாணயம், பணவியல் நிலைத்தன்மை, பேரியல் பொருளாதார மேலாண்மை, வர்த்தகப் பேச்சுவார்த்தைகள், முன்னணி அறிவியல் துறைகள் போன்ற அகில இந்திய விவகாரங்களில் ஒன்றிய அரசுக்குத் தெளிவான ஒப்பீட்டு அளவிலான நன்மை உள்ளது. ஆனால், கிராமப்புறத் தூய்மைப் பணித் திட்டங்களைச் செயல்படுத்துவது, பல்கலைக்கழகங்களை நிர்வகிப்பது அல்லது துறைமுகங்களை இயக்குவது போன்ற — முதிர்ந்த கூட்டாட்சி நாடுகளில் மாநிலங்கள் அல்லது உள்ளாட்சி அமைப்புகள் கவனிக்கும் — பணிகளில் நேரத்தையும் பணத்தையும் செலவிடுவது என்பது, ஒன்றியம் மட்டுமே செய்யக்கூடிய பணிகளிலிருந்து வளங்களைத் திசைதிருப்புவது ஆகும்.

எதைச் செய்யக்கூடாது என்பதை வரையறுத்தல்

மைக்கேல் போர்ட்டர் (Michael Porter), தனது புகழ்பெற்ற “உத்தி வகுத்தல் என்றால் என்ன?” (What is Strategy?, Harvard Business Review, 1996) என்ற கட்டுரையில் எழுதினார்:

“எதைச் செய்யக்கூடாது என்பதைத் தேர்ந்தெடுப்பதே உத்தி வகுத்தலின் அடிப்படை ஆகும்…. தேர்வு செய்தலில் விலக்குகள் (Trade-offs) உத்தி வகுப்பதற்கு இன்றியமையாதவை. அவை எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும், ஒரு நிறுவனம் எதை வழங்க வேண்டும் என்பதையும் திட்டமிட்டு வரையறுக்கின்றன.”

ஐக்கியா (IKEA), சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் (Southwest Airlines), நியூட்ரோஜெனா (Neutrogena), வேன்கார்ட் குழுமம் (Vanguard Group) ஆகியவற்றை உதாரணங்களாக எடுத்துக்காட்டினார். இவை எல்லாருக்கும் எல்லாவற்றையும் கொடுக்க முயலாமல், தங்களின் அடிப்படையான மதிப்பிற்குப் பொருந்தாத பணிகளைக் கடுமையாகக் குறைத்துக்கொண்டதாலேயே வெற்றி பெற்றன. தங்களின் பரப்பு எல்லையைச் சுருக்கிக்கொண்டதன் மூலம், அவர்கள் தங்களின் செயல்திறனை (Competence) மேம்படுத்திக் கொண்டனர்.

இப்போது, இந்திய ஒன்றியம் இத்தகைய உத்தி சார்ந்த விலக்குகளைச் செய்ய மறுக்கிறது. விண்வெளி ஆய்வு முதல் கிராமப்புறக் கழிப்பறை வரை ஒவ்வொரு துறையிலும் தானே முதன்மை மாற்றத்தின் காரணியாக இருக்க வேண்டும் என விரும்புகிறது. மாநிலப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு துறைக்கும் இணையாக ஒன்றிய அளவில் மிகப்பெரிய அமைச்சகங்கள் உள்ளன; இவை மாநிலப் பணிகளையே மீண்டும் செய்யும் ஒரு “நிழல் அதிகார வர்க்க முறையை” (Shadow bureaucracy) உருவாக்குகின்றன. நிதிக் குழுவின் நிபந்தனைக்குட்பட்ட மானியங்கள், பெருகிவரும் ஒன்றிய நிதிஅளிப்புத் திட்டங்கள் (Centrally Sponsored Schemes), கடுமையான வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் மூலம், வரையறுக்கப்படாத நிதி ஒதுக்கீட்டையும் திட்டங்களின் தெரிவுப் பட்டியலையும்  வழங்குவதற்குப் பதிலாக, வரையறுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு வழங்குவதன் வழியாகவும் மாநிலங்களின் முன்னுரிமைகளை ஒன்றிய அரசு தீர்மானிக்கிறது. இதன் விளைவாக, ஆட்சி செய்வதில் குறைபாடு ஏற்படுகின்றது. இதனால், ஒன்றியத்தின் கவனம் சிதைக்கப்படுகின்றது. மாநிலங்கள் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. குடிமக்களுக்குப் பொறுப்புக்கூறலில் தெளிவற்ற நிலை நிலவுகிறது.

மையமான செயல்திறனும் பெரும் வேலைச்சுமை என்னும் பொறியும்

எதிர்காலத்திற்கான போட்டி (Competing for the Future, 1994) நூலில், சி.கே. பிரஹலாத் மற்றும் கேரி ஹேமல் (C.K. Prahalad and Gary Hamel), “பெரும் வேலைச்சுமை என்னும் பொறி” (conglomerate trap) குறித்து எச்சரித்தனர். பெரிய நிறுவனங்கள் தங்களின் மையமான செயல்திறன்களிலிருந்து விலகி, தங்களுக்கு நிபுணத்துவம் இல்லாத துறைகளில் நுழையும்போது தங்களின் மதிப்பை இழக்கின்றன. அத்தகைய நிறுவனங்கள் எல்லாவற்றிலும் சாதாரணமானவையாகவும், எதிலும் சிறந்தவையாகவும் இருப்பதில்லை. நீடித்த வெற்றி என்பது மையமான திறன்களைப் பாதுகாப்பதிலும், ஒப்பீட்டு அளவில் நன்மை இல்லாத பணிகளிலிருந்து வெளியேறுவதிலும் உள்ளது.

இந்திய ஒன்றியம் இத்தகைய பெரும் வேலைச்சுமை கொண்ட கூட்டு நிறுவனம் (Bloated conglomerate) போல மாறும் அபாயத்தில் உள்ளது. ஒன்றியத்தின் மையமான திறன் என்பது தீர்க்கமான தொலைநோக்கு, உத்தி சார்ந்த ஒருங்கிணைப்பு தேவைப்படும் அகில இந்தியப் பணிகளில் உள்ளது. ஆனால் குடிநீர், சுகாதாரம், வீட்டுவசதி, கல்வி அல்லது ஆரம்ப சுகாதாரம் போன்ற உள்ளூர் பொதுநலப் பணிகளுக்குத் தேவைப்படும் நுணுக்கமான அறிவு (Granular knowledge), சமூக ஈடுபாடு போன்ற திறன்கள் ஒன்றியத்திடம் இல்லை. இந்தப் பணிப் பகுதிகளில் ஒன்றியம் செயல்பட முனையும்போது, தேசிய முன்னுரிமைகளிலிருந்து நிர்வாகத்தின் கவனம் சிதறுகிறது. கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தைப் பரிசீலிக்கும் ஒவ்வொரு மணிநேரமும், சைபர் வார்ஃபேர் (Cyber warfare) போன்ற முக்கியமான பணிகளுக்காகச் செலவிடப்படாத நேரம் ஆகும். இது வெறும் திறனின்மை மட்டுமல்ல; இது ஓர் உத்தி சார்ந்த தவறான ஒதுக்கீடும் ஆகும்.

“வரம்பு எல்லை” என்னும் சிக்கல்

செவ்வியல் மேலாண்மைக் கோட்பாடு (Classical management theory) இறுதியாக ஓர் எச்சரிக்கையை வழங்குகிறது. ஓர் நிர்வாகியால் எத்தனை துணைநிலை ஊழியர்களை அல்லது சிக்கலான பணிகளைத் திறம்பட மேற்பார்வையிட முடியும் என்பதற்கும் ஓர் எல்லை உண்டு என வி.ஏ. கிரெய்குனாஸ் மற்றும் லிண்டால் உர்விக் (V.A. Graicunas and Lyndall Urwick) வரம்பு கட்டியுள்ளனர். துணைநிலை ஊழியர்களின் எண்ணிக்கை கூடும்போது, நேரடியான, இடையிலான, குழுநிலையிலான உறவுகள் காரணமாக நிர்வாகச் சிக்கல்கள் பலமடங்கு அதிகரிக்கின்றன. உதாரணமாக, ஐந்தாவது துணைநிலை ஊழியரை சேர்ப்பது, ஊழியர் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரிக்கிறது. ஆனால் உறவு சிக்கலான தன்மையை ஏறக்குறைய 100 சதவீதம் அதிகரிக்கிறது. வரம்பு எல்லை மீறப்படும்போது, தகவல் சுமையாலும் முடிவெடுக்க முடியாத முடக்கத்தாலும் நிர்வாகம் வீழ்ச்சியடைகிறது.

பொதுப் பட்டியலை விரிவுபடுத்துவதன் மூலமும், மாநில அதிகாரங்களில் ஒன்றிய நிதிஅளிப்புத் திட்டங்களைப் பெருக்குவதன் மூலமும், ஒன்றியம் 140 கோடி மக்களைக் கொண்ட துணைக்கண்டத்தின் மீதான தனது கட்டுப்பாட்டு எல்லையை, அறிவுத்திறன் வரம்புகளுக்கு அப்பால் நீட்டித்துள்ளது. இதனால் ஒன்றியம் ‘தொளதொள என்று ஆகிவிட்ட அரக்கன்’ (Flabby giant) போல, திறனின்மையால் அல்ல, பெருத்துப் போய்விட்டதால் மந்தமாகியுள்ளது. எனவே, சந்தானத்தின் எச்சரிக்கை இன்றும் மிக முக்கியமானது. பலம் என்பது பணிகளைக் குவித்துக்கொள்வதால் மட்டும் வருவதல்ல; தேசிய நிலைக்குப் பொருந்தாத பொறுப்புகளைக் கட்டுக்கோப்புடன் மறுப்பதில் இருந்தே கிடைக்கிறது. எல்லாவற்றையும் செய்ய முயலும் ஓர் அரசாங்கம், இறுதியில் எதையுமே சிறப்பாகச் செய்வதில்லை. (தொடரும்)

கட்டுரையாளர் குறிப்பு:

கே. அசோக் வர்தன் ஷெட்டி, IAS (ஓய்வு), 

  • இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், சென்னை.
  • ன்றிய-மாநில உறவுகள் குறித்த தமிழ்நாடு அரசு உயர்நிலைக் குழுவின் உறுப்பினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share