”புத்தாக்கம் சார்ந்த வாதம்: அதிகாரப் பரவலாக்கம் ஏன் பரிசோதனைகளை ஊக்குவிக்கிறது
அசோக் வர்தன் ஷெட்டி
இந்தியா பரந்த, பன்முகத்தன்மை கொண்ட ஒரு கூட்டாட்சி நாடு. இதுபோன்ற நாட்டில், எந்தவொரு மைய அதிகார அமைப்பும் ஒவ்வொரு பிராந்திய சூழலியல், தொழிலாளர் சந்தை, மொழி இனக் குழு அல்லது தொழில் மண்டலங்களுக்கு ஏற்ற மிகச்சிறந்த கொள்கையை வடிவமைத்துவிட முடியாது. இந்தக் கட்டமைப்புச் சிக்கலை, மாநிலங்கள் மேற்கொள்ளும் இணையான பரிசோதனைகளை அனுமதிப்பதன் மூலம், கூட்டாட்சி முறை தீர்க்க முயல்கிறது. மாநிலங்கள் தங்களால் கையாளக்கூடிய அளவில் கொள்கைகளைச் சோதித்துப் பார்க்கவும், தோல்விகளைக் கட்டுப்படுத்தவும், தீர்வுகளைச் செம்மைப்படுத்தவும் முடியும்; இதன் மூலம் வெற்றிகரமான மாதிரிகளைக் கிடைமட்டமாகப் பிற மாநிலங்களுக்குப் பரப்பவோ அல்லது தேசிய அளவில் கொண்டு செல்லவோ வழிவகை செய்யப்படுகிறது. இந்தியச் சூழலில், மாநிலங்களை “கொள்கை வகுப்பு ஆய்வகங்களாக” கருதுவது என்பது வெறும் அலங்கார வார்த்தையல்ல. அது ஒரு நடைமுறைத் தேவை.

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதி லூயிஸ் டி. பிராண்டீஸ் (Louis D. Brandeis), நியூ ஸ்டேட் ஐஸ் நிறுவனம் எதிர் லீப்மேன் (New State Ice Co. v. Liebmann, 1932) வழக்கில் இந்த தர்க்கத்தை விளக்கினார். “துணிவுகொண்ட தனியொரு மாநிலம், அதன் குடிமக்கள் விரும்பினால், ஒரு ஆய்வகமாகச் செயல்பட்டு, நாட்டின் பிற பகுதிகளுக்குப் பாதிப்பில்லாமல் புதிய சமூக, பொருளாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்பது கூட்டாட்சி முறையின் மகிழ்வான நிகழ்வுகளில் ஒன்றாகும்” என்று அவர் குறிப்பிட்டார். பரவலாக்கப்பட்ட பரிசோதனைகள், ஒட்டுமொத்த அமைப்பின் அபாயத்தைக் குறைப்பதோடு, நிறுவன அளவிலான கற்றலைத் துரிதப்படுத்துகின்றன.
உலகளாவிய சான்றுகள்
தேச-உறுப்பு அளவிலான (மாநில அளவிலான) பரிசோதனைகள் என்பது முதிர்ச்சியடைந்த கூட்டாட்சி நாடுகளின் ஒரு முக்கியமான அடையாளம் ஆகும்.

அமெரிக்காவில், வேலையின்மை காப்பீடு (விஸ்கான்சின்), சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை (கலிபோர்னியா), சுகாதாரச் சீர்திருத்தம் (மாசசூசெட்ஸ்) போன்ற முக்கியமான கொள்கை வகுப்பு புதுமைகள் தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு, மாநிலங்களிலேயே தொடங்கின. இக்காலப் பரிசோதனைகளாக (கொலராடோ, ஓரிகான் மாகாணங்களில்) கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்குதல், கருணைக் கொலை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

கனடாவில், அனைவருக்குமான பொதுச் சுகாதாரம் தேசிய திட்டமாவதற்கு முன்பு சாஸ்காட்செவன் (Saskatchewan) மாகாணத்தில்தான் உருவானது. கியூபெக் (Quebec) மாகாணத்தின் மானியத்துடனான குழந்தை பராமரிப்பு மாதிரி, இப்போது கூட்டாட்சி அரசின் குடும்பக் கொள்கையை வடிவமைத்து வருகிறது.

ஜெர்மனியில், (மெர்சிடிஸ், போர்ஷே நிறுவனங்களின் தாயகமான) பேடன்-வுர்ட்டம்பெர்க், (பிஎம்டபிள்யூ, சீமென்ஸ் நிறுவனங்களின் தாயகமான) பவேரியா போன்ற மாநிலங்கள் தொழிற்கல்வி, தொழில்முறை நிதி, பிராந்திய மேம்பாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டின் வழியாக உலக அளவில் தொழில்துறை முன்னணிநிலையை தக்கவைத்துக் கொள்கின்றன.

பிரேசிலில், போல்சா ஃபேமிலியா (Bolsa Família, நிபந்தனையுடன் கூடிய பணப் பரிமாற்றம்) எனும் திட்டம் பிரேசிலியா, காம்பினாஸ் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட போல்சா எஸ்கோலா (பள்ளி உதவித்தொகை) போன்ற உள்ளூர் அளவிலான பரிசோதனைகளிலிருந்து உருவானது. அதேபோல், விரைவுப் பேருந்து போக்குவரத்து (Bus Rapid Transit) முறை 1974-இல் குரிடிபாவில் பரிசோதனையாகத் தொடங்கப்பட்டு, இன்று உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் பின்பற்றப்படுகிறது.
இத்தகைய கூட்டாட்சி நாடுகள் முழுவதும் பின்வரும் முறை தெளிவாகத் தெரிகின்றது: பல்வகைமை கற்றலைச் சாத்தியமாக்குகின்றன, சுயாட்சி வேகமாகச் செயல்படுத்தலைச் சாத்தியமாக்குகிறது, [வெற்றிகரமான திட்டங்கள்] நாடு முழுவதும் பரவி வெற்றிபெறுகின்றன.

இந்திய அனுபவம்
இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான தேசிய திட்டங்கள், இதே போன்ற பாதையையே பின்பற்றின. சத்துணவுத் திட்டம் (தமிழ்நாடு), பொதுச் சுகாதாரம் மற்றும் எழுத்தறிவு பரப்பும் முன்முயற்சிகள் (கேரளா), வேலை உறுதித் திட்டம் (மகாராஷ்டிரா), சிறு துறைமுக மேம்பாட்டிற்கான பொதுத்துறை-தனியார்த்துறை கூட்டுப் பங்களிப்பு மாதிரி (குஜராத்) ஆகிய அனைத்தும் பரந்த அளவில் ஏற்றுக்கொள்வதற்கு முன்னரே, மாநில அளவில் உருவானவை.
குறிப்பிட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டு, இந்தியப் பொருளாதார நிலப்பரப்பின் துடிப்பான வளர்ச்சி மையங்கள் பலவும் ஓர் உண்மையை வெளிப்படுத்துகின்றது. அது, ஒன்றிய அரசின் திட்டமிடலுக்கு முன்னரோ அல்லது சிலநேரங்களில் அதற்கும் தொடர்பில்லாமலோ, மாநிலங்கள் முன்னெடுத்த உள்ளூர் தொழில்முனைவு சூழல் கட்டமைப்பின் மூலமே அம்மையங்கள் உருபெற்றன.
தமிழ்நாட்டில், சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள வாகனத் தொழில் மண்டலம், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பின்னலாடைத் தொழில் தொகுப்புகள், சிவகாசியின் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழில்கள், சேலம்-நாமக்கல் ஜவ்வரிசி மண்டலம் ஆகியவை மாநிலத்தின் திறனும் முதலீடுகளும் நீண்டகால தொழில்முனைவோர் மரபுகளுடன் இணைந்தே செழித்தோங்கின.
கர்நாடகாவில், திறமையான மாணவர்களைப் பயிற்றுவித்து அளிக்கும் பல்கலைகழகங்கள், பயிற்சிபெற்று திறன்மிக்கோராக விளங்கும் தொழிலாளர் குழாம்கள், இவை அனைத்தையும் முன்னின்று வழிநடத்தி ஒருங்கிணைக்கும் மாநில அரசின் கொள்கை ஆதரவுநிலை ஆகியவற்றிலிருந்தே பெங்களூரின் தகவல் தொழில்நுட்பத் துறையும் பெருவளர்ச்சி பெறும் தொழில்நுட்பச் சூழலும் (Deep-tech) வளர்ச்சிபெறுகின்றன.
தெலங்கானா மாநிலம், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புறப் புத்தாக்க வலைப்பின்னல்கள் மூலம் ஹைதராபாத்தில் வலிமையான மருந்தியல் மற்றும் உயிரியல் துறை அறிவியல் மையத்தை (life-sciences hub) உருவாக்கியது.
மகாராஷ்டிராவில் மும்பையின் நிதிச் சூழலும் புனேவின் பொறியியல் தொழிற்பேட்டையும் செறிவான சந்தை, திறமையான மனிதவளம், மாநில அளவிலான நிறுவன ஆதரவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கின்றன.
குஜராத்தின் துறைமுகம் சார்ந்த தொழில்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காக்கள் ஆகியவை புவியியல் சார்ந்த சாதக அம்சங்களுடன் இணைந்த முதன்மையான உள்கட்டமைப்பு, உடனடியான அனுமதி வழங்கல்கள் மூலம் வளர்கின்றன.
கேரளா, பொருளியல் மண்டலங்கள் என்பவை வெறும் தொழில்துறை சார்ந்ததாக மட்டும் இருக்க வேண்டியதில்லை என்பதை மெய்ப்பிக்கிறது. அதிக எழுத்தறிவு, வலுவான பொதுச் சுகாதார அமைப்புகள், அதிகாரப் பரவலாக்கப்பட்ட திட்டமிடல் ஆகியவை ஒரு தனித்துவமான சமூகம் சார்ந்த மேம்பாட்டு மாதிரியை உருவாக்கியுள்ளன.
இந்த வெற்றிகள் சீரான தேசிய அளவிலான கொள்கைகளால் உருவாக்கப்பட்டவை அல்ல. மாநிலங்கள் தங்களின் ஒப்பீட்டு அளவிலான சாதக அம்சங்களை உணர்ந்து, உள்கட்டமைப்பிலும் நிறுவனங்களிலும் முதலீடு செய்து, தொழில்முனைவு நிறுவனங்கள், வழங்குநர்கள், அறிவுசார் அமைப்புகள் ஆகியவற்றின் வலைப்பின்னல்களை உருவாக்கிய இடங்களில் அம்மண்டலங்கள் உருவெடுத்தன. இதன் மூலம், அவை புவியியல் சாதக அம்சங்களையும் வரலாற்று அளவில் பெற்ற திறன்களையும் தங்களைத் தாமே வலுப்படுத்திக் கொள்ளும் சூழல் வட்டார மண்டலங்களாக உருமாற்றிக் கொண்டன.
நவீன பொருளாதாரக் கோட்பாடு இத்தகைய மாதிரிகள் ஏன் உருவாகுகின்றன என்பதை விளக்குகிறது.

1. பால் க்ருக்மேனும் தொழில் குவியலும் (Agglomeration)
புவியியலும் வர்த்தகமும் (Geography and Trade, 1991) நூலில், தொழில்கள் ஏன் “வெண்ணெயை ரொட்டியில் தடவுவது போல” சமமாகப் பரவாமல், குறிப்பிட்ட பிராந்தியங்களில் மட்டும் குவிகின்றன என்பதை பால் க்ருக்மேன் விளக்குகிறார். ஒரு பிராந்தியம் திறமையான தொழிலாளர்கள், உள்கட்டமைப்பு அல்லது துறைமுக அணுகல் போன்ற ஆரம்பக்கட்டச் சாதகத்தைப் பெற்றுவிட்டால், அதன் வளர்ச்சி பன்மடங்கு பெருகத் தொடங்கும். தங்களுக்குத் தேவையான வழங்குநர்களுக்கு அருகாமையில் இருப்பதன் மூலம் தொழில் நிறுவனங்கள் பயனடைகின்றன. தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு மையங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். அறிவுத்துறை பரிமாற்றங்கள் நெருக்கமான தொழில்முறை வலைப்பின்னல்கள் மூலம் வேகமாகப் பரவுகின்றன. தொழில் குவியலை (Agglomeration) பின்வரும் மூன்று பொறிமுறைகள் வலுப்படுத்துகின்றன: செறிவான தொழிலாளர் சந்தைகள் பணியமர்த்தல் தொடர்பான அபாயங்களைக் குறைக்கின்றன; தொழில் நிறுவனங்களின் அருகாமை பரிவர்த்தனை மற்றும் ஒருங்கிணைப்புச் செலவுகளைக் குறைக்கின்றன; தொழிற்சாலை நேரடி அனுபவ அறிவுப் பரவல் (Tacit knowledge spillovers) புதிய கண்டுபிடிப்புகளைத் துரிதப்படுத்துகின்றன. சிலிக்கான் வேலி இத்தகைய சூழல் அமைப்பிற்குச் சிறந்த உதாரணம் ஆகும்.
தொழில்துறையை நிர்வாக அளவில் திட்டமிடுவதின் மூலம் சமமாகப் பிரித்துவிட முடியும் என்ற மையத் திட்டமிடலாளர்களின் அனுமானத்தை க்ருக்மேனின் ஆய்வு கேள்விக்கு உட்படுத்துகிறது. பொருளாதார வளர்ச்சி என்பது இயல்பாகவே இடஞ்சார்ந்ததும் (Spatial), தொடர் வளர்ச்சியைக் கொண்டதும் ஆகும். எனவே, தேசிய செழுமை என்பது மண்டலச் சூழல் அமைப்புகளின் ஒருங்கிணைந்த வலிமையிலிருந்துதான் பிறக்கிறது.

2. மைக்கேல் போர்ட்டரும் தொழில் தொகுப்புக் கோட்பாடும் (Cluster Theory)
நாடுகளிடையே போட்டியிடும் அனுகூலம் (The Competitive Advantage of Nations, 1990) நூலில், மைக்கேல் போர்ட்டர், போட்டியிடும் அனுகூலம் என்பது “தொழில் தொகுப்பு மண்டலங்களிலிருந்து” (Clusters) உருவாகிறது என்று வாதிட்டார். ஒரு குறிப்பிட்ட துறையில் ஒன்றோடொன்று தொடர்புடைய நிறுவனங்கள், சிறப்பு வழங்குநர்கள், சேவை வழங்குநர்கள், பல்கலைக்கழகங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பதே இத்தகைய தொகுப்பு ஆகும். இந்தத் தொகுப்புகளுக்குள் போட்டியும் ஒத்துழைப்பும் ஒருசேர நிலவுகின்றன. நிறுவனங்கள் கடுமையாகப் போட்டியிடும் அதே வேளையில், தொழிலாளர்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்கின்றன. பல்கலைக்கழகங்கள் தொழில்துறைத் தேவைக்கேற்பப் பயிற்சிகளை வழங்குகின்றன; அனுமதி வழங்கும் அரசு ஒழுங்குமுறை அமைப்புகள் குறிப்பிட்ட துறை சார்ந்த தேவைகளைப் புரிந்துகொள்கின்றன; போட்டியிடும் தொழில் நிறுவனங்கள் நெருங்கி உள்ளதன் விளைவாக கண்டுபிடிப்புகள் வேகமடைகின்றன. செமிகண்டக்டர் மற்றும் மென்பொருள் துறையில் சிலிக்கான் வேலி, நுட்பப் பொறியியலில் (precision engineering) ஜெர்மனியின் பேடன்-வுர்ட்டம்பெர்க், இத்தாலியத் தொழிற்துறை மாவட்டங்கள் ஆகியவை இதற்கு உதாரணங்கள்.
ஒரே மாதிரியான கொள்கை வார்ப்புகளைக் கொண்டு மையப்படுத்தப்பட்ட முறையில் தொழில்மயமாக்கப்படுவதை போர்ட்டர் நிராகரித்தார். அரசாங்கத்தின் சரியான பணி என்பது, பிராந்தியத் தேவைகளுக்கு ஏற்ப உள்கட்டமைப்பு, திறன்கள், ஆராய்ச்சித் தொடர்புகள், விரைவான அனுமதி வழங்குதல் முறைகள் மூலம் இத்தகைய தொழில் தொகுப்பு மண்டலங்களை ஊக்குவிப்பதே ஆகும்.

3. பிலிப் குக்கும் மண்டல அளவிலான புத்தாக்க அமைப்புகளும்
மண்டல அளவிலான புத்தாக்க அமைப்புகள் (Regional Innovation Systems, 2004) நூலில், பிலிப் குக் மற்றொரு பரிமாணத்தை விளக்குகிறார். புத்தாக்கம் என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்தது மட்டுமல்ல; அது நிறுவனம் மற்றும் சமூகம் சார்ந்தது. இது வெறும் ஆராய்ச்சி முதலீட்டிலிருந்து இயந்திரத்தனமாகத் தோன்றுவதில்லை; மாறாக நம்பிக்கை, ஒத்துழைப்பு, ஆதரவு அளிக்கும் ஒழுங்குமுறைகள் கொண்ட வலைப்பின்னல்களுக்குள் வளர்கிறது.
எனவே, வெவ்வேறு பிராந்தியங்கள் வெவ்வேறு புத்தாக்கம் செய்யும் கட்டமைப்புகளை உருவாக்குகின்றன. பேடன்-வுர்ட்டம்பெர்க்கின் உற்பத்தி முறை பல்கலைக்கழக-தொழில்துறை வலுவான பிணைப்பைச் சார்ந்துள்ளது; சிலிக்கான் வேலி துணிகர முதலீட்டையும் உழைப்பாளர் பெயர்வையும் சார்ந்துள்ளது. நோர்டிக் பொருளாதாரங்கள் பொது ஆராய்ச்சியை ஒருங்கிணைந்த தொழில்துறை கொள்கையுடன் இணைக்கின்றன.
புத்தாக்கம் செய்யும் அமைப்புகள் குறிப்பிட்ட துறை சார்ந்தவை; பண்பாட்டு அளவில் வேரூன்றியவை. ஒற்றை தேசிய கொள்கை வார்ப்பால் இத்தகைய பன்முகத்தன்மைக்கு இடமளிக்க முடியாது. எனவே, புத்தாக்கம் செய்தலையும் போட்டித்தன்மையையும் தக்கவைக்க வட்டாரச் சுயாட்சி அவசியமாகிறது.
அதிகாரப் பரவலாக்கமே வளர்ச்சிபெறுவதற்கான ஓர் உத்தி
மாநிலங்கள் கொள்கை ஆய்வகங்களாகச் சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால், சுயாட்சி என்பது உண்மையானதாக இருக்க வேண்டும். நிதி சார்ந்த நெகிழ்வுத்தன்மை, ஒழுங்குமுறை அதிகாரம், நிர்வாகத் திறன் ஆகியவை இத்தகைய பரிசோதனைகளுக்கான அத்தியாவசியத் தேவைகள் ஆகும்.
ஆயினும், இந்தியா இப்போது கடினமான தேசிய வார்ப்புகள், நிபந்தனைகளுடன் கூடிய நிதியுதவிகள், நுண்-நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் மெல்ல மெல்ல மையப்படுத்துதலை நோக்கி நகர்ந்துள்ளது. சீரான தன்மை என்பது பார்ப்பதற்கு ஒழுங்காகத் தோன்றலாம். ஆனால் புதிய கண்டுபிடிப்புகள் பன்முகத்தன்மையிலிருந்தே பிறக்கின்றன. பரிசோதனைகள் கட்டுப்படுத்தப்படும்போது, கொள்கைகள் தேக்கமடைந்து, புத்தாக்கம் செய்தல் பாதிக்கப்படுகின்றன. பல பரிசோதனைகளை இணையாகச் செயல்படுத்தும் ஒரு கூட்டாட்சி பலவீனமானது அல்ல; அதுவே அறிவார்ந்தது. (தொடரும்)
கட்டுரையாளர் குறிப்பு:

கே. அசோக் வர்தன் ஷெட்டி, IAS (ஓய்வு),
- இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், சென்னை.
- ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தமிழ்நாடு அரசு உயர்நிலைக் குழுவின் உறுப்பினர்.
