ஜம்முவில் பதற்றம்.. முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது துப்பாக்கி சூடு முயற்சி.. 20 ஆண்டு கால திட்டம் என குற்றவாளி வாக்குமூலம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Farooq Abdullah

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் 20 ஆண்டுகளாக இந்தத் தருணத்திற்காகக் காத்திருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா – தற்போதைய முதல்வர் உமர் அப்துல்லாவின் தந்தை – இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஜம்முவின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள ராயல் பார்க் திருமண மண்டபத்தில் நேற்று (மார்ச் 11) மாலை நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பரூக் அப்துல்லா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். விழா முடிந்து அவர் வெளியே வந்தபோது, கூட்டத்தில் மறைந்திருந்த நபர் ஒருவர் திடீரென தனது கைத்துப்பாக்கியால் பரூக் அப்துல்லாவின் தோள்பட்டைக்கு நேராகக் குறிவைத்துச் சுட முயன்றார்.

பாதுகாப்புப் படையினரின் அதிரடி

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தேசிய பாதுகாப்புப் படை (NSG) கமாண்டோக்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாரித்துச் செயல்பட்டனர். தாக்குதல் நடத்த முயன்ற நபரை அவர்கள் உடனடியாகத் தள்ளிவிட்டதால், துப்பாக்கிக் குண்டு இலக்கு தவறிப் பாய்ந்தது. இதனால் பரூக் அப்துல்லா நல்வாய்ப்பாக எவ்விதக் காயமுமின்றி உயிர் தப்பினார்.

ADVERTISEMENT

திடுக்கிடும் வாக்குமூலம்

தாக்குதலில் ஈடுபட்ட நபரை பாதுகாப்புப் படையினர் உடனடியாகக் கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஜம்முவின் புராணி மண்டி (Purani Mandi) பகுதியைச் சேர்ந்த கமல் சிங் ஜம்வால் (Kamal Singh Jamwal) என்பது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. “கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் தருணத்திற்காக நான் காத்திருந்தேன். இந்தச் செயலுக்காக நான் எவ்வித வருத்தமும் அடையவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம்

இந்தச் சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இறைவன் கருணை உள்ளவன். என் தந்தை மயிரிழையில் உயிர் தப்பினார். Z+ பிரிவு மற்றும் தேசிய பாதுகாப்புப் படை பாதுகாப்பில் உள்ள ஒரு முன்னாள் முதலமைச்சரை இவ்வளவு நெருங்கி ஒருவர் துப்பாக்கியுடன் வந்தது எப்படி? இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாட்டையே காட்டுகிறது. பாதுகாப்புப் படையினரின் சமயோகித புத்தியால் மட்டுமே இந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒரு நபருக்கு இவ்வளவு அருகாமையில் ஆயுதத்துடன் நபர் ஒருவர் வந்தது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், பரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்த வீடியோ (CCTV காட்சி) சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share