ADVERTISEMENT

2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் முகம்… கீழடி ஆச்சரியம்!

Published On:

| By Selvam

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. Faces of Keeladi men 2500 year old skulls

கீழடியில் மேற்கொண்ட அகழாய்வு அறிக்கைகளை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பினார். ஆனால், அந்த ஆய்வு அறிக்கையில் அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வு தகவல்கள் இல்லை என மத்திய அரசு அதனை மீண்டும் திருப்பி அனுப்பியது.

ADVERTISEMENT

இந்தநிலையில், கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் இங்கிலாந்தில் உள்ள ஆய்வகத்தில் 3டி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் இரண்டு மண்டை ஓடுகளில் புனரமைக்கப்பட்ட முக அம்சங்களை கண்டுபிடித்துள்ளனர்.

ADVERTISEMENT

இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் Face Lab இயக்குனர் பேராசிரியர் கரோலின் வில்கின்சன் கூறும்போது, “முக தசைகளை மீண்டும் உருவாக்கவும், உடற்கூறியல் மற்றும் மானுடவியல் அளவீடுகளைப் பின்பற்றி முக அம்சங்களை மதிப்பிடவும் கணினி உதவியுடன் கூடிய 3D முக மறுசீரமைப்பு முறையைப் பயன்படுத்தினோம்.

மண்டை ஓடுகளின் கீழ் தாடைகள் காணாமல் போனதால், மண்டை ஓடு அளவீடுகள் மற்றும் தளங்களிலிருந்து கீழ்த்தாடையின் வடிவங்களை மதிப்பிடுவதற்கு நாங்கள் பல் மருத்துவ தரங்களைப் பயன்படுத்தினோம்” என்கிறார்.

ADVERTISEMENT

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறை பேராசிரியர் ஜி.குமரேசன் கூறும்போது, ” 3டி முறையில் வடிவமைக்கப்பட்ட முகங்கள் 80% அறிவியல் மற்றும் 20% கலை” என்கிறார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இனியாவது கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிடுமா என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து அறிவியல் வழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்.

கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி” என்று குறிப்பிட்டுள்ளார். Faces of Keeladi men 2500 year old skulls

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share