அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒருவர் உயிருடன் பாம்பை எடுத்துச் சென்று பயணிகளிடம் பணம் பறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்துகளில் முதன்மையானதாக ரயில் உள்ளது.
இந்த நிலையில் அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒருவர் பாம்பை கையில் வைத்துக்கொண்டு பயணிகளிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்.
மத்திய பிரதேசத்தின் முங்காலி மற்றும் பினா சந்திப்புகளுக்கு இடையே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
பயணிகளில் ஒருவர் இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
ரயில் பயணிகளின் கூற்றுப்படி, அந்த நபர் ஒரு பெட்டிக்குள் ஏறி, பணம் கேட்டு மிரட்டினார். அவர் பாம்பை விட்டு கடிக்க வைத்து விடுவார் என பலர் இருக்கைகளை விட்டு எழுந்து சென்றுவிட்டனர். பலர் வேறு வழி இன்றி தங்களிடமிருந்த தொகையை அவரிடம் கொடுத்தனர். உழைக்கும் வர்க்கத்தினர் செல்லக்கூடிய பெட்டிகளில் தான் இந்த சம்பவங்கள் நடந்தன என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த நபர் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கும் வரை பயந்து கொண்டே பயணித்ததாக பயணிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் வீடியோவைப் பதிவேற்றியவரிடம் பயண விவரங்களையும், மொபைல் எண்ணையும் ரயில்வே துறை கேட்டுள்ளது.
மேலும், பயணிகள் railmadad.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் ரயில்வே பாதுகாப்பு படையை (ஆர்.பி.எஃப்) தொடர்பு கொள்ளலாம் அல்லது 139 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
வடமாநில ரயிலில் நடந்த இந்த சம்பவம் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.