வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம ஏரிக்கு வரும் நீர் வரத்து அதிகரித்து வருவதால் விநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்க்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டமும் அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று மாலை ஏரிக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 1800 கன அடியில் இருந்த நிலையில் இன்று (அக்டோபர் 22) காலை நிலவரப்படி 2,170 கன அடியாக அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் ஏரியின் நீர்மட்டம் 20.84 அடியாக உயர்ந்துள்ளது.
அதேசமயம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2815 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ச்சியாக கனமழையால் நீர்மட்டம் உயர்வதால் பாதுகாப்பு கருதி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
முன்னதாக ஏரியிலிருந்து நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர், காவனுர், குன்றத்துர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
