ADVERTISEMENT

வெறுப்புக்கான பதில் வெறுப்பு அல்ல… கணவரை சுட்டுக்கொன்ற இளைஞரை மன்னித்த மனைவி

Published On:

| By christopher

erika kirk forgives the young man who shot her husband

சார்லி கிர்க்கை சுட்டுக்கொன்ற 22 வயதான இளைஞரை மன்னிப்பதாக அவரது மனைவி எரிகா கிர்க் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர் சார்லி கிர்க். டிரம்ப் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டுவந்தார். 31 வயதான இவரை சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கானவர்கள் பின்பற்றி வந்தனர்.

ADVERTISEMENT

இவர் வலதுசாரி சிந்தனைகள், பழமைவாத கிறிஸ்தவ அரசியல் கருத்துகளுக்கு ஆதரவாக சார்லி தொடர்ந்து பேசி வந்தார். மேலும் திருநங்கைகள், முஸ்லிம்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் பிறர் உட்பட சிறுபான்மையினரை குறிவைத்து அடிக்கடி கடுமையான அறிக்கைகளை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10 அன்று உட்டா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பொது விவாத நிகழ்வின் போது, 22 வயதான டைலர் ராபின்சன் என்ற இளைஞரால் சார்லி சுட்டுக் கொல்லப்பட்டார்.

ADVERTISEMENT

இதனையடுத்து கைதான டைலர் ராபின்சன் அளித்த வாக்குமூலத்தில், “கிர்க் பரப்பி வந்த வெறுப்பு பிரச்சாரத்திற்கு பதிலடியாக அவரைக் சுட்டுக்கொன்றேன்” எனத் தெரிவித்தார்.

அவர் மீது கொலை உட்பட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், மரண தண்டனையை கோர உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதற்கிடையே சார்லியின் மரணத்தைத் தொடர்ந்து தென்மேற்கு மாநிலமான அரிசோனாவில் கடந்த 21ஆம் தேதி நடந்த இரங்கல் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட 60,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது சார்லியின் மனைவி எரிகா கிர்க், நா தழுதழுக்க பேசியது அரங்கில் இருந்த அனைவரையும் கண்கலங்கச் செய்தது.

அவர் பேசுகையில், “என் கணவர் சார்லி, அவர் தனது உயிரைப் பறித்த இளைஞர் போன்ற வயதுடையவர்களுக்கு ஆதரவாகவே இருக்க விரும்பினார்.

இயேசு சிலுவையில் அறையபட்டபோது, “தந்தையே தாங்கள் செய்வது என்னது என்று அறியாமல் இவர்கள் செய்கின்றனர், அதனால் அவர்களை மன்னியும்” என சொன்னது போன்று நானும் அந்த மனிதனை அந்த இளைஞனை மன்னிக்கிறேன்” எனக் கூறி மேடையிலேயே உடைந்து அழுதார்.

மேலும் அவர், “வெறுப்புக்கான பதில் வெறுப்பு அல்ல. நான் அவனை மன்னிக்கிறேன், ஏனென்றால் அது இயேசு செய்ததுதான். சார்லி உயிரோடு இருந்திருந்தால் அவரும் அதைத்தான் செய்வார்” எனக் கூறினார் எரிகா.

எரிகாவின் செயலை அரங்கத்தில் இருந்த அனைவருமே ஒட்டுமொத்தமாக கோஷம் எழுப்பி வரவேற்று ஆதரவு கொடுத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share