ஓ.பி.எஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் மூவரும் இணைந்து பசும்பொன் வந்தால் பதில் சொல்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 118 ஆவது ஜெயந்தி மற்றும் 63 ஆவது குரு பூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான இன்று குருபூஜை விழா நடைபெறுகிறது. இதனால் பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சியினருடன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதற்கிடையில் இன்று காலை மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இருவரும் சந்தித்து பேசினர். இருவரும் ஒரே காரில் பசும்பொன் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கொடி கட்டிய காரில் வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்களுடன் டிடிவி தினகரனும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தேவர் சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்திய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது ஒரு உயர்ந்த இடம். தேவர் ஐயா என்பவர் அனைத்து மதத்தை சார்ந்தவர்களுக்கும், சாதியை சார்ந்தவர்களுக்கும் பொதுவானவர். தேசபக்தி மிக்கவர். தேசத்திற்காக பாடுபட்டவர். மக்களுக்காக பாடுபட்டவர். அப்படியிருக்கும் ஒருவருக்கு அனைவரும் புகழ் சேர்ப்பது பெருமைக்குரியது” என்றார்.
இதையடுத்து ஓ.பி.எஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் மூவரும் இணைந்து பசும்பொன் வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ” தெரியவில்லை.. வந்தால் தான் தெரியும்.. வந்தால் நான் பதில் சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
