நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. எங்களது நிதித்துறை நிபுணர்கள் மூலமாக, எந்தெந்த வகைகளில் வருவாயைப் பெருக்க முடியுமோ, அந்த வழிகளில் தேவையான நிதியைப் பெற்று இத்திட்டங்களைச் செயல்படுத்துவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (பிப்ரவரி 24) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில், “ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10,000 கருணைத் தொகையாக வழங்கப்படும்; வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,000, 12-ஆம் வகுப்பு வரை படித்துப் பதிவு செய்துள்ளோருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படும்” என்பது உள்ளிட்ட 6 முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
நிதியைக் கையாள்வது எப்படி?
தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இந்தத் திட்டங்கள் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்காதா? இதை எப்படிச் சமாளிப்பீர்கள்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “கொரோனா காலத்தில்கூட ஒரு ரூபாய் வரி வருமானம் இல்லாத போதே சிறப்பான ஆட்சிக் கொடுத்த அரசாங்கம் அதிமுக அரசு. எனவே, வருவாயைப் பெருக்கி நாங்கள் அறிவித்துள்ள நலத்திட்ட உதவிகளை முழுமையாக வழங்கப்போகிறோம்” என்றார்.
வரி உயர்த்தப்படுமா?
வருவாயை உயர்த்துவதற்கு நீங்களும் வரி உயர்த்தப் போகிறீர்களா? என்ற கேள்விக்கு, “அதை இப்பொழுதே எப்படிச் சொல்ல முடியும்? நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. எங்களது நிதித்துறை நிபுணர்கள் மூலமாக, எந்தெந்த வகைகளில் வருவாயைப் பெருக்க முடியுமோ, அந்த வழிகளில் தேவையான நிதியைப் பெற்று இத்திட்டங்களைச் செயல்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்.
வேலைவாய்ப்புத் திட்டங்கள்
வேலையில்லாத பட்டதாரிகளுக்கு நிதியுதவி தருவதோடு, அவர்களுக்கு வேலை வழங்க எடுக்கப்படும் முயற்சிகள் குறித்த கேள்விக்கு,”மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், 2015-ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு சுமார் ரூ.2,42,000 கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டது. அதன் மூலம் போடப்பட்ட 74 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்து, இன்று பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைத்துள்ளது.
அதே வழியில் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, ரூ.3,05,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதன் மூலமாகவும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. அதே குறிக்கோளோடு, அதிமுக அரசு மீண்டும் வந்த பிறகு புதிய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். அதுவரை, வேலையில்லாமல் மன உளைச்சலில் இருக்கும் பட்டதாரிகளுக்கு முதல்கட்டமாக இந்த உதவித்தொகை வழங்கப்படும்” என்றார்.
“தமிழகத்தில் மொத்தம் எத்தனை குடும்பங்களுக்கு இந்தத் தொகை தர வேண்டியிருக்கும்? ரூ.10,000 வழங்குவதற்குப் பதிலாக வரியைக் குறைக்கலாமே?” என்ற கேள்விக்கு, “மக்கள் தற்போது விலைவாசி உயர்வால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உயிருக்குப் போராடுபவர்களைக் காப்பாற்ற எப்படி ‘வென்டிலேட்டர்’ அவசியமோ, அதுபோலத்தான் இந்தத் திட்டமும். இந்த ஆட்சியில் மக்கள் அந்த அளவிற்குத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, விலைவாசி உயர்விலிருந்து மக்களைக் காப்பாற்றவே இந்தத் தொகையை அறிவித்துள்ளோம்” என்றார்.
கூட்டணி பேச்சுவார்த்தை
திமுக கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக எப்போது தொடங்கும்? என்ற கேள்விக்கு, “திமுக பல கட்சிகளை நம்பித்தான் தேர்தலில் போட்டியிடுகிறார்கள், அதனால் அவர்கள் முன்கூட்டியே தொடங்கி விட்டனர். நாங்கள் கூட்டணி குறித்துப் பொறுமையாக ஆலோசித்து வருகிறோம். எந்தெந்தக் கட்சிக்கு எவ்வளவு தொகுதி என்பது குறித்து விரைவில் பேச்சுவார்த்தையைத் தொடங்குவோம்” என்று அவர் தெரிவித்தார்.
