ADVERTISEMENT

அதிமுக பிரமுகர் படுகொலை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

EPS

சிலைமான் அருகே இன்று (பிப்ரவரி 6) காலை அதிமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் சிலைமான் அருகில் உள்ள சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். அதிமுக பிரமுகரான இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இன்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் கடையைத் திறக்கச் சென்றபோது, நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தகராறு செய்துள்ளது.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்த நிலையில், சிலைமான் போலீசார் செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், செந்தில்குமாரின் டீக்கடையில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மது அருந்தியதாகவும், அதை செந்தில்குமார் கண்டித்ததால் இந்தக் கொலை நடைபெற்றதாகவும் தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

இச்சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் செந்தில் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

செந்தில் தனது டீக்கடையை திறக்கச் சென்ற போது, அங்கு போதையில் இருந்த ஆசாமிகளை இடையூறு செய்யாமல் செல்லுமாறு கூறியதை ஏற்காதவர்கள், அவரை கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

ADVERTISEMENT

நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். இந்த திமுக ஆட்சியில் எந்தவித குற்றத்தை செய்வதற்கும் குற்றவாளிகளுக்கு பயம் என்பது துளி கூட இல்லை.

இப்படி கொடுரமாக தலை துண்டித்து கொலை செய்யும் அளவிற்கு எங்கிருந்து குற்றவாளிகளுக்கு தைரியம் வருகிறது? சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வக்கில்லாத ஒரு கையாலாகாத பொம்மை முதல்வர்
ஸ்டாலினின் திமுக ஆட்சி இங்கு நடப்பதால் தானே ?

தனது ஆட்சியில், ஒரு சாமானியர் காலையில் தனது டீக்கடையைப் பாதுகாப்புடன் திறக்க முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான நிலை? இதற்கு ஸ்டாலின் தலைகுனிய வேண்டும்.

உயிரிழந்த செந்தில் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ,

செந்தில் அவர்களைப் படுகொலை செய்த வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.”என தெரவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share