பெண்கள் குறித்த அதிமுக தலைவர்களின் சர்ச்சை பேச்சுக்கு நடவடிக்கையா? – எடப்பாடி விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

EPS

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்து அதிமுக மார்ச் 17ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இந்தப் போராட்டங்களில் அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், திமுக அரசின் ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ திட்டத்தை விமர்சிக்கும் வகையில் நடிகை நயன்தாராவை உதாரணமாகக் குறிப்பிட்டு பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.

ADVERTISEMENT

அதேபோல், திண்டுக்கல் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசனும் பெண்கள் தொடர்பான முகம் சுழிக்கும் கருத்துக்களைத் தெரிவித்தார். கரூரில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெண்களின் உருவ அமைப்பை கேலி செய்யும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனும் பெண்கள் குறித்த இழிவான கருத்துக்களை முன்வைத்தார். அதிமுக முக்கிய நிர்வாகிகளின் இந்த பேச்சுகளுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

ADVERTISEMENT

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “கூட்டத்தில் பேசும்போது தவறான வார்த்தை வந்திருக்கிறது. அந்தத் தவறை உணர்ந்து அதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டார்.”என்றார்.

இனி அப்படி பேசக்கூடாது என்று நீங்கள் சொல்லி உள்ளீர்களா?” என்ற கேள்விக்கு, “ஒருவர் தான் சொன்ன கருத்து தவறு என்று உணர்ந்த பிறகு அதற்கு மன்னிப்பு கோரிய பிறகு அதைப் பற்றி விவாதம் செய்வது பொருத்தமாக இருக்காது” என்று பதிலளித்தார்.

ADVERTISEMENT

நயன்தாரா குறித்த பேச்சுக்கு சி.வி. சண்முகம் மன்னிப்பு கேட்டுள்ள நிலையில், திண்டுக்கல் சீனிவாசன் எம்.ஆர். விஜயபாஸ்கர், அம்மன் அர்ஜுனன் ஆகியோர் தங்கள் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து எந்த விளக்கமோ மன்னிப்போ இதுவரை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share