எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக தொடரும் பட்சத்தில் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் இன்று (செப்ட்மபர் 24) நடைபெற்றது.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனிடம் அண்ணாமலை சந்தித்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “ஏற்கனவே அவர் என்னை சந்திப்பேன் என்று சொல்லியிருந்தார். நான் வெளியூரில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை. நான் வந்ததும், ஞாயிற்றுக்கிழமை மாலை போன் செய்துவிட்டு வந்தார். நாங்கள் ஊடகத்துக்கு தெரியாமல் சந்திக்கவில்லை.
நண்பர்கள் என்ற முறையில் சுமார் 1 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவர் தொலைக்காட்சியில் என்ன சொன்னாரோ அதைத்தான் பேசினோம். அரசியலில் இருப்பதால் அரசியல் மட்டும்தான் பேச வேண்டும் என்றில்லை. நண்பர்களாக இருப்பதால் பல விஷயங்கள் பேசினோம்.
அவர் கூட கேரளா சென்றுவிட்டு சிலோன் போவதாக சொன்னார்.
ஆனால் அண்ணாமலை மாநில தலைவர் கிடையாது. அவர் எதற்கு போய் பார்த்தார் என்று ஊடகங்களில் பேசுகிறார்கள். அது அவர்களுடைய கருத்து. அண்ணாமலை மாநில தலைவராக இருந்த போது அவர் முயற்சி எடுத்துதான் எங்களை கூட்டணிக்குள் கொண்டு வந்தார்” என்று கூறினார்.
மேலும் அவர், “என்னை பொறுத்தவரை பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருந்தால் கூட்டணியில் சேர்வதை மறு பரிசீலனை செய்வே முடியாது.
அவர்கள் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக அவர்களால் துரோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட நாங்கள் அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வது எனக்கு நியாயமாக தெரியவில்லை.
2021 தேர்தலின் போதே டிடிவி தினகரன் கூட்டணிக்கு வர தயாராகத்தான் இருந்தார். இப்போது வருவதற்கு என்ன என்று தொலைக்காட்சி விவாதங்களில் பேசுகின்றனர். எப்படி இப்படி பேசுகிறார்கள் என தெரியவில்லை. எங்களுக்கு துரோகம் செய்த பழனிசாமிக்கு எங்களை சந்திக்க எப்படி தைரியம் வரும்.
ஆனால் சில நலம்விரும்பிகள், அனுபவமிக்கவர்கள் டெல்லியை சேர்ந்தவர்கள் அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓரணியில் வர வேண்டும் என்று சொல்லும் போது, அவர்கள் மீதான மரியாதையில், நீங்கள் வேண்டுமானால் முயற்சித்து பாருங்கள் என்று சொன்னேன். அதைத்தவிர கூட்டணிக்கு வருகிறேன் என்று சொல்லவில்லை” என்று கூறினார்.
மேலும் அவர், ‘கூட்டணியை விட்டு விலகியபோது, அண்ணாமலை தொலைபேசியொல் தொடர்பு கொண்டு அவசரப்பட வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்’ எனவும் குறிப்பிட்டார்.