சேலத்தில் நாளை நடைபெறும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் நுழைவுச் சீட்டு பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிடும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், நாளை சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நாளை (பிப்ரவரி 13ஆம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று, சேலம் சீலநாயக்கன்பட்டி, KVP கார்டன் உள்வளாகத்தில் மதியம் 12.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி இல்லை.அனுமதிச் சீட்டு பெறாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் நேரில் வருவதை கண்டிப்பாகத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.”இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
