தேரா மன்னா செப்புவதுடையேன்! தேர்தல் மோசடி என்னும் தேசியச் சீரழிவு!

Published On:

| By Minnambalam Desk

ராஜன் குறை 

மானுட சமூகங்களெல்லாம் கூட்டுறவுடன் வாழவேண்டும், வேலைகளைப் பகிர்ந்துகொண்டு பொது நன்மை என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் சமூக வாழ்வு துலங்க வேண்டும் என்ற பண்பாடு தோன்றியபோதுதான் அரசு, அரசாட்சி ஆகிய வடிவங்கள் அவசியமாயின. அது எவ்வகையான அரசானாலும், ஒரு குழுவினராலும் வழி நடத்தப்பட்டாலும், அந்த குழுவினர் ஆன்றோர், சான்றோர், பிரபுக்கள், மதகுருமார்கள், நிலப்பிரபுக்கள், படைத்தளபதிகள் என யாராக இருந்தாலும், அல்லது ஒற்றை முடியரசன், அரசி என்று அதிகாரத்தின் பருவடிவம் அமைந்தாலும், இறையாண்மை என்ற கருத்தாக்கம் சமூக முழுமையின் பொது நன்மையின் குறியீடாகக் கருதப்பட்டது. அவ்வாறு பொது நன்மையின் குறியீடு என்பதால் அது புனிதமாகவும் கருதப்பட்டது.  

இவ்வாறு புனிதமான பொது நன்மையின், ஒழுங்கின் குறியீடாக விளங்கும் இறையாண்மை என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அந்த இறையாண்மையின் அடையாளமாக விளங்கும் அரசர்கள் ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என கருதப்பட்டது. அப்போதுதான் பொதுமக்கள் அனைவரும் சட்டம் ஒழுங்கிற்கு உட்பட்டு நடப்பார்கள். இல்லாவிட்டால் அனைவரும் தன்னிச்சையாக செயல்பட்டால் சமூக இயக்கம், அதன் ஒத்திசைவு சீர்குலைந்துவிடும். 

ADVERTISEMENT

பொதுவாக ஆணாதிக்க நிலவுடமை சமூகத்திலேயே இத்தகைய சமூக ஒழுங்குகள் உருவானதால் இந்த இறையாண்மையின் புனிதத்தை அரசர்களின் மனைவிகள் குறித்த சொலவடையாக, கதையாடலாக மாற்றினார்கள். “சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்” என்பது சொலவடை. அரசியல் தத்துவத்தில் இதை அரசியின் கற்பு என்று பெண்பால் தொடர்பானதாகப் பார்க்காமல் இறையாண்மையின் நெறி பிறவாழ்மையாகவே பார்ப்பார்கள். ராமாயணத்திலும் ராமராஜ்யம் என்ற இலட்சியத்தின் பகுதியாக ராமன் தன்னுடைய குடிகளில் ஒருவன் சீதை ராவணணால் கட த்திச் செல்லப்பட்டதைக் குறித்து பேசியவுடன், நிறைமாத கர்ப்பணியான சீதையை காட்டுக்கு அனுப்பியதாகச் சொல்வார்கள். அதாவது அரச நெறி ஐயத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதால் ராமன் தியாகம் செய்ததாக பொருள்படும். 

இதே தத்துவம் தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில் மேலும் சிறப்பாக வெளிப்படுகிறது. அதிலும் கண்ணகி பத்தினித் தெய்வமாகக் கொண்டாடப் பட்டாலும், அவரது சிறப்பு அரசனை தட்டிக் கேட்பதில் வெளிப்படுகிறது. சரியாக விசாரிக்காமல் தன் கணவன் கோவலனுக்கு மரண தண்டனை விதித்த பாண்டியன் அவைக்கு தலைவிரி கோலமாக கண்ணகி சினத்துடன் சென்று கேள்வி கேட்கும் காட்சி அரசநீதியின் மாண்பினை மிகச்சிறப்பாக வெளிப்படுத்துகிறது. “தேரா மன்னா செப்புவதுடையேன்” எனத்தொடங்கும் கண்ணகியின் உரை புகழ்பெற்றது. அதன் இறுதியில் கோவலன் விற்பனைக்குக் கொண்டு வந்தது தன்னுடைய சிலம்பினையே என்று அவர் நிரூபித்ததும் அரசன் தன் தவறுக்கு வருந்தி தனது கைகளிலிருந்து செங்கோல் நழுவ உயிர் துறக்கிறான். இங்கே செய்யாத குற்றத்திற்காக அரசன் மனைவி தண்டிக்கப்படுவதில்லை. தன் செங்கோல் நெறி தவறி நடந்ததற்காக அரசனே உயிர் துறக்கிறான். பத்தினியின் சிறப்பு மட்டுமின்றி இறையாண்மையின் புனிதமும் வலியுறுத்தப் படுகிறது. 

ADVERTISEMENT

நவீன மக்களாட்சிக் குடியரசிலும் அந்த பண்டைய இறையாண்மையின் புனிதம் என்ற நோக்கினை போற்றுவதாகத்தான் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்ட போது அதில் தமிழ்நாட்டு சைவ ஆதீனம் இந்தியக் குடியரசிற்கு சின்னமாக வழங்கிய செங்கோலினை நாடாளுமன்ற வளாகத்தில் அவைத்தலைவர் இருக்கைக்கு அருகே நிறுவியது பாஜக அரசு. காலத்திற்குப் பொருந்தாத மன்னராட்சியின் சின்னமானாலும் அதில் அடங்கியுள்ள இறையாண்மை நீதி என்ற விழுமியத்தினை உணர்த்துவதாக பாஜக-வினர் கருதலாம். ஆனால் பாஜக அரசின் செயல்பாடுகள் அவ்வாறு அமையவில்லை. ஏன் என்று பார்ப்போம். 

மக்களாட்சியில் இறையாண்மை என்பது மக்களிடமே இருக்கிறது. அவர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளே நாட்டை ஆளவேண்டும் என்பதுதான் இன்றைய இறையாண்மையின் புனிதம். அது மக்களின் வாக்குச் சீட்டு என்ற வடிவத்தில்தான் இருக்கிறது. அந்த வாக்களிக்கும் தேர்தலும், அதனை நடத்தும் தேர்தல் ஆணையமும் ஐயத்திற்கு அப்பால் இருந்தால்தான் நாட்டின் இறையாண்மை காக்கப்படும். மக்கள் அரசிற்கு கட்டுப்பட்டு இருப்பார்கள். தேர்தல்களில் முறைகேடுகள் நடக்கின்றன, தங்கள் வாக்குகளுக்கு மதிப்பில்லை என்ற ஐயம் மக்களுக்கு வந்தால் அது சமூக ஒழுங்கை முற்றிலும் சீரழித்துவிடும். செடியின் வேரில் வெந்நீரை ஊற்றுவது போன்றது அது. 

ADVERTISEMENT

தேசபக்திக்கு உரிமை கொண்டாடும் பாஜக, செங்கோலை பூஜிக்கும் பாஜக, தேர்தல் என்ற இறையாண்மையின் புனித வடிவத்தை மதிப்பிழக்கச் செய்வது தேச நலனுக்கு முற்றிலும் எதிரானது என்பதை பாஜக ஆதரவாளர்கள் உணர வேண்டும். பாஜக அரசுதேர்தல் ஆணையம் தொடர்பான சட்டங்களை மீண்டும், மீண்டும் மாற்றி ஆணையத்தை தன் கைப்பிடிக்குள் கொண்டுவருவதாகக் கருத இடம் அளிக்கிறது. 

முதலில்  தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்கியது. உச்ச நீதிமன்றம் அதற்கு எதிராக தீர்ப்பளித்தபோது சட்டத்தையே மாற்றியது. பின்னர் மஹாராஷ்டிர தேர்தலில் கடைசி ஒரு மணி நேரத்தில் ஏராளமான வாக்குள் பதிவானதாக ஆணையம் கூறியபோது காங்கிரஸ் சிசிடிவியில் பதிவான காணொலிக் காட்சிகளைக் கேட்டது. உடனே ஒன்றிய பாஜக அரசு காணொலிக் காட்சிகளை வழங்க வேண்டியதில்லை என்று சட்ட சீர்திருத்தம் செய்தது. இவ்வாறு மேலும் மேலும் ஐயம் வலுக்கும் விதமாகவே ஒன்றிய பாஜக அரசு செயல்படுகிறது. 

சண்டிகர் மேயர் தேர்தலில் சிசிடிவி காமிரா முன்பாகவே பாஜக நிர்வாகி வாக்குச் சீட்டுகளை சேதப்படுத்திய காட்சி பரவலாக வெளியாகியதுவை நீக்கவும் நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது. இந்த நிகழ்விலிருந்து பாடம் கற்றிருந்தால், அது தவறென்று நினைத்திருந்தால், பாஜக காணொலி காட்சிகளை கட்டாயம் அனைவருக்கும் பகிர வேண்டும் என்றுதானே சட்டம் இயற்றியிருக்க வேண்டும்? எதனால் காணொலி காட்சிகளை தரவேண்டாம், அழித்து விடலாம் என சட்டம் இயற்றுகிறது?  

மின்னணு வாக்கு இயந்திரம் 

மின்னணு வாக்கு இயந்திரம் குறித்த வலுவான ஐயங்கள் நாடெங்கும் நிலவுகின்றன. தேர்தல் ஆணையம் அவை பாதுகாப்பானவை என்று அறுதியிடுகிறது. அதில் பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கையை முதலிலேயே பதிவு செய்யப்பட்ட நிரல்களின் மூலம் மாற்ற முடியுமா, வெளியிலிருந்து அந்த இயந்திரத்தின் செயலிகளுக்கு செய்தி அனுப்பி மாற்ற முடியுமா போன்ற பல கேள்விகளுக்கு அது உறுதியாக இயலாது என்று கூறி வருகிறது.

ஆனால் மக்கள் மனதில் ஐயங்கள் அதிகரிக்கின்றன. மேலும், தேர்தல் முடிந்த பிறகு வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன் மின்னணு பெட்டிகளை மாற்றிவிடலாம் என்ற ஐயமும் நிலவுகிறது. அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தினுள் ஐயத்திற்குரிய நடமாட்டங்கள் பல இடங்களில் காணப்படுவதாக புகார்கள் எழுகின்றன. தொடர்பில்லாத இடங்களில் மின்னணு இயந்திரங்கள் அநாமத்தாக கிடக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்த கேள்விகளும், ஐயங்களும் நிலவுகின்றன. இப்படியாக ஐயங்களால் பெரிதும் சூழப்பட்டதாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளன. 

ஐயத்தைக் களைவதற்காக விவிபாட் (VVPAT- Voter Verified Paper Audit Trail) என்ற வாக்காளர் சரிபார்ப்புச் சீட்டு அறிமுகப்படுத்தப் பட்டது. மின்னணு இயந்திரத்தில் தான் விரும்பும் சின்னத்திற்கு எதிரே உள்ளே பொத்தானை வாக்காளர் அமுக்கியவுடன், அருகிலுள்ள பெட்டியின் திரையில் ஒரு சீட்டில் அந்த சின்னம் அச்சிடப்பட்டு சிறிய கண்ணடித் திரைக்குப் பின் காட்டப்படும். வாக்காளர் அது தான் தேர்ந்தெடுத்த சின்னம்தான் என உறுதிப்படுத்திக்கொண்டவுடன் அது சீட்டு அந்த பெட்டியினுள் விழுந்துவிடும். இந்த முறை அறிமுகம் ஆனவுடன், அந்த விவிபாட் சீட்டுக்களை முழுமையாக எண்ணினால் மின்னணு இயந்திரங்கள் மீதான ஐயம் குறையுமே என்ற கோரிக்கை எழுந்தது. 

உச்சநீதிமன்றத்தில் தேர்தல் சீர்திருத்தத்திற்கான குடிமைச் சமூக அமைப்பு ஒன்று 100% விவிபாட் சீட்டுகளை எண்ணச் சொல்லி வழக்குத் தொடுத்தது. உச்சநீதிமன்றம் ஏப்ரல் 2024-இல் வழங்கிய தீர்ப்பில் அவ்வாறு உத்திரவிட மறுத்துவிட்டது. ஒரு தொகுதிக்கு ஐந்து வாக்குச் சாவடிகளில் பதிவான விவிபாட்டை எண்ணி ஒப்பிட்டுப் பார்த்தால் போதும் என்று கூறிவிட்டது.   

பல்வேறு அரசியல் கட்சிகளும் 100% விவிபாட் சீட்டுகளை எண்ணுவதை ஆதரிக்கின்றன. இது பெருமளவு மின்னணு இயந்திரங்களின் புதிர்த்தன்மையைக் குறைக்கும் என்பது நிச்சயம். ஆனால் தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் அப்படி முழுமையாக எண்ண காலதாமதம் ஆகும் என்று கூறி மறுக்கின்றன. மக்களுக்கு தேர்தல் முறையில் நம்பிக்கை வருவது முக்கியமா, விரைவில் முடிவுகளை அறிவிப்பது முக்கியமா என்றால் நாட்டு நலனை விரும்புவர்கள் யாரும் தாமதமானால் பரவாயில்லை முழுமையாக எண்ணுவதுதான் நல்லது என்றே கூறுவார்கள். அதற்கு முக்கியமான காரணம் பதிவான மொத்த வாக்குகள் எண்ணிக்கையில் தேர்தல் ஆணையம் செய்யும் மாற்றங்கள்தான். 

திடீரென அதிகரிக்கும் பதிவான ஓட்டுக்கள் 

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஓட்டுப் பதிவு முடிந்தவுடன் எத்தனை வாக்குகள் பதிவாயின என்பதை மின்னணு இயந்திரம் கூறிவிடும். இதை தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரிகள் தெரிவித்து விடுகிறார்கள். ஒரு தொகுதியில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலிருந்தும் தகவல் கிடைத்தவுடன், தேர்தல் ஆணையம் அதன் கூட்டுத் தொகையை அறிவிக்கிறது. பிரச்சினை என்னவென்றால் சிறிது இடைவெளிக்குப் பிறகு அதிக வாக்கு எண்ணிக்கையை மீண்டும் அறிவிப்பதுதான். 

காரணம் கேட்டால் கூட்டல் பிழை, கடைசி நேரத்தில் அதிக வாக்குகள் பதிவாயின என பல காரணங்களைக் கூறுகிறார்கள். இது மின்னணு வாக்குப் பெட்டிகள் மாற்றப்படுகின்றனவா என்ற ஐயத்தை உருவாக்குகிறது. ஏற்கனவே ஒரு கட்சிக்கு சாதகமாக வாக்குகள் இடப்பட்டு வைத்திருந்த பெட்டியை, உண்மையில் பதிவான பெட்டிக்குப் பதிலாக மாற்றினால் மீண்டும் கூட்டும்போது மொத்த வாக்கு எண்ணிக்கை மாறத்தானே செய்யும் என்ற ஐயம் ஏற்படுகிறது. 

கடைசி ஒரு மணி நேரத்தில் நிறைய வாக்குகள் பதிவாயின என்று ஆணையம் கூறும்போது தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அப்படி நடக்கவில்லை என்று மறுக்கிறார்கள். சரி பார்க்கலாம் என்று வாக்குப்பதிவு மையங்களில் எடுக்கப்பட்ட காணொலிகளைக் கேட்டால் அதனைத் தர மறுக்கிறது ஆணையம். எதிர்கட்சிகளின் சந்தேகம் வலுக்கிறது. 

பாஜக கட்சிக்காரர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் பல தொகுதிகள், மாநிலங்களில் பாஜக தோற்கிறதே என்று கேட்கிறார்கள். அப்படி மோசடி செய்வதானால் எப்படி எதிர்கட்சிகள் சில பல இடங்களில் வெல்ல முடியும் என்று கேட்கும்போது அது நியாயமாகத்தான் சில பேருக்குத் தொனிக்கிறது. பிரச்சினை என்னவென்றால், எல்லா தொகுதிகளிலும் பாஜக வென்றால் அது சுத்தமாக நம்பகத்தன்மை இழந்துவிடும் என்று குழந்தைக்குக் கூட தெரியும். அதனால் போட்டி கடுமையாக உள்ள தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து அதில் சில மையங்களில் எண்ணிக்கையை கூட்டுவதன் மூலம் ஒட்டுமொத்த தேர்தல் முடிவில் பெரும்பான்மை பெறுகிறார்களோ என்ற ஐயம்தான் இப்போது வலுத்துள்ளது. 

Electoral rigging is a national disaster

ராகுல் காந்தியின் அணுகுண்டு 

இந்த ஐயத்தை ஒட்டி ராகுல் காந்தி மிக முக்கியமான குற்றச்சாட்டுகளை ஆதார பூர்வமாக இந்த வாரம் வைத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் 2023-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 224 தொகுதிகளில் 135-இல் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. வெற்றி பெற்ற காங்கிரஸ் அரசு மகளிர் உதவித் தொகை போன்ற பல திட்டங்களை செயல்படுத்தியது. ஆனால் அடுத்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கார்நாடக மாநிலத்தில்  28 தொகுதிகளில் பாஜக 17 தொகுதிகளில்  வென்றது. எதனால் இப்படி ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்த து என்பது ஆய்வுக்குரியதானது. தேசிய அளவில் மேலும் ஒரு 25 தொகுதிகளில் தோற்றிருந்தால் மோடி மூன்றாவது முறை பிரதமராகியிருக்க முடியாது என்னும்போது இந்த 17 தொகுதிகள் முக்கியத்துவம் பெருகின்றன. 

வாக்காளர் பட்டியலை தயாரிப்பதில் சில மோசடிகள் நடக்கின்றனவோ என்ற ஐயம் காங்கிரசிற்கு மகாராஷ்டிர மாநில தேர்தலில் உருவானது. அதையொட்டி கர்நாடகாவில் மத்திய பெங்களூரு தொகுதியில் விரிவாக ஆய்வு செய்ய காங்கிரஸ் முடிவு செய்தது. ஆனால் வாக்காளர் பட்டியலை தேடிப்பார்க்க க் கூடிய கணணித் தரவுகளாகத் (searchable data base) தருவதற்கு தேர்தல் ஆணையம் மறுத்து விட்டதால், அவர்கள் தந்த மலைபோன்ற அச்சிடப்பட்ட காகித பட்டியல்களை ஆறு மாதம் விரிவாக ஆராய்ந்து சரிபார்த்தது. 

அப்போது பல திடுக்கிடும் முறைகேடுகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. ஒரே சிறிய வீட்டில் எண்பது வாக்களர்கள் இருப்பதாக பட்டியல் சொல்கிறது; நேரில் சென்றால் அவர்கள் யாரும் அங்கே வசித்ததேயில்லை என்று தெரிய வருகிறது. ஒரே நபரின் பெயர் பல விலாசங்களில் பதிவாகியுள்ளது. இப்படியான பல முறைகேடுகளை ராகுல் காந்தி அம்பலப் படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து வாக்குத் திருட்டு என்பதற்கு எதிரான பல போராட்டங்களை காங்கிரஸ் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதிலும் வாக்காளர் பட்டியலை சர்ச்சபிள் டேடா பேசாகத் தரக்கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது. இது மக்களாட்சியை காப்பதற்கு மிக முக்கியமான கோரிக்கையாகும். இதைத் தருவதில் தேர்தல் ஆணையத்திற்கு என்ன சிக்கல் என்பதே கேள்வி. அதனிடம் உள்ள தகவலை அப்படியே மென்பொருள் வடிவில் அனைவருக்கும் தராமல் ஏன் அச்சிட்டுத் தரவேண்டும் என்பது புதிராக உள்ளது. யாரும் அதில் உள்ள கோளாறுகளை ஆராய்ந்துவிடக் கூடாது என்பதுதான் ஒரே நோக்கமாக இருக்க முடியும் என்பது தெளிவு.  

பீஹார் வாக்களர் பட்டியல் சரிபார்ப்பு: அறுபத்தைந்து இலட்சம் பேரின் வாக்குகள் பறிப்பு

 இந்த சூழ்நிலையில் பீஹார் மாநிலத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில் தீவிர வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பினை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. பீஹாரில் குடியேறியுள்ள வங்கதேச அகதிகள் தேர்தலில் வாக்களிக்கிறார்கள். அவர்கள் இந்திய குடிமக்கள் இல்லை என்பதால் வாக்காளர் பட்டியிலிலிருந்து நீக்க வேண்டும் என்பதே காரணம் என சொல்லப்பட்டது. அதனால் வாக்காளர்கள் தாங்கள் குடிமக்கள் என்பதற்கான ஆதாரங்களை தரச் சொல்லி கேட்கப்பட்டார்கள். குடியுரிமையை சரிபார்ப்பது தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இல்லை நாங்கள் இறந்துபோனவர்கள், அகதிகள், புலம் பெயர்ந்து சென்றுவிட்டோர் ஆகியோரைத்தான் நீக்குவோம் என ஆணையம் உறுதியளித்தது. ஆனால் இப்போது அறுபத்தைந்து இலட்சம் வாக்காளர்கள் பேரை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக க் கூறியுள்ளது. 

அந்த அறுபத்தைந்து இலட்சம் பேரின் பட்டியலையும், நீக்கியதற்கான காரணங்களையும் கேட்டால் அவற்றைத் தரத் தேவையில்லை என்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சிபிஐ (எம்.எல்) கட்சி செய்த ஆய்வில் தகுதியுள்ள வாக்காளர்கள் நீக்கப்ப ட்ட தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ள செய்தி வையர் வலைத்தளத்தில் பதிவாகியுள்ளது. பஹதூர்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 818 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 57 பேர் இப்போது நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் அங்கே வசிப்பது கள ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதில் 2023 தேர்தல் வாக்காளர் பட்டியலில் இருந்த மோதிலால் யாதவ், தியானி யாதவ் என்ற இருவர், இப்போதும் அங்கே வசிப்பவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது மக்களின் வாக்குரிமையையே பறிக்கும் கொடும் செயலாக விளங்குகிறது. 

வாக்களார்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்குப் பதிலாக, தேர்தல் ஆணையம் வாக்காளர்களைத் தேர்வு செய்வது என்ற விநோத நடைமுறை துவங்கியுள்ளது. இந்திய மக்களாட்சியும், வெகுஜன இறையாண்மையும் பெரும் ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவே தெரிகிறது.     

கட்டுரையாளர் குறிப்பு:  

Rajan Kurai Electoral rigging is a national disaster

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share