ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
2025 பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தனது கட்சி சந்தித்த பெரும் தோல்வியைத் தொடர்ந்து, ரோகிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து விலகுவதாகவும், தனது குடும்பத்தைத் துறப்பதாகவும் அறிவித்துள்ளார்.
தனது அரசியல் விலகலுக்கும், குடும்பத்தைத் துறக்கும் முடிவுக்கும், தேஜஸ்வி யாதவின் நெருங்கிய உதவியாளரான சஞ்சய் யாதவ் மற்றும் தனது கணவர் ரமீஸ் ஆலம் ஆகியோர் அளித்த ஆலோசனையே காரணம் என்று ரோகிணி ஆச்சார்யா தனது எக்ஸ் பதிவில் பகிரங்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த முடிவுக்கு நான் முழுப் பழியையும் ஏற்றுக்கொள்கிறேன்” என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு முக்கிய அரசியல் தலைவரின் மகள், தேர்தலுக்குப் பிந்தைய தோல்வியை ஏற்றுக்கொண்டு, அரசியலில் இருந்து விலகுவதுடன், தன் குடும்பத்தையும் துறப்பதாக அறிவித்திருப்பது பீகார் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையையும் திரும்பி பார்க்கச் செய்துள்ளது.
பீகாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி, 202 தொகுதிகளில் வெற்றி பெற்று, மாபெரும் பலத்துடன் ஆட்சியைத் தக்க வைத்து கொண்டது. பாஜக 89 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி வெறும் 34 இடங்களுடன் தோல்வியைச் சந்தித்தது.
முன்னதாக, தேஜஸ்வியின் அண்ணன் தேஜ் பிரதாப் யாதவும் தனிக்கட்சி தொடங்கி செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
