ADVERTISEMENT

வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார் : ராகுல் பகீர் குற்றச்சாட்டு!

Published On:

| By Kavi

‘வாக்கு திருட்டு’ தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கும், SIRக்கும் எதிராக வாக்குரிமை யாத்திரை நடத்தினார். இதில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். யாத்திரையின் முடிவில் அடுத்ததாக வாக்கு திருட்டு என்ற அணுகுண்டுக்குப் பிறகு, ஹைட்ரஜன் குண்டு வரப்போகிறது என்று கூறியிருந்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் வாக்கு திருட்டு தொடர்பாக இன்று (செப்டம்பர் 18) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசி வருகிறார். இதில் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் கூறுகையில், “தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குறித்து நான் ஒரு வலுவான குற்றச்சாட்டை முன்வைக்கப்போகிறேன். இந்திய ஜனநாயகத்தை அழிப்பவர்களை,வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை இந்திய தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார். இதை ஆதாரத்துடன் சொல்கிறேன்.

ADVERTISEMENT

கர்நாடக மாநிலம் ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்குகளை நீக்கியிருக்கின்றனர். குறிப்பாக காங்கிரஸ் வலிமையாக உள்ள வாக்குச்சாவடிகளை குறி வைத்து வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அதிகமான நீக்கங்கள் இருந்த தொகுதிகளில் முதல் 10 வாக்குச்சாவடிகள் காங்கிரஸ் வலிமையுடையவை. 2018-இல் அந்த 10 வாக்குச்சாவடிகளில் 8-இல் காங்கிரஸ் வென்றது. இது சாதாரணமாக நடந்த ஒரு விஷயமாக தெரியவில்லை. திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது.

தனிநபர்கள் மூலம் அல்ல மென்பொருள் மூலம் நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடகா சிஐடி விசாரித்து வருகிறது.

ADVERTISEMENT

ஞானேஷ் குமார்… உங்கள் வேலையைச் செய்யுங்கள். நீங்கள் பதவி பிரமாணம் எடுத்துள்ளீர்கள். கர்நாடக சிஐடிக்கு விவரங்களை கொடுங்கள்.

வாக்கு திருட்டு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இருந்தே எங்களுக்கு தகவல் வருகிறது. மக்கள் வாக்கு திருட்டை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நான் எதிர்க்கட்சித் தலைவர், 100 சதவீத ஆதாரங்கள் இல்லாமல் எதையும் நான் சொல்ல மாட்டேன்.

கோதாபாய் என்ற பெயரில் போலியாக ஒரு லாகினை உருவாக்கி 12 வாக்காளர்களை நீக்கி விண்ணப்பித்துள்ளனர். ஆனால் தனது பெயரில் விண்ணப்பம் அளித்தது தெரியாது என கோதாபாய் பேட்டி அளித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில் ராகுல் காந்தி கூறுவது”தவறானது மற்றும் ஆதாரமற்றது” என்று கூறியுள்ள தலைமை தேர்தல் ஆணையம், எந்தவொரு வாக்காளர் பெயரையும் ஆன்லைனில் பொதுமக்களால் நீக்க முடியாது என்று விளக்கமளித்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் தேர்தல் ஆணையம், கர்நாடக மாநிலம் ஆலந்த் தொகுதியில் சில முயற்சிகள் நடந்ததாகவும், அது தோல்வியுற்றதாகவும், இதுகுறித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share