“ஜனநாயகத்தைக் காப்பதில் தமிழ்நாடு முன்னிலை” – தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

Published On:

| By Pandeeswari Gurusamy

Gyanesh Kumar

தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், சென்னையில் உள்ள தனியார் விடுதியில் இன்று (பிப்ரவரி 27) இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் ஒட்டுமொத்த நாட்டுக்கே முன்னுதாரணமாக உள்ளன. ஜனநாயகத்தைக் காப்பதில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. அண்மையில் 72 நாடுகள் பங்கேற்ற பன்னாட்டுத் தேர்தல் மாநாட்டில் தமிழ்நாடு குறித்துப் பெருமையாகப் பேசினோம்.

ADVERTISEMENT

வாக்காளர் புள்ளிவிவரங்கள்:

தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 18-19 வயதுடையவர்கள் 12.5 லட்சம் பேரும், 20-29 வயதுடையவர்கள் 1.05 கோடி பேரும் உள்ளனர். தமிழகம் முழுவதும் 75,000 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும்.

ADVERTISEMENT

தேர்தலின்போது அதிகாரிகள் அச்சமின்றிச் செயல்படலாம். சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்ச் செய்திகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். வாக்குப்பதிவு நாளன்று, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணிக்கையின்போது கடைசி இரண்டு சுற்றுகள் மீதமிருக்கும் போதே தபால் வாக்குகள் எண்ணப்படும். நாட்டுக்கே முன்னுதாரணமாக, மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் இந்தத் தேர்தல் நடத்தப்படும்.

வாக்காளர்களுக்கான வசதிகள்:

ADVERTISEMENT

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும். இது சாமானிய மக்கள் எளிதாகத் தங்கள் வேட்பாளரை அடையாளம் கண்டு வாக்களிக்க உதவும். மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாகச் செய்து தரப்படும். இதுவரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக 267 புகார்கள் வந்துள்ளன.

வாக்காளர் சேர்க்கை குறித்த அறிவிப்பு:

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்னரும், அதில் பெயர் இடம்பெறாத தகுதியுள்ள நபர்கள் ‘படிவம் 6’ மூலம் தங்கள் பெயரைச் சேர்க்கலாம். ‘படிவம் 7’ மூலம் பெயர் நீக்கம் செய்யவும், ‘படிவம் 8’ மூலம் முகவரி மற்றும் தொகுதி மாற்றத்திற்கும் விண்ணப்பிக்கலாம். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 7 முதல் 10 நாட்களுக்குள் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share