தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக 7 பேர் கொண்ட இந்திய தேர்தல் ஆணைய குழு இன்று பிப்ரவரி 11-ந் தேதி சென்னை வருகை தந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் 7 பேர் கொண்ட குழு இன்று சென்னை வருகை தந்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்களான பன்வார் பிரகாஷ், மணீஷ் கார்க், பவன் குமார் ஷர்மா, சஞ்சய் குமார், ஆஷிஷ் கோயல் உள்ளிட்டோர் அடங்கிய குழு சென்னை வந்துள்ளது.
இக்குழுவினர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மத்திய அரசு துறை அதிகாரிகள், தமிழக ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் பிப்ரவரி 13-ந் தேதி வரை ஆலோசனை மேற்கொள்வர். இதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேச தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.
