நம்பகத்தன்மையை இழந்து நிற்கும் தேர்தல் ஆணையம்!

Published On:

| By Kavi

ஜான் ஜே. கென்னடி

தற்போதைய முக்கியமான கேள்வி, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (Election Commission) தொடர்ந்து செயல்பட முடியுமா என்பது அல்ல; மக்களிடையே தொடர்ந்து நம்பிக்கையைப் பெற முடியுமா என்பதுதான். அந்த நம்பிக்கை இல்லையெனில், ஆணையம் மேற்கொள்ளும் தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் பொருளற்றவையாகிவிடும் அபாயம் உள்ளது.

ADVERTISEMENT

கேரளத்தில் ஒரு அரசியல் கட்சியின் முத்திரையுடன் கூடிய தேர்தல் ஆணையத்தின் கடிதம் வெளியான விவகாரம், “கவனக்குறைவால் நேர்ந்த பிழை” (Clerical error) என்று கூறித் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார், விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன, அமைப்பு தன்னைத்தானே சரிசெய்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது. 

மேலோட்டமாகப் பார்த்தால் இந்த விவகாரம் முடிந்துவிட்டது போலத் தோன்றலாம். ஆனால், இது ஏற்படுத்தியுள்ள சலசலப்பு அடங்குவதாகத் தெரியவில்லை. 

ADVERTISEMENT

ஜனநாயக நாடுகளில், நிறுவனங்கள் ஒரே நாளில் தம் நற்பெயரை இழந்துவிடுவதில்லை. அந்தச் சரிவு மிக மெதுவாக, உணர முடியாத அளவிலேயே நிகழும். சிறிய தவறுகள், சந்தேகத்திற்குரிய முடிவுகள், தற்காப்புத் தொனியிலான விளக்கங்கள் என இவை ஒவ்வொன்றாகச் சேரும்போதுதான் வீழ்ச்சி தொடங்குகிறது. தனித்தனியாகப் பார்க்கும்போது ஒவ்வொரு நிகழ்வும் சிறியதாகவோ அல்லது தற்செயலானதாகவோ தெரியலாம். ஆனால், அவை அனைத்தும் ஒன்றுசேரும்போது மாறுபட்ட கதையைச் சொல்கின்றன. 

கேரள விவகாரத்தை ஒரு தனித்த தவறாகப் பார்க்காமல், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைத் தொடர்ந்து சிதைத்து வரும் ஒரு போக்கின் பகுதியாகவே புரிந்துகொள்ள வேண்டும். தேர்தலின் நேர்மையைப் பாதுகாக்கும் பொறுப்புள்ள ஒரு நிறுவனத்திற்கு, அதன் நடைமுறைகள் எவ்வளவு முக்கியமோ, அந்த நிறுவனம் குறித்த மக்களின் பார்வையும் அவ்வளவு முக்கியம்.

ADVERTISEMENT

தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை அச்சத்தின் மூலமோ அல்லது வற்புறுத்தலின் மூலமோ பெறுவதில்லை. மாறாக, அது சார்புத்தன்மை அற்றது, விதிகளைச் சீராக அமல்படுத்தும், தேர்தல் முறையின் புனிதத்தைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையிலிருந்தே அந்த அதிகாரம் பிறக்கிறது. அந்த நம்பிக்கை பலவீனமடையும்போது, அதன் சாதாரண நடவடிக்கைகள்கூட சந்தேகத்தையே கிளப்பும். ஒருமுறை இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவது எளிதல்ல.

ஆழமான சிக்கல்

தற்போதைய சூழல், இத்தகைய நம்பிக்கை இழப்பையே காட்டுகிறது. தேர்தல் நடத்தை விதிகளைச் சிலருக்கு மட்டும் சாதகமாக அமல்படுத்துவது, வாக்காளர் பட்டியல் திருத்தங்களில் எழும் சந்தேகங்கள், அரசியல் கட்சிகளிடையே பாரபட்சமாக நடந்துகொள்வது போன்ற குற்றச்சாட்டுகள் ஒருவித அச்ச சூழலை உருவாக்கியுள்ளன.

இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்க்கும்போது அந்த நிறுவனம் பாரபட்சமானது என்பதற்கான தெளிவான ஆதாரமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஒரு ஆழமான சிக்கலைச் சுட்டிக்காட்டுகின்றன. அந்த நிறுவனத்தின் நோக்கம், அது குறித்து மக்கள் கொண்டுள்ள பார்வை ஆகியவற்றுக்கு இடையே ஒரு விரிசல் ஏற்பட்டுள்ளது என்பதே அந்தச் சிக்கல்.

இந்தச் சூழலில்தான், தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவியிலிருந்து நீக்கும் (Impeachment) கோரிக்கையை ஆராய வேண்டும். இது மிகையான அல்லது அடையாளப்பூர்வமான நடவடிக்கை எனச் சில தரப்பினரால் விமர்சிக்கப்படுகிறது. இத்தகைய விமர்சனங்கள் அந்த நிறுவனத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை எவ்வளவு தூரம் சிதைந்துள்ளது என்ற அடிப்படைச் சிக்கலைக் கவனிக்கத் தவறுகின்றன.

பதவி நீக்கம் (Dismissal): விதிவிலக்கான நடவடிக்கை

பதவி நீக்கம் என்பது அடிப்படையில் விதிவிலக்கான நடவடிக்கை. இது சாதாரணக் கருத்து வேறுபாடுகளுக்காகவோ அல்லது கொள்கை மாற்றங்களுக்காகவோ எடுக்கப்படுவதல்ல. விதிவிலக்கான நடவடிக்கை என்பதால்தான், சாதாரண வழிமுறைகள் பலனளிக்காத தருணங்களில் இது முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, பதவி நீக்கம் என்பது ஒரு தீவிரமான நடவடிக்கையா என்பதல்ல கேள்வி; மாறாக, வழக்கமான பதில்கள் இனிப் போதுமானதாக இல்லை என்ற நிலையைச் சூழல் எட்டிவிட்டதா என்பதுதான்.

நாடாளுமன்ற விவாதம், நீதித்துறை ஆய்வு அல்லது மக்கள் பங்களிப்பு போன்றவற்றின் மூலம் தேர்தல் ஆணையம் குறித்த பிரச்சினைகளைச் சரிசெய்யலாம் என்று வாதிடப்படுகிறது. இவை சந்தேகத்திற்கு இடமின்றி முக்கியமான வழிகள்தான். ஆனால், இத்தகைய வழிமுறைகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டும் நம்பிக்கை திரும்பவில்லை எனில், அவற்றின் தொடர்ச்சியான பயன்பாடு போதாமையாகவே உணரப்படும். இங்கே கேள்விக்குள்ளாகியிருப்பது ஒரு தனிப்பட்ட முடிவோ கொள்கையோ அல்ல; அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த நற்பெயர்.

இத்தகைய சூழலில், பதவி நீக்கத் தீர்மானத்தின் முக்கியத்துவம் அதன் முடிவில் மட்டும் இல்லை; அது எதைப் பிரதிபலிக்கிறது என்பதில்தான் உள்ளது. ஒரு நிறுவனம் மிக உயர்ந்த அரசியலமைப்புச் சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற அளவிற்கு அதன் மீதான நம்பிக்கை சரிந்துவிட்டதற்கான அதிகாரப்பூர்வமான அடையாளம். இது முறையானதும் வெளிப்படையானதுமான அதிருப்திப் பதிவை உருவாக்குகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் நிலைப்பாடுகளைத் தெளிவாகத் தெரிவிக்கக் கட்டாயப்படுத்துகிறது. நிறுவனத்தின் நேர்மை குறித்த கவலைகள் வெறும் தெளிவற்ற பேச்சுகளாக மறைந்துவிடாமல், அரசியலமைப்பு சார்ந்த வழிகளில் தீர்க்கப்படுகின்றன என்பதைப் பொதுமக்களுக்கு உணர்த்துகிறது.

தேர்தலின் நம்பகத்தன்மை என்பது ‘நம்பிக்கை’ என்ற கண்ணுக்குத் தெரியாத ஆனால் தவிர்க்க முடியாத அஸ்திவாரத்தின் மீதுதான் நிற்கிறது. குடிமக்கள் தேர்தலில் பங்கேற்பது வெறும் நடைமுறைகளுக்காக மட்டும் அல்ல; அந்த நடைமுறைகள் நடுநிலையோடு நிர்வகிக்கப்படும் என்று அவர்கள் நம்புவதால்தான். அந்த நம்பிக்கை சிதையத் தொடங்கினால், தேர்தல் என்பது வெறும் இயந்திரத்தனமான செயலாக மாறிவிடும். அது தொடர்ந்து செயல்படலாம், ஆனால் மக்களிடம் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

கேரள விவகாரம் கூறும் செய்தி

கேரள விவகாரம் இந்த நம்பிக்கை எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை விளக்குகிறது. “கவனக்குறைவால் ஏற்பட்ட பிழை” என்ற விளக்கம் உண்மையிலேயே சரியாக இருக்கலாம். இருப்பினும், தற்போதைய சூழலில் இத்தகைய விளக்கங்கள் மக்களைத் திருப்திப்படுத்துவதில்லை. அந்தத் தவறு உண்மையானதா என்பது மட்டுமல்ல கேள்வி; அது உண்மையானது அல்ல என்று ஏன் இத்தனை பேர் நம்புகிறார்கள் என்பதுதான் முக்கியம். அந்தச் சந்தேகமே நிறுவனத்தின் நற்பெயர் சரிந்து வருவதற்கான அறிகுறியாகும். இத்தகைய நெருக்கடியைத் தீர்க்க வெறும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மட்டும் போதாது. ஒரு அதிகாரியைப் பணிநீக்கம் செய்வது நடைமுறை ரீதியான பொறுப்புக்கூறலைக் காட்டலாம்; ஆனால் அது நிலவி வரும் பெரும் எதிர்மறைப் பார்வையை மாற்ற உதவாது. சிதைந்துள்ள நம்பிக்கையை மீட்டெடுக்க, குறிப்பிட்ட தவறுகளைச் சரிசெய்வதோடு மட்டுமல்லாமல், அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்தும் ஆழமான நடவடிக்கைகள் தேவை.

இங்குதான் ‘பதவி நீக்கம்’ என்பது பொருத்தமாகிறது. ஆனால், இத்தகைய நடவடிக்கை ஒரு அரசியலமைப்பு அமைப்பை அரசியல்மயமாக்கும் அபாயம் இருப்பதாக விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். இந்தக் கவலை கொள்கை அளவில் சரியானதாக இருந்தாலும், கசப்பானதொரு உண்மையை அது மறைக்கிறது. அந்த நிறுவனம் ஏற்கெனவே அரசியல்மயமாக்கப்பட்டுவிட்டது என்ற பொதுப் பார்வை நிலவுகிறது. அதை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயங்குவது அந்தச் சிக்கலைத் தீர்க்காது; மாறாக அது தொடரவே வழிவகுக்கும். உண்மையில், கவலைகள் நீடிக்கும்போது செயல்படத் தவறுவதுதான், அந்த நிறுவனம் இன்னும் மோசமான நிலைக்குச் செல்லக் காரணமாக அமையும்.

ஊடகங்களின் ஒரு பகுதியினர் காட்டும் எதிர்வினையும் கவலைக்குரியதாக உள்ளது. இந்த நெருக்கடியின் விளைவுகளை முழுமையாக ஆராய்வதில் ஒருவிதத் தயக்கம் நிலவுகிறது. எச்சரிக்கையுடன் செயல்படுதல், பதற்றத்தைத் தவிர்த்தல், நிறுவனத்தைச் சீர்குலைக்க வேண்டாம் எனப் பேசுவது போன்றவை சரியானதாகத் தோன்றினாலும், சில நேரங்களில் அவை கடினமான கேள்விகளைத் தவிர்க்கவே பயன்படுகின்றன. நிறுவனங்களைச் சங்கடங்களிலிருந்து பாதுகாப்பது ஊடகங்களின் வேலை அல்ல; அவற்றைத் தெளிவோடும் சுதந்திரத்தோடும் ஆய்வு செய்வதுதான் ஊடகங்களின் கடமை. தேர்தல் ஆணையம் போன்ற ஒரு முக்கியமான அமைப்பின் செயல்பாட்டில் நியாயமான கவலைகள் எழும்போது, அவற்றை முழுமையாக விசாரணை செய்வது ஊடகங்களின் பொறுப்பாகும்.

பதவி நீக்கம் கோருவதை ஒரு குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது. இது அடிப்படையில் ஜனநாயக முறையை நிர்வகிப்பதில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் ஒரு கோரிக்கையாகும். அரசியலமைப்புச் சட்ட அதிகாரிகளிடம் எதிர்பார்க்கப்படும் தரநிலைகள் வெறும் எழுத்து அளவில் மட்டுமன்றி, அதன் ஆன்மாவிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற பிடிவாதத்தையே இது பிரதிபலிக்கிறது. 

பதவி நீக்கத் தீர்மானம் வெற்றி பெறாவிட்டாலும்கூட, அது பொது விவாதத்தின் போக்கை மாற்றியமைக்க முடியும். சில கவலைகளைக் காலவரையின்றித் தள்ளிப்போட முடியாது என்ற எச்சரிக்கையை அது வழங்கக்கூடும். இதற்கு மாற்றாகச் சொல்லப்படும் ‘செயலற்ற தன்மை’ இன்னும் பெரும் ஆபத்துகளைக் கொண்டது. தேர்தலின் நேர்மை குறித்த தீவிரமான கவலைகள் இருந்தாலும், அவை முறையாகத் தீர்க்கப்பட மாட்டாது என்ற எண்ணத்தையே இது உருவாக்கும். காலப்போக்கில், இது குடிமக்களிடையே ஒருவிதச் சலிப்பை ஏற்படுத்தி, ஜனநாயக முறையை ஒரு உண்மையான விருப்பத் தேர்வாகப் பார்க்காமல், வெறும் சடங்காகப் பார்க்கும் நிலைக்குத் தள்ளிவிடும்.

தற்போதைய முக்கியமான கேள்வி, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தொடர்ந்து செயல்பட முடியுமா என்பது அல்ல; மக்களிடையே தொடர்ந்து நம்பிக்கையைப் பெற முடியுமா என்பதுதான். அந்த நம்பிக்கை இல்லையெனில், ஆணையம் மேற்கொள்ளும் தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் தம் பொருளை இழந்துவிடும். ஜனநாயக நடைமுறைகளின் பொருள் சிதையத் தொடங்கினால், அதன் விளைவுகள் ஒரு சிறு விவாதத்தைத் தாண்டி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அதனால்தான் இந்தத் தருணம் முக்கியமானது. இது வெறும் ஒரு தவறான ஆவணத்தைப் பற்றியது அல்ல; மாறாக அது எதை வெளிப்படுத்துகிறது, எதைச் செய்யத் தூண்டுகிறது என்பதைப் பற்றியது.

கட்டுரையாளர் குறிப்பு

முனைவர் ஜான் ஜே. கென்னடி, பெங்களூருவைச் சேர்ந்த கல்வியாளர், அரசியல் ஆய்வாளர்.

நன்றி: தி வயர் இணைய இதழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share