எகிப்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் பெயர்கள் தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் லொசேன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் சார்லோட் ஸ்மித் ஆகியோர் கடந்த 2024-2025 ஆண்டுகளில் நடத்திய ஆய்வறிக்கையை பன்னாட்டு கருத்தரங்கில் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த ஆய்வில் சுமார் 30 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 20 கல்வெட்டுகளில் தமிழ்-பிராமி எழுத்துகள் உள்ளன. எகிப்தில் உள்ள மன்னர்களின் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பிரமிடு கல்லறைகளில், ‘சிகை கொற்றன்’ என்ற பெயர் 5 வெவ்வேறு கல்வெட்டுகளில் 8 முறை பொறிக்கப்பட்டுள்ளது.
“சிகை கொற்றன்” மட்டுமல்லாமல், “கோபன் வர கண்டன்” (கோபன் வந்து பார்த்தான்), “சாத்தன்” மற்றும் “கீரன்” போன்ற சில தமிழ் பெயர்களும் கண்டறியப்பட்டுள்ளன. இது ரோமானியர் காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல் கடந்து எகிப்து வரை பயணம் செய்துள்ளனர் என்பதற்கான ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் பதிவில்,
“எகிப்து நாட்டின் ‘மன்னர்களின் பள்ளத்தாக்கு’ பகுதியில் அமைந்துள்ள பிரமிடுகளில் உள்ள பழமையான கல்வெட்டுகளில் தமிழ்-பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பழந்தமிழர்களின் கடல் கடந்த பயணங்கள், பன்னாட்டு வணிகத் தொடர்பு மற்றும் உலகின் பிற நாகரிகங்களுடனான உறவு குறித்து மேலும் பல புதிய ஆய்வுகள் மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகத் தோன்றுகிறது.
அப்படியான ஆய்வுகள், பண்டைய தமிழ் நாகரிகத்தின் சிறப்புகளைப் பறைசாற்றுவதுடன், இந்த நவீன யுகத்திலும் சரியான வெளியுறவுக் கொள்கைகளை வகுத்து, இந்த நாட்டின் பாதுகாப்பை – பொருளாதார நலனை – தனித்துவத்தை உறுதி செய்ய முடியாமல் திணறும் ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் கற்றுக்கொள்ள உதவிகரமாக அமையும்.” என்று கூறியுள்ளார்.
