இந்தியாவில் இப்போது முட்டை விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. டெல்லி, மும்பை, பாட்னா, ராஞ்சி போன்ற பல நகரங்களில் ஒரு முட்டை ரூ. 8 அல்லது அதற்கு மேல் விற்கப்படுகிறது. குளிர்காலத்திலும் இப்படி ஒரு விலை உயர்வை நுகர்வோர் இதற்கு முன் பார்த்ததில்லை. வழக்கமாக ரூ. 7 முதல் ரூ. 9 வரை விற்கப்படும் முட்டையின் விலை இந்த ஆண்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதமும் வரவிருக்கும் நிலையில் விலை குறையுமா அல்லது மேலும் உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுடன் ஒப்பிடும்போது பல சந்தைகளில் முட்டை விலை ஏற்கனவே 25% முதல் 50% வரை உயர்ந்துள்ளது. இன்னும் சில வாரங்களுக்கு குளிர்காலம் நீடிக்கும் என்பதால் குறுகிய காலத்தில் விலை அப்படியே இருக்கலாம் அல்லது மேலும் உயரலாம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
இந்த விலை உயர்வு திடீரென ஏற்பட்டது அல்ல என்று கோழிப்பண்ணை துறையினர் கூறுகின்றனர். கடந்த ஆண்டில் சில பகுதிகளில் முட்டை தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு விலை உயர்வு விவசாயிகளுக்கு நீண்ட காலமாக குறைந்த விலை கிடைத்ததற்கு ஒரு திருத்தம் என்று கருதப்படுகிறது.
முட்டை விலை உயர்வுக்கு முக்கிய காரணம் அதன் தேவை அதிகரிப்புதான். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், “டிசம்பர் மாதம் தொடங்கியவுடன் முட்டை நுகர்வு திடீரென அதிகரிக்கிறது. இந்த நிலைமை ஒரு மாநிலத்திற்கு மட்டும் அல்ல; நாடு முழுவதும் உள்ளது. பல நகரங்களில் போக்குவரத்து செலவும் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக அமைகிறது” என்கின்றனர்.
சந்தை ஆய்வாளர்களின் கருத்துப்படி, மொத்த விலையில் ஒரு முட்டைக்கு மேலும் 15 முதல் 20 பைசா வரை உயரக்கூடும். ஜனவரி மாதத்தில் ஒரு முட்டை சுமார் ரூ.8.5 க்கு விற்கப்பட்டால் அது ஆச்சரியமல்ல. பிப்ரவரி மாதத்தில் இருந்துதான் விலை குறைய வாய்ப்புள்ளது.
விவசாயிகள் தரப்பில் தற்போதைய விலை நியாயமானது என்று கூறப்படுகிறது. இந்திய கோழிப்பண்ணை கூட்டமைப்பின் தலைவர் ரன்பால் தண்டா கூறுகையில், “ரூ.8 விலையை அதிகமாக சொல்ல முடியாது. இது கோழிப்பண்ணை விவசாயிகளுக்கு ஒரு நிம்மதியை அளிக்கிறது” என்றார்.
பல ஆண்டுகளாக, கோழித்தீவனத்தின் விலை அதிகமாக இருந்தும் முட்டை விலை குறைவாகவே இருந்தது. இதனால், பல விவசாயிகள் தங்கள் பண்ணைகளை மூடிவிட்டனர். இது உற்பத்தியைக் குறைத்தது. விவசாயிகளுக்கு இந்த ஆண்டு நல்ல விலை கிடைக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் முட்டை கிடைப்பது இன்னும் பெரிய பிரச்சனையாக இருந்திருக்கும் கூறப்பட்டுள்ளது.
