தமிழக சட்டப்பேரவையில் இன்று (அக்டோபர் 15) முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே கரூர் விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடந்தது.
இதன் பின் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
“தமிழக வெற்றிக் கழக தலைவர் கரூரில் பேசிக் கொண்டிருக்கும்போது 10 நிமிடத்தில் செருப்பு வீசுகிறார்கள். இதைப்பற்றி இந்த அரசு கருத்து எதுவும் சொல்லவில்லை.
41 பேர் கூட்ட நெரிசலில் இறந்திருக்கிறார்கள். ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த கூட்டத்திற்கு முழுமையாக பாதுகாப்பு கொடுத்திருந்தால் உயிர்பலியை தவிர்த்திருக்கலாம். எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி ஆளும் கட்சிக்கு ஒரு நீதி என்ற ரீதியில் தான் செயல்படுகிறார்கள்.
இந்த அரசின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம். இதைத்தான் பேரவையில் தெரிவித்தேன். அதை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்கள். தவெக தலைவர் ஏற்கனவே 4 மாவட்டத்தில் பிரச்சாரம் செய்துவிட்டு அதன்பிறகு நாமக்கல் சென்று அங்கிருந்துதான் கரூர் வந்திருக்கிறார்.
அப்படியென்றால் காவல்துறைக்கும் உளவுத் துறைக்கும் எவ்வளவு கூட்டம் கூடும் என்று தெரியும்.அதற்கு ஏற்றவாறு இடத்தை ஒதுக்கியிருக்க வேண்டும்.
அதோடு அவ்வளவு மக்கள் வருகிறார்கள் என்பதை பார்த்து அதற்கு ஏற்றவாறு போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். காவல்துறை அதிகாரி ஒருவர், ஒரு பேட்டியில் குறிப்பிடும் போது கரூரில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள் என்று சொன்னார். ஆனால் தொலைக்காட்சியில் நான் பார்த்தேன், 500 பேர் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் இல்லை என்பது தெரிகிறது.
மக்கள் சந்திப்பு கூட்டத்தில் எவ்வளவு போலீசார் இருந்தார்கள் என்பதே கேள்வி. பாதுகாப்பு குறைபாடு என்பது தெளிவாக தெரிகிறது. ஏடிஜிபி 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள் என்றார். ஆனால் முதல்வர் 660 பேர் என்கிறார். ஏன் இந்த முரண்பாடு. அதனால்தான் சொல்கிறோம் கரூர் சம்பவத்தில் பலத்த சந்தேகம் இருக்கிறது.
எம்.ஜி.ஆரின் 108ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 24.1.2025 அன்று பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று வேலுசாமிபுரத்தில் இடம் கேட்டோம். ஆனால் அது போக்குவரத்து அதிகம் செல்லும் இடம் என்றும், குறுகலான இடம் என்றும் கூறி அனுமதி கொடுக்கவில்லை.
பின்னர் நீதிமன்றத்துக்கு சென்றோம். நீதிமன்றம் தகுந்த இடம் கொடுக்க வேண்டும் என்று சொன்னது. ஆனால் கொடுக்கப்படவில்லை. நான் கூட்டம் நடத்த தேதி அறிவித்துவிட்டதால் அவர்களாக கொடுத்த இடத்தில் கூட்டம் நடத்தினோம்.
அப்படி எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நிராகரித்த இடத்தை எப்படி கொடுத்தார்கள். ஏதாவது ஒரு அசாம்பாவிதம் ஏற்பட வேண்டும் என்றுதான் இந்த இடத்தை கொடுத்திருக்கிறார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். இதுதான் உண்மை என்று நாங்களும் கருதுகிறோம்.
ஏற்கனவே முப்பெரும் விழாவை திமுக நடத்தியது. அந்த இடத்தை கொடுத்திருக்கலாமே…. இந்த அரசு திட்டமிட்டுதான் வேலுசாமிபுரத்தை ஒதுக்கியிருக்கிறார்கள். காவல்துறை அலட்சியத்தால் தான் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
அதோடு அவசர அவசரமாக, மாவட்ட ஆட்சியர் உத்தரவோடு உடற்கூராய்வு செய்திருக்கிறார்கள். கரூர் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்ய இரண்டு மேடைதான் இருக்கிறது. இப்போது 3 மேடை இருக்கிறது என்கிறார் அமைச்சர். சரி இருக்கட்டும்… உடற்கூராய்வு செய்வதற்கான மருத்துவர்கள் அந்த மருத்துவமனையில் இல்லை. 22 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
அதிகாலை 1.45 மணியில் இருந்து காலை 8 மணிக்குள் 31 உடல்களுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டுவிட்டது. ஒரு உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு ஒன்றரை மணி நேரம் தேவைப்படும். அதன்பிறகு என்னென்ன காரணத்திற்காக இறந்தார் என்று அறிக்கை கொடுக்க வேண்டும்.
இப்படி இருக்கும் போது இவ்வளவு வேகமாக எப்படி 31 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்கள். இந்த சந்தேகமும் மக்களிடத்தில் இருக்கிறது. இதை கேட்டால் ஏதேதோ பதில் சொல்கிறார்கள்.
அதோடு ஒரு நபர் ஆணையத்தை அமைத்தார்கள். ஏடிஎஸ்பி ஒருவரும் நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் விசாரணையை துவக்கிவிட்டார்கள். ஆனால் ஒருநபர் ஆணையத்துக்கான உதவியாளர்கள், அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை. உண்மை சம்பவத்தை மறைக்க இந்த அரசு நாடகமாடுகிறது.
மேலும் தலைமை செயலகத்தில் ஏடிஜிபி, 3 துறை செயலாளர்கள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லத்தான் துறை செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால் இவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தினர் இதையெல்லாம் பின்பற்றியிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என்று செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகிறார்கள்.
ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்ட பின், எந்த தகவலாக இருந்தாலும் அந்த ஆணையம் முன்தான் முறையிட வேண்டும்.
அதற்கு மாறாக அரசாங்கமே அரசு அதிகாரிகளை வைத்து இந்த சம்பவத்துக்கு இவர்கள்தான் காரணம் என்று கூறும் போது எப்படி ஒருநபர் ஆணையம் நேர்மையாக செயல்படும்.
ஏடிஜிபி ஒரு கருத்தை சொல்கிறார். அவருக்கு கீழ் பணி செய்யும் ஒரு அதிகாரி கரூரில் விசாரணை செய்கிறார். அப்படி இருக்கும் போது அந்த அதிகாரி ஏடிஜிபிக்கு எதிராக விசாரணையை நேர்மையாக செய்ய முடியுமா? இந்த பதற்றம் ஏன்?
எனவே வேண்டுமென்றே திட்டமிட்டுதான் இந்த சம்பவம் நடந்திருப்பதாக தெரியவருகிறது.
இதே அரசாங்கத்தில் தான் கிட்னி முறைகேடு நடந்திருக்கிறது. உடனே சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்டது. அதில் கிட்னி முறைகேடு நடந்திருப்பதாக கண்டறியப்பட்ட அந்த மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தடைவிதிக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில் எஸ்.ஐ.டி. அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. ஆனால் எங்கு எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டிருக்கிறது.
கரூர் சம்பவத்தில் வேகவேகமாக காட்டிய அக்கறை கிட்னி முறைகேடு வழக்கில் ஏன் காட்டவில்லை. இந்த அரசாங்கம் வந்த பிறகு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 61 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார்கள்.
கிட்னி முறைகேடு, ஆம்ஸ்ட்ராங் வழக்கு விசாரணை என அனைத்துக்கும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இன்று கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை அவர் தமிழர் என்ற உணர்வோடுதான் நான் பேசுகிறேன் என்று முதல்வர் சொல்கிறார். அந்த உணர்வோடுதான் நானும் பேசுகிறேன். பிரதான எதிர்க்கட்சிக்கு பேச அனுமதிக்காமல் ஆளும் கட்சி என்ன செய்தது என்று விளக்கமளிக்கும் போது, ஏதோ நடந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.
அவர்களுக்கு பதற்றம். நாங்கள் ஏன் அந்த கட்சிக்கு சப்போர்ட் செய்ய வேண்டும். இந்த கட்சி அந்த கட்சி என்று நான் பேசவில்லை. முதல்வர் சொல்வதுபோல தமிழர் என்ற முறையில் தான் பேசுகிறோம்.
ஏதோ மர்மம் இருக்கிறது. அதை மறைக்கத்தான் அமைச்சர், சபாநாயகர் எல்லாம் பேசுகிறார்கள்.
கரூரில் பிரேத பரிசோதனை செய்த உடல்களை எல்லாம் எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் நிற்கிறது. அதில் திமுக மருத்துவர் அணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் யார் அரசியல் செய்கிறார்கள். இவர்கள் தான் செய்கிறார்கள். எல்லாவற்றிலும் அரசியல் செய்வது திமுகதான். பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நடுநிலையோடுதான் நாங்கள் பேசுகிறோம்.
திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகையில் எல்லாம் கூட்டம் எப்படி நடந்தது? கரூரில் மட்டும் ஏன் இப்படி? நிகழ்வு நடந்துவிட்டது. இதனை மறைக்க ஏதேதோ இந்த அரசு சொல்கிறது. இதையெல்லாம் சட்டமன்றத்தில் பேசினால் நீக்கிவிடுவார்கள். அதனால் மக்களிடம் தெரிவிப்பதற்காக இங்கு பேசுகிறேன்” என்று கூறினார்.