ரெஸ்ட் ரூம் போனால் கூட சொல்லிவிட்டு போக வேண்டிய நிலையில் இன்றைய அரசியல் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் (செப்டம்பர் 16) டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு கிளம்பும் போது, பெண்ட்லீ காரில் முகத்தை மூடியவாறு சென்றார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பேசுபொருளானது. நேற்று கரூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், காலிலேயே விழுந்த பிறகு முகத்தை மூட கர்சீப் எதற்கு என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று (செப்டம்பர் 18) சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று வந்தது தொடர்பாக பேட்டி அளித்தார்.
“முகத்தை துடைத்ததை வைத்தெல்லாம் அரசியல் செய்கின்றனர். வருத்தத்தோடு ஒன்றை சொல்கிறேன்…. இனி ரெஸ்ட் ரூம் போனால் கூட சொல்லிவிட்டு போக வேண்டிய நிலைமைக்கு இன்றைய அரசியல் உள்ளது. அச்சத்தின் அடிப்படையில் இதை சொல்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “இதே ஸ்டாலின், நான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சமயத்தில் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். யார் சட்டையை கிழித்துக்கொண்டு வருவார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தான் கிழித்துகொண்டு வருவார்கள். அப்படிபட்ட நிலையில் இருந்தவர் இன்று என்னைப்பற்றி பேசுவதற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை.
நான் தும்பினால் கூட விவாத மேடை வைக்கிறீர்கள். இப்படி என்னை அடையாளம் காட்டுவதற்கு நன்றி” என குறிப்பிட்டார்.
“அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டேன் என்று அமித்ஷா சொன்ன பிறகும், இவரை அழைத்து பேசுகிறார்… அவரை அழைத்து பேசுகிறார் என்று சொல்கிறார்கள். இதற்கு இதோடு முற்றுப்புள்ளி வைக்கிறேன். மீண்டும் யாரும் தயவு செய்து இப்படி செய்தி வெளியிடாதீர்கள்” என்று கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “என்னுடைய எழுச்சி பயணம் சிறப்பாக இருப்பதாக அமித்ஷா பாராட்டினார். எத்தனை தொகுதி சென்றிருக்கிறீர்கள் என்று அமித்ஷா கேட்டறிந்தார்” என்று குறிப்பிட்டார்.
“கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்டவர்கள் மீது சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருக்கிறோம், வேறு வழியில்லை” என்று செங்கோட்டையன் விவகாரம் குறித்து அவரது பெயரை குறிப்பிடாமல் பேசிய எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனின் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்தார்.
“நாங்கள் அதிமுக கூட்டணியில் இல்லை. ஆனால் என்.டி.ஏ கூட்டணியில் இருக்கிறோம். என்.டி.ஏ எடுக்கும் முடிவுக்கு சம்மதிப்போம் என்று சொன்னார் டிடிவி. ஆனால் என்ன நினைத்தாரோ என் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். நான் முகமூடி அணிந்து போனதாக சொல்கிறார். நான் முகமூடி அணிந்து போகவேண்டிய அவசியமில்லை.
19.12.2011 அன்று அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே டிடிவி தினகரனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீக்கினார். 10 ஆண்டுகாலம் கட்சியிலேயே கிடையாது. ஜெயலலிதா இறந்த பிறகு இறுதிச்சடங்கிற்கு வந்தார். அவரெல்லாம் என்னை பற்றி பேசுகிறார். எந்த உள்நோக்கத்தின் அடிப்படையில் பேசுகிறார் என எனக்குத் தெரியவில்லை.
தேவருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்று நான் பேசிய பிறகு இப்படியெல்லாம் பேசுகிறார். இதில் என்ன உள்நோக்கம் என எனக்கு புரியவில்லை” என்று குறிப்பிட்டார்.
டெல்லியில் யாருடைய காரில் சென்றீர்கள் என்ற கேள்விக்கு, “நான் அரசாங்க காரில் தான் சென்றேன். அதற்கே இப்படி கேட்கிறீர்கள். நான் யாருடன் சென்றேன்… எந்த காரில் சென்றேன் என்றெல்லாம் நீங்கள் கேட்ககூடாது. விஷயம் என்ன… அமித்ஷாவை சந்தித்ததுதானே. அதைப்பற்றி மட்டும் கேளுங்கள். அதுபோன்று ஸ்டாலின் வெளிநாடு சென்று என்னவெல்லாம் செய்தார். அதை யாராவது செய்தி வெளியிட்டீர்களா… அல்லது கேள்வி கேட்டீர்களா” என்று கேள்வி எழுப்பினார்.
பாஜகவால் தான் அதிமுக ஆட்சி காப்பாற்றப்பட்டது என்று நீங்கள் சொன்னதற்கு பல விமர்சனங்கள் எழுந்துள்ளது… அதற்கு உங்கள் விளக்கம் என்ன? என்ற கேள்விக்கு, “
நான் ஆட்சி பொறுப்பேற்றபோது, 4-5 மாதங்களில் ஆட்சி இழப்பேன் என்றுதானே பலரும் சொன்னீர்கள். ஒரு சாதாரண விவசாயிக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லையே. ஊடகம் கூட அதைத்தானே சொன்னீர்கள். விவசாயிதானே என்று ஒருத்தராவது ஆதரவு கொடுத்தீர்களா. இல்லையே… எங்களுடைய திறமை… அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.
மத்திய அரசு கேட்கின்ற திட்டத்துக்கெல்லாம் அனுமதி கொடுத்தது. நிதி கொடுத்தது. யார் யார் விமர்சித்தார்களோ, அவர்கள் எல்லாம் மூக்கு மேல் விரல் வைக்கும் அளவுக்கு ஆட்சி நடத்தினோம். அதனால் அப்படி சொன்னென்” என்று குறிப்பிட்டார்.