அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி மறைவு… எடப்பாடி இரங்கல்!

Published On:

| By Selvam

Edappadi Palaniswami condolence aiadmk mla

அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளரும், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அமுல் கந்தசாமி உடல்நல பாதிப்புகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று (ஜூன் 21) காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு சென்று அமுல் கந்தசாமியின் உடல்நலன் குறித்து அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அமுல் கந்தசாமி இன்று மாலை காலமானார். அவரது மறைவு அதிமுக நிர்வாகிகள், வால்பாறை சட்டமன்ற தொகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமுல் கந்தசாமி மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமுல்கந்தசாமி மரண செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். அதிமுக மீதும், தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் அமுல்கந்தசாமி, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் கட்சி பணிகளை ஆற்றியவர்.

அதே போல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.

அமுல்கந்தசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். Edappadi Palaniswami condolence aiadmk mla

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share