பாமகவில் களையெடுக்க அழித்தொழிப்பு தேவை… அன்புமணி முன்பாக நிர்வாகி ஆவேசம்!

Published On:

| By Selvam

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தநிலையில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை அன்புமணி நடத்தி வருகிறார்.

அந்தவகையில் கடலூரில் நேற்று (ஜூன் 20) பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமகவை அழிக்க நினைப்பவர்களை அழித்தொழிப்போம் என்று அன்புமணி முன்பாக மேடையில் பாமக முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Pmk cadre says We will destroy

ADVERTISEMENT

இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது,

“வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை மிகச்சிறப்பாக அன்புமணி நடத்தி முடித்தார். மாநாடு முடிந்ததும் கட்சியில் நிலவும் பிரச்சனைகளால் ஒரு மாத காலமாக எங்களால் சரியாக தூங்க முடியவில்லை. மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது.

ADVERTISEMENT

1999-ஆம் ஆண்டு கடலூரில் பசுமை தாயகம் சார்பில் நடைபெற்ற மீட்டிங்கில் பாதி தமிழிலும், பாதி ஆங்கிலத்திலும் தான் அன்புமணி பேசுவார். அந்த பேச்சை ரெக்கார்டு செய்து ராமதாஸிடம் போட்டு காண்பிப்போம். அந்த வீடியோவை சிரித்து சிரித்து கேட்டு ரசிப்பார்.

கடலூர் மாவட்டத்திற்கு வந்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வரை என்ன சாப்பிட்டார்? மீட்டிங் எப்படி நடந்தது என்று போன் போட்டு ராமதாஸ் விசாரிப்பார். அந்த அளவுக்கு பாசமானவராக இருந்தார். அவரை சதி வலையில் இருந்து அன்புமணி மீட்டெடுக்க வேண்டும். எங்களுக்கு பழைய ராமதாஸை பெற்று தாருங்கள். அன்புமணி தான் பாமகவின் நிரந்தர தலைவர். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

ADVERTISEMENT

யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. ஏதோ ஒரு சதிகார கூட்டம் ராமதாஸை சூழ்ந்துகொண்டு கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாமகவை யாரும் அழிக்க முடியாது. கட்சியை அழிக்க நினைப்பவர்களை அழித்தொழிப்போம்.

எங்கள் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் சைவம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாளையிலிருந்து அசைவம் சாப்பிட வேண்டும். கட்சியில் பயனற்று கிடக்கும் களைகளை அகற்ற வேண்டும். அழித்தொழிப்பு ஒரு இயக்கத்திற்கு தேவை என்றால் அதை செய்து முடிக்க வேண்டும். அன்புமணிக்கு ஓர் இடர் என்றால் நாங்கள் தற்கொலைப்படையாக மாறுவோம்” என்று பேசினார்.

பாமக முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Pmk cadre says We will destroy

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share