பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 16) தெரிவித்துள்ளார். Edappadi Palanisamy clarifies alliance
சட்டமன்ற வளாகத்தில் இன்று பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்றத்தில் இன்றைய தினம் சட்டமன்ற பேரவை விதி 72-ன் கீழ், ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் மீது நம்பிக்கையின்மையை தெரிவிக்கும் தீர்மானம், அதிமுக சார்பில் நாங்கள் கொண்டு வந்தோம். அதுகுறித்து பேசுவதற்கு சட்டப்பேரவை தலைவர் மறுத்து விட்டார். அதைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து, அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆளும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக, ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தோம். அந்த முயற்சியில் பாஜக முதல்கட்டமாக எங்களுடன் இணைந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. அதனால் பல கட்சிகள் அதிமுகவில் இணையும்.
அதிமுக எங்கள் கட்சி. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். திமுக ஏன் எங்களை கண்டு எரிச்சலடைகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களுக்கு பயம் வந்துவிட்டது.
அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா கூறவே இல்லை. பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது. மத்தியில் மோடி தலைமையிலும் தமிழகத்தில் என்னுடைய தலைமையிலும் கூட்டணி அமைந்துள்ளது என்று அமித்ஷா தெளிவாக சொல்லிவிட்டார்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Edappadi Palanisamy clarifies alliance