சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்த போது கைக்குட்டையால் முகத்தை மூடியபடி வந்தார். இதுகுறித்த செய்திகள் வைரலான நிலையில் கைகுட்டையால் முகத்தை துடைத்தேன் என்று எடப்பாடி பழனிசாமி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று (செப்டம்பர் 18) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘தமிழகத்தில் ஜூலை 7ஆம் தேதி முதல் நான் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு கிட்டத்தட்ட 153 சட்டமன்ற தொகுதியில் நேரடியாக மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளேன். இதன் மூலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணிக்கு வெற்றி உறுதி என்பதை தெரிந்து கொண்டோம். மேலும் மக்கள் விரோத திராவிட முன்னேற்றக் கழக அரசை அகற்ற வேண்டும் என்பதையும் எழுச்சி பயணத்தின்போது நான் தெரிந்து கொண்டேன்.
நான் டெல்லி சென்று வந்த பிறகு பல்வேறு விமர்சனங்கள் ஊடகத்திலும், பத்திரிகையிலும் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஸ்டாலின் அடிக்கடி விமர்சனம் செய்து வருகிறார்.
திராவிட முன்னேற்ற கழகம் யாரை விமர்சனம் செய்ததோ அவர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்றது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை மிக ஆடம்பரமாக பாரதப் பிரதமரை சென்னைக்கு அழைத்து வந்து நடத்தினார்கள்.
செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு நிகழ்ச்சியையும் பாரத பிரதமரை வரவழைத்து நடத்தினார்கள். கலைவாணர் அரங்கில் ஆடல் பாடல் நிகழ்ச்சியோடு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தினார். ஸ்டாலின் ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும், எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும் எடுக்கிறார்.
எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது அவருக்கு கருப்பு கொடி காட்டினார். கருப்பு பலூன் பறக்க விட்டார்கள். ஆட்சிக்கு வந்த பின் பிரதமர் மோடி சென்னைக்கு வந்த போது வெள்ளை குடை பிடித்தவர்கள். இதுதான் திமுகவின் நிலைப்பாடு. இன்றைய முதலமைச்சர் ஸ்டாலினின் நிலைப்பாடு.
அதேபோல் அண்மையில் காங்கிரஸ் மாநாடு நெல்லையில் நடந்தது. திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கிரிஷ் சோடங்கர் பேசுகையில், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தலில் 117 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் சூழல் ஏற்படும் என்ற கருத்தை சொல்லியுள்ளார்.
கடலூரில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி பேசுகையில், நாங்கள் அதிக இடங்களில் போட்டியிட்டு அரசாங்கத்திலும், ஆட்சியிலும் பங்கு பெறுவோம் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்று பேசியுள்ளார். இதைப்பற்றியெல்லாம் விவாத மேடையிலும், ஊடகத்திலும் வரவில்லை.
நான் உள்துறை அமைச்சரை சந்திக்கிறேன் என்று தெரிவித்துவிட்டேன். அதன் அடிப்படையில் இரவில் அவரை சந்திக்க சென்றேன். என்னோடு கட்சியின் மூத்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்தனர். நேரம் அதிகமான காரணத்தால் எங்களோடு இருந்தவர்களை எல்லாம் 10 மணிக்கு செல்லுங்கள். நான் மட்டும் பேசி விட்டு வருகிறேன் என்று சொன்னதால் அவர்கள் சென்றார்கள்.
நான் அன்று காலையில் மரியாதைக்குரிய இந்திய நாட்டின் குடியரசு துணைத் தலைவரை நேரடியாக அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து கூறினேன். அப்போதும் நான் அரசாங்க காரில் தான் சென்றேன். பிறகு உள்துறை அமைச்சரை சந்திக்கிற போதும் அரசாங்க காரில் தான் சென்றோம். நான் வீட்டில் இருந்து வெளியே வரும் போது என் முகத்தை கைக்குட்டையால் துடைக்கிறேன்.
அதை எடுத்து அரசியல் செய்கிறீர்களே.. வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டு ஊடகங்களும் பத்திரிகைகளும் தரம் தாழ்ந்த இதை வெளியிடுவது எந்த அளவிற்கு சரியாக இருக்கும். ஊடகங்களும் பத்திரிகைகளும் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும். ஒரு தலைவரை வேண்டுமென்றே ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் மீது திட்டமிட்டு அவதூறாக செய்தி வெளியிடுவது சரியல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதை முதலமைச்சர் கூட்டத்தில் பேசுகிறார். நான் பகிரங்கமாக இந்த தேதியில், இந்த நேரத்தில் உள்துறை அமைச்சரை சந்திக்க போகிறேன் என செய்தி வெளியிட்டு விட்டுத்தான் சென்றேன். வேறு எதையும் பேச முடியாது.. சரக்கு இல்லை.. எங்கள் மீது எந்த குற்றச்சாட்டும் சொல்வதற்கு அவர்களிடத்தில் எந்த ஆதாரமும் இல்லை.. நாங்கள் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். அதனால் எங்கள் ஆட்சியில் எந்த குற்றமும், குறையும் இல்லை.. என்பதால் இப்படி சிறுபிள்ளைத்தனமாக இந்த காட்சிகளை வைத்துக்கொண்டு பேசுவது ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல..
முப்பெரும் விழாவில் செந்தில் பாலாஜி குறித்து பேசுகையில் கோடு போட்டால் ரோடு போட்டு விடுவார் என்கிறார். அதே செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அதே கரூரில் எப்படி பேசினார் என்பதை இந்த நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் செந்தில் பாலாஜி குறித்து ஸ்டாலின் பேசிய காட்சிகளையும் செய்தியாளர் சந்திப்பில் காட்டினார்.
செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சொன்ன கருத்து இது. இப்போது அவர் புனிதராகி விட்டாரா.. அவர் மீது எத்தனை வழக்கு.. அவரே ஊழல் வாதி என்று சொன்ன பிறகு அந்த ஊழல்வாதிக்கு இப்போது எப்படி அமைச்சர் பதவியை கொடுத்தார் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.