போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
போதைப் பொருள் விற்பனை செய்தது தொடர்பாக, கைதான அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி டி.பிரசாத் அளித்த தகவலின் பேரில் கடந்த ஜூன் 23ல் நுங்கம்பாக்கம் போலீசாரால் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜூன் 26ம் தேதி நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரையும் போலீசார் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து இருவரின் ஜாமின் மனுக்களை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் ஜாமினில் வெளி வந்தனர்.
தற்போது போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், மற்றும் கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நடிகர் ஸ்ரீகாந்த் வரும் 28ம் தேதியும், கிருஷ்ணா வரும் 29ம் தேதியும் ஆஜராக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
