அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ED வழக்கு பதிய உத்தரவிட வேண்டும் : ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல்!

Published On:

| By Kavi

case files againt ex ministers by dmk mp girirajan

முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 9 பேர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட கோரி திமுக எம்.பி.கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்துள்ளார். 

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  அடுத்த 36ஆவது நாளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தசூழலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர் , கே.பி.அன்பழகன்,  கே.சி.வீரமணி,  எம்.ஆர்.விஜயபாஸ்கர்,  ஆர்.காமராஜ், சேலம் இளங்கோவன், தி.நகர் சத்யா ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று திமுக மாநிலங்களவை எம்.பி.கிரிராஜன் உயர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். 

அந்த மனுக்களில்,  “அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும் தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயமாஸ்கர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக தனது பெயரிலும் தனது குடும்பத்தினரின் பெயரிலும் சொத்துகளை குவித்துள்ளார். இதுதொடர்பாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது (FIR No: 04/2021). இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து, புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள ஊழல் வழக்குகள், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ‘அட்டவணைப்படுத்தப்பட்ட குற்றங்கள்’ ஆகும். ஆகவே அவர் மீது அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். 

எம்.ஆர். விஜயபாஸ்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்திப் பல்வேறு நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல்களில் ஈடுபட்டுள்ளார்.  தனது பெயரிலும், தனது மனைவி மற்றும் பங்குதாரர்களின் பெயரிலும் சொத்துகளை குவித்துள்ளார்.  இது தொடர்பாகக் கரூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2021-ல் வழக்கு (FIR No: 05/AC/2021) பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கிலும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கே.பி.அன்பழகன உயர்க்கல்வித் துறை அமைச்சராக இருந்த போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக  தர்மபுரி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் (FIR No: 03/AC/2022).  இந்த வழக்கு தருமபுரி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வரும் மார்ச் 27ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. 

 தங்கமணி மின்சாரத் துறை அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக  நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் ( FIR No: 08/AC/2021).  நாமக்கல் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் 27.5.2024 அன்று  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

எஸ்.பி. வேலுமணி, முன்னாள் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் துறை அமைச்சராக இருந்த போது,  சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் பல்வேறு சிவில் ஒப்பந்தங்களை தனக்கு தெரிந்தவர்கள், நண்பர்களுக்கு கொடுத்ததன் மூலம் ஊழல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.   சாலைகளுக்கான எல்.இ.டி. விளக்குகளில் வாங்கியதில் முறைகேடு செய்து அரசுக்கு ரூ.500 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை  மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளது( FIR No: 16 of 2021, 05/2022/AC/CB,  5 of 2022) . இந்த வழக்குகள் விசாரணையில் இருந்து வருகின்றன. 

கே.சி.வீரமணி, வணிக வரி மற்றும்  பதிவுத் துறை அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்துகளை குவித்ததாக  லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கு (FIR NO 12/2021) விசாரணையில் உள்ளது. 

ஆர். காமராஜ், முன்னாள் உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சராக இருந்தபோது,  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு (FIR NO. 4 OF 2022) திருவாரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.  

2016-2021 வரையிலான அதிமுக ஆட்சியில் தி.நகர் முன்னாள் எம்.எல்.ஏ.சத்யா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் (FIR NO 02 of 2024).   தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. 

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன் மீது சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  பதிவு செய்யப்பட்ட வழக்கு (FIR NO 17 of 2021) விசாரணையில் உள்ளது” என்று  தனி தனியாக  9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

“லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டால் அந்த குற்றம் தொடர்பான வழக்கை தொடர முடியும் என்று பிஎம்எல்ஏ சட்டத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் உள்ளதால், சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது. 

எனவே இவர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். தற்போது மத்தியில் ஆளும் கட்சியுடன் அதிமுக கூட்டணியில் இருப்பதால், அரசியல் காரணங்களுக்காகவே அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது” எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனுக்கள்  விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன. 

இதுதொடர்பாக அதிமுக எம்.பியும் வழக்கறிஞருமான இன்பதுரை கூறுகையில்,  “தேர்தல் சமயத்தில் அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்பதற்காக  நடத்தப்பட்ட டிராமாவாக இதை பார்க்கிறேன்” என்று சென்னையில் செய்தியாளார்களிடம் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share