முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி நிறுவனம் மீது வழக்கு பதிவு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Case registered against S.P. Velumani's company

அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை பணிகளை மேற்கொள்ள ரூ.2,000 கோடிக்கு டெண்டர் எடுத்ததில் அரசுக்கு 20 கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் நண்பர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நிறுவனம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலகட்டத்தில் நெடுஞ்சாலை துறையின் கீழ் நடந்த சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டதில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

அதில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிறுவனம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் ஜெகதீசன் நடத்தி வந்த நிறுவனம் வாயிலாக ரூ.2000 கோடிக்கு டெண்டர் எடுத்ததில் அரசுக்கு ரூ.20 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து செயற்பொறியாளர் தஞ்சாவூா் மாநகராட்சியின் செயற்பொறியாளராக இருந்து ஓய்வு பெற்ற திருவண்ணாமலையைச் சோ்ந்த எஸ்.ஜெகதீசன், மதுரை விசாலாட்சிபுரத்தைச் சோ்ந்த நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த பணி நிறுவனமான ஆா்.ஆா்.இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம், தஞ்சாவூா் புதுப்பட்டினம் ஜோதி நகரில் உள்ள ஜேஎஸ்வி இன்ஃப்ரா நிறுவனம், கோவை ராமநாதபுரம் அருகே புளியங்குளத்தில் உள்ள கேசிபி என்ஜினீயா்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள எஸ்பிகே அன்ட் அன்கோ நிறுவனம் ஆகியவற்றின் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்த விரிவான விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share