ரஷ்யாவில் இன்று ஜூலை 30-ந் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி (Russia Japan Tsunami) பேரலைகள் தாக்கின.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 8.8 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து வடக்கு பசிபிக் பிராந்திய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அலாஸ்கா, ஹவாய் தீவுகள், நியூசிலாந்தின் தெற்கு கடற்கரை பகுதிகளுக்கும் இந்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஷ்யா, ஜப்பான், ஹவாய் தீவுகளை சுனாமி பேரலைகள் தாக்கி உள்ளன. பசிபிக் கடலில் உள்ள ரஷ்யாவின் குரில் தீவுகளில் முதலில் சுனாமி பேரலைகள் தாக்கின. இதேபோல ஜப்பானின் Tokachi கடற்பரப்பில் 1.3 அடி உயரத்துக்கு சுனாமிப் பேரலைகள் தாக்கியதாக அந்நாட்டு சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இது மிகப் பெரிய சுனாமி பேரலை தாக்கம் இல்லை என்ற போதும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே சுனாமி பேரலைகளின் தாக்கம் தொடர்பாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியான ஹவாய் தீவுகளில் உள்ள இந்தியர்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட மற்றும் சுனாமி பேரலைகள் தாக்கிய பகுதிகளில் இருந்து இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சான் பிரான்சிஸ்கோ துணை தூதரகத்தை +1-415-483-6629 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.