கீழடி அகழாய்வு தொடர்பான தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் இன்று (ஜூலை 29) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கீழடியில் தொல்லியல்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.
ஆனால் மத்திய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. மேலும் அதில் திருத்தம் தேவை என அறிக்கையை திருப்பி அனுப்பி இருந்தது.
எனினும், கீழடி ஆய்வறிக்கை சரியாகவே உள்ளது. ஆய்வறிக்கையில் மாற்றம் தேவையில்லை. கீழடி ஆய்வறிக்கையை திருத்த சொல்வது அநீதியானது என மத்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு, ஆய்வாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.
இந்த நிலையில் கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய தொல்லியல் துறை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலைய வாயிலை ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் கார்த்திக் தலைமையில் முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தினர்.
அப்போது கீழடி ஆய்வறிக்கையினை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பியபடி வந்த ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ரயில் நிலைய வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிடாமல் மத்திய அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாகவும், தமிழர்களின் தொன்மையான வரலாறு மறைக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
வாலிபர் சங்கத்தினரின் போராட்டம் காரணமாக ரயில் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்தையை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.