மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வரும் சுந்தரேசனுக்கு வழங்கப்பட்ட வாகனத்தை எந்த காரணமும் தெரிவிக்காமல் அரசு திரும்ப பெற்றதாக தகவல் வெளியானது. மேலும் அவர் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. DSP Sundaresan was not provided with a vehicle
இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி முக்கிய அலுவலுக்காக டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தைப் பெற்று மாற்று வாகனம் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் டிஎஸ்பி சுந்தரேசன் பயன்படுத்தி வந்த வாகனமே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என காவல்துறை விளக்கமளித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் தற்போது மதுவிலக்கு அமலாக்கப்பரிவில் துணைக்காவல் கண்காணிப்பாளராக சுந்தரேசன் பணியாற்றி வருகிறார்.
கடந்த 07.04.2025 முதல் TN 51 G 0817 பதிவெண் கொண்ட பொலிரோ வாகனம் அலுவலக பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முக்கிய அலுவலுக்காக கடந்த 11.07.2025-ந் தேதி அவர் பயன்படுத்தி வந்த TN 51 G 0817 பதிவெண் கொண்ட பொலிரோ வாகனம் எடுக்கப்பட்டு, மாற்று வாகனமாக TN 51 G 0616 பதிவெண் கொண்ட பொலிரோ வாகனம் வழங்கப்பட்டது. பின்னர் இன்று 17.07.2025-ந் தேதி மீண்டும் ஏற்கனவே பயன்படுத்தி வந்த TN 51 G 0817 பதிவெண் கொண்ட பொலிரோ வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துணைக்காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசன் தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து வருவது போன்றும், மேற்கண்ட துணைக்காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் வாகனம் வழங்கப்படவில்லை என்றும் உண்மைக்கு புறம்பான செய்திகள் சில ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
இவ்விதமான தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும், செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உரிய அதிகாரிகளிடம் அது தொடர்பான தகவல்களை கேட்ட பின்பு சரியான தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. DSP Sundaresan was not provided with a vehicle