திராவிட மாடல் அரசு- ஒரு கட்சியின் அரசு அல்ல; ஒரு இனத்தின் அரசு.என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “பாளையங்கோட்டைச் சிறையினிலே – பாம்புகள் பல்லிகள் நடுவினிலே, அஞ்சாமல் இருந்தவர் யாரு? அந்த கலைஞரின் புகழினைப் பாடு!” என்று 1965-ஆம் ஆண்டு நடந்த மொழிப்போரில் ஈடுபட்ட கலைஞரின் தீரத்தைச் சொல்ல காரணமான, பாளையங்கோட்டையில் இருக்கும் நெல்லைச் சீமைக்கு நான் வந்திருக்கிறேன்!
அன்றைக்கு, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் அடைக்கப்பட்டவர் தான் நம்முடைய கலைஞர். நாடே போற்றும் ஆட்சியை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து அவர் வழங்கினார்! அதுதான், திராவிட மாடலின் நவீன தமிழ்நாட்டின் தொடக்கமாக அமைந்தது!
நெல்லையில் வெள்ளித் தேர் ஓடும்
இந்திய விடுதலைப் போராட்டத்திலும், தமிழ்நாட்டின் வரலாற்றிலும் பொன்னால் பொறிக்கத்தக்க தியாகங்களை – தியாகிகளைத் தந்த மண், இந்த திருநெல்வேலி மண்! அப்படிப்பட்ட இந்த நெல்லை மக்களுக்கு, ஒரு மகிழ்ச்சியான செய்தியை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த நெல்லையின் அடையாளமாக விளங்குகிறது நெல்லையப்பர் கோயில். ஏழாம் நூற்றாண்டில், நின்றுசீர் நெடுமாறப் பாண்டியரால் கட்டப்பட்ட இந்த கோயிலை 700 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்து திருப்பணிகளை செய்தவர் நம்முடைய கலைஞர். நெல்லையப்பர் கோயிலின் வெள்ளித் தேர் 1991-ல் தீ விபத்தில் எரிந்து போனது.
கடந்த பிப்ரவரி மாதம், நான் இதே நெல்லைக்கு வந்தபோது மீண்டும் அந்த வெள்ளித் தேர் ஓடும் என்று அறிவித்தேன். மகிழ்ச்சியோடு சொல்கிறேன், இப்போது அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்களில், அதாவது ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து அந்த வெள்ளித் தேர் ஓடும் என்று மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பொருநை – தமிழரின் பெருமை!
இப்போது நான் மகிழ்ச்சியில் மட்டுமல்ல, பெருமையாகவும் நிற்கிறேன். அதற்கு காரணம் என்னவென்றால், நேற்று, பொருநை அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்து பெருமிதத்தில் கம்பீரமாக உங்கள் முன்பு நான் நின்று கொண்டிருக்கிறேன்! “பொருநை – தமிழரின் பெருமை!” “இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனிமேல், தமிழ் நிலத்தில் இருந்துதான் தொடங்கி எழுதப்படவேண்டும்! என்ற நம்முடைய வாதத்திற்கான சான்றுகளை அறிவியல் பூர்வமாக நாம் நிறுவி இருக்கிறோம்!
நாம் ஏன் கீழடி – பொருநை என்று நம்முடைய வரலாற்று தரவுகளை, தொடர்ந்து உரக்கப் பேசிக் கொண்டிருக்கிறோம்? தமிழர்களான நம்முடைய பண்பாடு தனித்துவமானது, முற்போக்கானது!
நாகரிகத்தின் தொட்டில் தமிழ் நிலம்
இந்தியத் துணைக்கண்டத்தின் நாகரிகத்தின் தொட்டிலாகவும், உச்சமாகவும் இருந்தது, நம்முடைய தமிழ்நிலம்தான்! அதற்கு பல இலக்கியச் சான்றுகள் இருக்கிறது! ஆனால், இலக்கியம் மட்டுமே ஒருபோதும் வரலாற்று சான்றாகாது! எனவே, அதை அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கவும், தொல்லியல் சான்றுகளை சேகரிக்கவும் நாம் மேற்கொள்ளும் காலப் பயணம்தான் அகழாய்வுகள்!
இந்த நிலையில்தான், கீழடி தொடங்கி பல வரலாற்று இடங்களில் நாம் மேற்கொள்ளும் அகழாய்வுகளுக்கு, ஒன்றிய பா.ஜ.க. அரசு எப்படியெல்லாம் தடை போடுகிறார்கள் என்று தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம்! அவர்களுடைய எண்ணம் என்ன? தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை நிரூபிக்கும் ஆய்வுகள் எதுவும் நடைபெறக் கூடாது; மீறி நடந்தாலும், அந்த ஆய்வு முடிவுகள் வெளியே வந்துவிடக் கூடாது!
இல்லாத சரஸ்வதி நதி நாகரிகம்
இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட, தமிழ் மீதும் – தமிழர்கள் மீதும் வெறுப்போடு செயல்படுபவர்களை எதிர்த்துதான் நாம் இன்றைக்கு உறுதியுடன் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தைத் தேடி அலைபவர்களுக்கு கண் முன்னே நாம் வெளியிடும் ஆய்வுகள் தெரிவதில்லை. அதற்காக நாம் சோர்ந்துவிட முடியுமா? நம்முடைய கடமையில் இருந்து நாம் பின்வாங்கிவிட முடியுமா? நம்முடைய வரலாற்றை விட்டுக்கொடுத்துவிட முடியுமா? நிச்சயம் முடியாது!
ஈராயிரம் ஆண்டுகால சண்டை
ஈராயிரம் ஆண்டுகால சண்டை இது! இதில் நாம் தோல்வி அடைந்துவிட மாட்டோம்! நாமும் தொடர்ந்து அடுக்கடுக்கான சான்றுகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறோம்! சான்றுகளை ஆய்வறிக்கைகளை வெளியிட்டுவிட்டால் மட்டும் போதுமா? அறிவுத்தளத்தில் மட்டும் போராடிக் கொண்டிருந்தால் போதுமா? அதையெல்லாம் மக்கள் மன்றத்தில் கொண்டு வைத்து இன்றைக்கு அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதற்காகத்தான் அருங்காட்சியகங்களை அமைத்துக் கொண்டு வருகிறோம்!
பொருநை அருங்காட்சி அரங்கம்
13 ஏக்கர் நிலப்பரப்பில், 54 ஆயிரத்து 296 சதுர அடி பரப்பளவில், பொருநை அருங்காட்சி அரங்கத்தை நான் திறந்து வைத்திருக்கிறேன்! தமிழ்நாட்டின் முதலமைச்சராக, தமிழினத்தின் தலைமை இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மட்டுமல்ல, ஒரு தமிழனாகவும் நான் இன்றைக்கு பெருமைப்படுகிறேன். நான் இங்கே கேட்க விரும்புவது, உறுதியோடு உங்களை எல்லாம் நான் கேட்க விரும்புவது, நீங்கள் எல்லோரும் குடும்பத்துடன் சென்று, இந்த அருங்காட்சியகங்களை பார்க்க வேண்டும்! பார்ப்பீர்களா? பார்த்தே தீரவேண்டும்.
ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் நிதி என்ன ஆனது?
இந்த நேரத்தில், மற்றொரு விஷயத்தை நான் குறிப்பிட்டாக வேண்டும். கடந்த 2021-ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைப்பதற்கு அறிவிப்பு வந்தது. அந்தப் பணிகள் இப்போது எந்த நிலையில் இருக்கிறது? இன்னும் அதற்கான பணிகள் எதுவும் தொடங்கவில்லை. ஆனால், நாம் ஆட்சிக்குப் பொறுப்பிற்கு வந்த பிறகு தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், சிவகளை உள்ளிட்ட அகழாய்வுகளை மேற்கொண்டு இப்போது உலகமே திரும்பிப் பார்க்கக்கூடிய அளவிற்கு பொருநை அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கிறோம்.
மோடி, நிர்மலா சீதாராமன் பார்வையிட வேண்டும்
அதனால், இந்த நேரத்தில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை தமிழ்நாட்டில் கட்டியிருக்கக்கூடிய கீழடி அருங்காட்சியகத்திற்கு வந்து பார்க்கவேண்டும். இந்த கூட்டத்தின் மூலமாக, இந்த விழாவின் மூலமாக நான் அன்போடு அவர்களை அழைக்கிறேன். நீங்கள் வந்து பார்த்தால்தான் தமிழினுடைய நாகரிகம் எந்த அளவுக்கு தொன்மை கொண்டிருக்கிறது என்பது தெரியும்.
இதை மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கக்கூடிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு , கட்டி எழுப்பியுள்ள அமைச்சர் எ.வ.வேலு அரசு அலுவலர் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களை, வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தங்கம் தென்னரசு- உதயச்சந்திரன்
அமைச்சர் தங்கம் தென்னரசு – தமிழ் ஆர்வலர்! தொல்லியல் ஆய்வாளர்! இயற்கையின் காதலர்! என்று பன்முகம் கொண்டவர் அவர்! இப்படி, தமிழ் மீதும், தொல்லியல் துறையிலும், தனிப்பட்ட ஆர்வம் கொண்ட ஒருவர் இந்த துறைக்கு அமைச்சராக இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!
அதேபோல், தொல்லியல் துறை செயலாளராக இருக்கக்கூடிய நிதித்துறைச் செயலாளர் உதயச்சந்திரனும் தொல்லியல் ஆய்வாளர்தான். தமிழ்நாட்டின் தனிப்பெருமையை உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில், உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற அக்கறை கொண்டவர் உதயச்சந்திரன் அவர்கள்.
இப்படிப்பட்ட இரண்டு பேரும் சேர்ந்து ஏற்கனவே கீழடி அருங்காட்சியத்தை உருவாக்கி, பார்வையாளர்களிடம் அது மிகவும் ஹிட்டாகியிருக்கிறது! இப்போது, பொருநை அருங்காட்சியகத்தையும் உருவாக்கி தமிழ்ச் சமுதாயத்திற்கு ஒரு மாபெரும் வரலாற்றுக் கடமையை ஆற்றி இருக்கிறார்கள்.
கட்சியின் அரசு அல்ல- இனத்தின் அரசு
நம்முடைய திராவிட மாடல் அரசு என்பது ஒரு கட்சியின் அரசு அல்ல; இனத்தின் அரசு என்று நான் தொடர்ந்து சொல்கிறேன். அதற்கான பெருமைமிகு சாட்சிதான், கீழடியும், இங்கு அமைந்திருக்கும் பொருநை அருங்காட்சியகமும்! வெளியில் நம்மை எதிர்க்கக்கூடியவர்கள், விமர்சனம் செய்யக் கூடியவர்கள், “தமிழ் என்றாலே தி.மு.க-தான்; வேறு யாராலும் இதையெல்லாம் யோசிக்கக் கூட முடியாது” என்று மனதிற்குள் நிச்சயம் பாராட்டிக் கொண்டிருப்பார்கள்!
அதுமட்டுமா! இன்றைய தினம் 235 கோடியே 94 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 33 முடிவுற்ற பணிகளை நெல்லை மாவட்ட மக்களுக்காக நான் திறந்து வைத்திருக்கிறேன்! அதில், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், நெல்லை பன்னோக்கு மருத்துவமனையில், இதயம், நரம்பு, சீறுநீரகம், கல்லீரல் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்க தேவையான அனைத்து நவீன கட்டமைப்புகளையும் கொண்ட மருத்துவமனை கட்டடம் முக்கியமாக இருக்கிறது!
நெல்லையில் ரூ100 கோடியில் காயிதே மில்லத் நூலகம்
தமிழ்ப் பெருமைக்கு பொருநை மியூசியம்! மக்கள் உயிர்காக்க மருத்துவமனை! “அப்போது நெல்லை மக்களுக்கு அறிவுப் பசிக்கு என்ன?” என்று கேட்கிறீர்களா!
சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம்
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்
கோவையில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம்
திருச்சியில் பெருந்தலைவர் காமராசர் நூலகம் எனும் வரிசையில்,
நம்முடைய நெல்லையில கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் பெயரில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரமாண்ட நூலகம் அமைய இருக்கிறது. அதற்கான அடிக்கலை இன்றைக்கு நாட்டியிருக்கிறேன்.
நெல்லையின் அடையாளமாக நெல்லையப்பர் கோயில், திருவள்ளுவர் இரட்டைப் பாலம், தாமிரபரணி – இந்த வரிசையில் இனி, பொருநை அருங்காட்சியகமும், மாபெரும் அறிவுத் திருக்கோயிலாக அமையப் போகின்ற காயேதே மில்லத் நூலகமும் இருக்கும்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
